Exercise for sleep 
ஆரோக்கியம்

இரவில் தூக்கம் வரவில்லையா? இந்த உடற்பயிற்சிகளை ட்ரை பண்ணிப் பாருங்களேன்! 

கிரி கணபதி

தொழில்நுட்ப வளர்ச்சி, அதிகரிக்கும் மன அழுத்தம் மற்றும் ஒழுங்கற்ற தூக்க சுழற்சி போன்றவை தூக்கமின்மைக்கு பொதுவான காரணங்களாக அமைகின்றன. தூக்கமின்மையால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, நாள் முழுவதும் செயல்திறன் பாதிக்கப்படுகிறது. இந்த நிலையிலிருந்து விடுபட பலர் தூக்க மாத்திரைகள் மற்றும் மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர்.‌ ஆனால், இயற்கையான வழிகளில் தூக்கத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்பது பலருக்குத் தெரிவதில்லை. உடற்பயிற்சி என்பது தூக்கத்தை மேம்படுத்தும் ஒரு அற்புதமான வழி. இந்தப் பதிவில் இரவில் விரைவாக தூங்க உதவும் உடற்பயிற்சிகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.‌ 

உடற்பயிற்சிக்கும் தூக்கத்திற்கும் உள்ள தொடர்பு: 

பொதுவாக உடற்பயிற்சி செய்வது நல்ல தூக்கத்திற்கு உதவும் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், எந்த வகையான உடற்பயிற்சி எப்போது செய்ய வேண்டும் என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கும். தீவிரமான உடற்பயிற்சி, தூக்கத்தை பாதிக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். உண்மை என்னவென்றால், சில வகையான உடற்பயிற்சிகள் தூக்கத்தை மேம்படுத்தும். 

உடற்பயிற்சி செய்வதால், உடல் வெப்பநிலை உயர்கிறது. பின்னர், உடல் வெப்பநிலை குறையத் தொடங்கும்போது தூக்கம் தூண்டப்படும். மேலும், உடற்பயிற்சி செய்வது மன அழுத்த ஹார்மோன்களான கார்ட்டிசோலைக் குறைத்து, மகிழ்ச்சி ஹார்மோனான செரட்டோனினை உற்பத்தி செய்கிறது. இது மனதை அமைதிப்படுத்தி நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது. உடற்பயிற்சி செய்வதால் தசைகள் தளர்ந்து உடல் சோர்வாக இருக்கும். இதனால் விரைவில் தூக்கம் ஏற்படும். 

இரவில் விரைவாகத் தூங்க உதவும் உடற்பயிற்சிகள்: 

  • யோகா என்பது உடல் மற்றும் மனதை ஒருங்கிணைக்கும் ஒரு பாரம்பரிய இந்திய உடற்பயிற்சி ஆகும். யோகாவில் செய்யப்படும் ஆசனங்கள் மற்றும் பிராணாயமும் உடலை தளர்ச்சியடையச் செய்து, மனதை அமைதிப்படுத்தி, நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது.

  • தியானம் செய்வது மனதை ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் குவித்து மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இது தூக்கத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த வழியாகும். 

  • வேகமாக நடப்பது, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற லேசான ஏரோபிக் பயிற்சிகள் உடல் செயல்பாட்டை அதிகரித்து தூக்கத்தை மேம்படுத்தும். 

  • தூங்குவதற்கு முன் கை கால்களை நீட்டி ஸ்ட்ரெச்சிங் செய்வது தூக்கம் ஏற்பட உதவும். 

  • Tai Chi என்பது லேசான இயக்கங்களைக் கொண்ட ஒரு சீன மார்ஷியல் ஆர்ட்ஸ். இது உடலை தளர்ச்சியடையச் செய்து மனதை அமைதிப்படுத்தி நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது. 

நல்ல தூக்கம் கிடைக்க இரவு உணவுக்கு 3-4 மணி நேரத்திற்கு முன்பு உடற்பயிற்சி செய்வது நல்லது. இது உடலுக்கு போதுமான நேரத்தை கொடுத்து தூக்கத்தின் போது உடல் செயல்பாடு குறைய உதவும். குறிப்பாக, அதிதீவிரமான உடற்பயிற்சிகளைத் தவிர்த்து லேசானது முதல் மிதமான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். 

நீங்க எல்லாரும் புரதத்தை தவறான நேரத்தில் சாப்பிடுறீங்க! 

முத்தான 10 பயனுள்ள சமையல் டிப்ஸ்!

அதிக நேரம் உடற்பயிற்சி செய்தவர் மரணம்: ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

ஹேண்ட்பேக் வாங்க போறீங்களா? அப்ப இதை கவனிங்க..!

ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தைப் பிடித்த இந்தியா!

SCROLL FOR NEXT