சளி பிடித்தால் பொதுவாகவே பழங்கள் மற்றும் இனிப்பான பொருட்களை சாப்பிடக்கூடாது என சொல்வார்கள். குறிப்பாக பழங்கள் சாப்பிட்டால் சளியின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என சொல்லப்படுவதுண்டு. ஆனால் சில பழங்கள் சளியை சரி செய்யும் என்றால் நம்புவீர்களா? அத்தகைய பழங்கள் என்னென்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பழங்களில் உடலுக்குத் தேவையான மினரல்களும், விட்டமின்களும் நிறைந்துள்ளன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ஆனால் உங்களுக்கு சளித் தொந்தரவு இருந்தால், எல்லா விதமான பழங்களையும் சாப்பிடக்கூடாது, கீழே நான் சொல்லப்போகும் 6 பழங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
1. சிட்ரஸ் பழங்கள்: நமக்கு சளி பிடித்திருந்தால் நாம் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழங்களில் முக்கியமானது விட்டமின் சி அதிகம் நிறைந்த லெமன், ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள். இதில் இருக்கும் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் விட்டமின் சி, நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளியை விரட்டும்.
2. தர்பூசணி: தர்பூசணி பழத்தில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் பண்புகள் அதிக அளவில் உள்ளது. இதில் உள்ள நீர்ச்சத்து மற்றும் லைகோபின், சளி பிடிப்பதைத் தடுத்து நோய்த் தொற்றுக்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.
3. அன்னாசிப்பழம்: அன்னாசிப் பழத்திலும் அதிக அளவில் விட்டமின் சி மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளது. இதில் இருக்கும் ஃபிளாவனாய்டுகள் சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளும். ஆனால் அன்னாசி பழத்தை நீரிழிவு நோயாளிகள் குறைந்த அளவிலேயே எடுத்துக் கொள்வது நல்லது.
4. மாதுளை: மாதுளை என்றாலே அது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக இது நமது ரத்தத்தை சுத்திகரிக்கக்கூடிய பழமாகும். உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்து நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதிலும் விட்டமின் சி இருப்பதால் நமக்கு சளி பிடிக்காமல் தடுக்கும். பருவ கால நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் தன்மை மாதுளைக்கு உண்டு.
5. பேரிச்சம்பழம்: பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து, மினரல்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகமாக உள்ளது. இதை சாப்பிடுவதால் நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி கரைந்து வெளியேறுகிறது.
6. ஆப்பிள்: ஆப்பிளில் இருக்கும் சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டவை. மேலும் இவை புற்றுநோயை எதிர்த்து போராடும் பண்புகளையும் கொண்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆப்பிள்களை சாப்பிடுவதால், சளி பிடிக்காமலும் பார்த்துக் கொள்ளலாம், அதேநேரம் சளித் தொந்தரவு இருந்தாலும் இதை சாப்பிட்டால் குணமாகும்.