மழைக்காலம் தொடங்கி விட்டது. அடுத்து குளிர் காலமும் வரப்போகிறது. இந்த சீசனில் நாம் அனைவரும் குளியலுக்கு வெந்நீரையே அதிகமாகப் பயன்படுத்துவோம். வெந்நீரை தனியாக உபயோகிக்காமல் அதில் யூகலிப்டஸ் இலைகளை அல்லது எண்ணையை சேர்த்து குளிக்க, பல்வேறு உடல் உபாதைகளுக்கு குட்பை சொல்லி விடலாம்.
வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை வெந்நீர் குளியல் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் அதிகரிப்பால் நோய் எதிர்ப்புச் சக்தி மேம்படும்.
உடலின் காயங்கள், சரும நோய்கள், தொற்று, அழற்சி, படுக்கையிலேயே இருப்பதால் ஏற்படும் புண் (Bed sores), கால்களில் இரத்த ஓட்டம் சீராக இல்லாததால் ஏற்படும் புண் (cold sores) போன்றவை விரைவில் ஆற தேவையான எதிர்ப்புச் சக்தியை இதுபோன்ற குளியல் கொடுக்கும்.
நெஞ்சில் கபம் சேருதல், மார்புச்சளி, சுவாசத்தில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் போன்றவற்றை யூகலிப்டஸ் வெந்நீர் குளியல் அகற்றுகிறது.
குழந்தைகளுக்கு சளி பிடித்திருக்கும்போது இதுபோன்ற யூகலிப்டஸ் வெந்நீர் குளியல் அல்லது அந்த தண்ணீரில் டவலை நனைத்து பிழிந்து உடலை சுத்தம் செய்து விட, நல்ல தூக்கம் குழந்தைகளுக்குக் கிடைக்கும்.
நல்ல நறுமணம் தரும் இந்தக் குளியல் பெரியவர்களுக்கும் புத்துணர்ச்சியைத் தரும். சளித் தொல்லைகள் இருக்காது.
பெரியவர்கள் மழையில் நனைவதால் ஏற்படும் தலைபாரம், தலைவலிக்கு இந்த யூகலிப்டஸ் வெந்நீர் குளியல் நல்ல தீர்வாக இருக்கும். காய்ச்சலைப் போக்கவும், உடல் வெப்பத்தைக் குறைக்கவும் இந்தக் குளியல் உதவுகிறது. யூகலிப்டஸ் எண்ணெய் சேர்த்து குழந்தைகளுக்கு வெளிப்புற உபயோகமாக மசாஜ் செய்து குளிக்க வைக்க குழந்தையின் வளர்ச்சி சீராக நன்றாக இருக்கும்.