banana leaf feast 
ஆரோக்கியம்

வயிற்றுக்குள் 'கடமுட' ஓசை அடிக்கடி கேட்கிறதா? வாழை இலையில் உணவு உண்பது உதவுமே!

முனைவர் என். பத்ரி

திருமணம், வீட்டு விசேஷங்களில் மட்டுமே வாழை இலையில் உணவு பரிமாறப்படுவதைப் பார்க்க முடிகிறது. சில இடங்களில் வாழையிலைகள் ஓரங்கட்டப்பட்டு, தீமை விளைவிக்கும் நெகிழித் தட்டுகளும் காகிதங்களும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டன. ஆனால், வாழை இலையின் மகத்துவத்தைப் பன்னெடுங்காலம் முன்பே உணர்ந்து, உடல் ஆரோக்கியம் காக்க அதை எல்லா வேளையிலும் பயன்படுத்திய பண்பாடு நம்முடையது. 

வாழை இலையில் சாப்பிடத் தொடங்கிவிட்டால் போதும், தேகம் பளபளப்படையும். வாழை இலையில் உணவருந்துவதால், உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்பட்டு உடல் தூய்மையடையும்.

உடலில் பித்தத்தின் அளவை குறைக்கவும், உயர் ரத்தஅழுத்தம், தலைவலி, வயிற்றுப் புண், சரும நோய்களின் தீவிரம் குறையவும் வாழை இலையில் உணவருந்தலாம். வாழை இலைக்குக் குளிர்ச்சியுண்டாக்கும் தன்மை இருப்பதால், பித்தம் சார்ந்த நோய்கள் அனைத்தும் சாந்தப்படும். நோய்களைத் தவிர்க்க ஆசைப்படுபவர்களுக்கு `வாழை இலை உணவு’ அற்புதமான தேர்வு.

உண்ட உணவு செரிக்காமல் வயிற்றுக்குள் ஏற்படும் `கடமுட’ ஓசையை அடிக்கடி கேட்பவர்களும், சிறிதளவு சாப்பிட்டாலும் வயிறு உப்பிக்கொண்டு அவதிப்படுபவர்களும் வாழை இலையில் சாப்பிட்டுவந்தால் நல்ல செரிமானம் உண்டாகிப் பிரச்சினைகள் மறையும். மந்தத்தைப் போக்கும் குணம், வாழை இலைக்கு உண்டு.

சூடான உணவு வகைகளை வாழை இலையில் வைத்துச் சாப்பிடும்போது, அதில் உண்டாகும் அற்புதமான இயற்கை மணமே பசி உணர்வைத் தூண்டிச் செரிமானச் சக்தியை அதிகரிக்கும். உணவின் மணத்துக்கும் பசி உணர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

நம்முடைய முதன்மை உணவான சோறும், மரக்கறி உணவு வகைகளையும் தாராளமாக வைத்துச் சாப்பிட வாழை இலையைத் தவிரச் சிறந்த உண்கலம் வேறு இல்லை. உணவு செரிமானத்துக்குத் தேவையான துணைப்பொருட்கள் அனைத்தும் வாழை இலையில் உண்டு. அதன் மற்ற உறுப்புகளான வாழைப் பூ, தண்டு, காய், பழம் ஆகியவற்றையும் சாப்பிட்டுவந்தால், பல்வேறு உடல் உபாதைகளிலிருந்து விடுதலை பெறலாம்.

எந்தெந்த உணவுப் பொருட்களில் ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்ஸ் கொட்டிக் கிடக்கிறது எனத் தேடுவதற்குப் பதிலாக, விரும்பும் உணவு வகைகளை வாழை இலையில் வைத்துச் சாப்பிட்டால், தேவைக்கு அதிகமாகவே ஆன்ட்டிஆக்ஸிடண்ட் கிடைக்கும். உடல் செல்களின் அழிவைத் தடுக்கக்கூடியதும், நோய்கள் வராமல் பாதுகாக்கக்கூடியதுமான சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்டுகள் வாழை இலையில் பொதிந்திருக்கின்றன.

உணவுப் பொருட்களின் சுவை தெரியாமல் திண்டாடும் `சுவையின்மை’ நோயாளிகளும் உடல் பலவீனமானவர்களும் வாழை இலையில் தொடர்ந்து புசித்துவந்தால், அறுசுவையையும் உணர்ந்து உடல் பலமடையும், விந்தணுக்களும் பெருகும்.

அதேபோலச் சம்மணமிட்டு வாழை இலையில் உணவருந்தும்போது, வயிற்றுப் பகுதிக்கும் நல்ல பயிற்சி கிடைக்கிறது. சிறுவயதிலேயே வாழை இலையில் சாப்பிடும் பழக்கத்தைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்தால் செரிமானம் சார்ந்த நோய்களைத் தடுக்கலாம், பசி உணர்வும் அதிகரிக்கும்.

பசுமையான வாழை இலையில் வெதுவெதுப்பான சோறு, கமகமக்கும் குழம்பு, காய்கறி, கீரைகள், ரசம், மோர் ஆகியவற்றை நம் மரபு முறைப்படி சாப்பிடும்போது, ஆரோக்கியத்துக்கு எந்தக் குறைவும் வராது.

தமிழர்கள் முக்கியமாக விருந்தோம்பல் உணவினை வாழை இலை கொண்டு தான் பரிமாறுவர். அவ்வாறு பரிமாறும் போது ஒரு சீரான உணவு பரிமாறும் முறையை கடைபிடிக்கின்றனர். வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள  நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.

வாழையிலைச் சூட்டுக்குத் ஒரு பிரத்யேக சுவையும் மணமும் உண்டு. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது.

மேற்கத்தியக் கலாச்சார மோகத்தால் பஃபே முறையில் நின்றுகொண்டே சாப்பிடப் பழகிவிட்ட நாம், இனிமேலாவது பொறுமையுடன் அமர்ந்து வாழை இலையில் சாப்பிடுவது நல்லது! இந்த மாற்றம் நம் உடல் நலத்துக்கு அவசியம் தேவை.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT