கடந்த எல்லா ஆண்டுகளையும் விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என சொல்லப்படுகிறது. பொதுவாகவே கோடைகாலங்களில் அதிகப்படியான வெப்பம் நம்மை வாட்டி வதைக்கும். இது பல்வேறு விதமான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் நாம் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக வெயிலின் தாக்கத்திலிருந்து கண்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். இந்தப் பதிவில் கோடைகால வெயிலின் தாக்கத்திலிருந்து கண்களைப் பாதுகாப்பதற்கான வழிகளைப் பற்றி பார்க்கலாம்.
சன் கிளாஸ்: தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களில் இருந்து உங்கள் கண்களைப் பாதுகாக்க சன் கிளாஸ் பயன்படுத்துங்கள். புற ஊதாக் கதிர்களை போதுமான அளவு தடுக்கும் 100% UV பாதுகாப்பை வழங்கும் சன் கிளாஸ்களைத் தேர்வு செய்யுங்கள். சன் கிளாஸ்கள் உங்களுக்கு ஸ்டைலான லுக்கைக் கொடுப்பது மட்டுமின்றி, சூரியனின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளில் இருந்து உங்கள் கண்களைப் பாதுகாக்கும் ஒரு முக்கிய கருவியாகும்.
தொப்பிகள்: உங்கள் கண்களுக்கு கூடுதல் நிழலையும் பாதுகாப்பையும் வழங்க பெரிய விளிம்பு கொண்ட தொப்பியைப் பயன்படுத்துங்கள். இது உங்கள் கண்களை நேரடி சூரிய ஒளியில் இருந்து பாதுகாத்து மற்றும் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தையும் பாதுகாக்கிறது. எனவே வெளியே செல்லும்போது சன் கிளாஸ் மற்றும் தொப்பியை கட்டாயம் அணியுங்கள்.
நீரேற்றத்துடன் இருங்கள்: கண் ஆரோக்கியம் உட்பட ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நாம் நீரேற்றத்துடன் இருக்க வேண்டியது அவசியம். நீரிழப்பு, கண்கள் வறண்டு போக வழி வகுக்கும். இதனால் கண்களில் எரிச்சல் மற்றும் அசௌகரிகம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக வெப்பமான மற்றும் வறண்ட கோடை காலங்களில் இந்த பாதிப்பு அதிகம் ஏற்படலாம். எனவே உங்கள் உடலையும் கண்களையும் நீரேற்றமாக வைத்திருக்க நாள் முழுவதும் போதிய அளவு தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
திரை நேரத்தை கட்டுப்படுத்தவும்: கோடை காலம் என்பது ஓய்வெடுக்கும் காலமாகும். இச்சமயத்தில் இணையத்தில் உலாவுதல், வீடியோ கேம்கள் விளையாடுதல் அல்லது உங்களுக்குப் பிடித்தமான நிகழ்சிகளைப் பார்ப்பது போன்றவற்றில் அதிகமாக ஈடுபடுவீர்கள். ஆனால் நீண்ட நேரம் திரையை பார்ப்பது உங்கள் கண்களை கஷ்டப்படுத்தி கண் சோர்வு, வறட்சி மற்றும் பார்வை மங்கல் போன்ற பாதிப்புகளை உண்டாக்கும். எனவே தொடர்ச்சியாக அதிக நேரம் திரையைப் பார்க்காமல், குறைந்தது அரை மணி நேரத்திற்கு ஒருமுறை கொஞ்சம் ஓய்வெடுத்து திரை நேரத்தை கட்டுப்படுத்துங்கள்.
அலர்ஜியில் கவனம் தேவை: கோடைகால ஒவ்வாமைகள், அரிப்பு, கண் சிவந்து போதல் மற்றும் கண்களில் நீர் வடிதல் உள்ளிட்டவற்றைத் தூண்டிவிடும். எனவே ஒவ்வாமை ஏற்படுத்தும் விஷயங்கள் வீட்டில் நுழைவதைத் தடுக்க கதவு ஜன்னல்களை மூடி வைக்கவும். உங்களுக்கு ஒவ்வாமை பிரச்சினை ஏற்பட்டால் கண் சொட்டு மருந்துகளை பயன்படுத்தவும் அல்லது கண் டாக்டரை உடனடியாக அணுகவும். இதுபோன்ற தருணங்களில் கண்களை தேய்ப்பதைத் தவிர்க்கவும். ஏனெனில், அது எரிச்சலை அதிகப்படுத்தி கண் தொற்றுக்கு வழிவகுக்கும்.