Foods that promote health https://www.youtube.com
ஆரோக்கியம்

எந்த உணவுடன் எதை சேர்த்தால் ஆரோக்கியம் பெருகும் தெரியுமா?

ஜெயகாந்தி மகாதேவன்

நாம் உண்ணும் உணவு சுகாதாரமானதாகவும் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருந்தாலும், எந்த உணவுடன் எதைச் சேர்த்து சாப்பிட வேண்டும், எதனுடன் எதைச் சேர்த்து உண்ணலாகாது என்று சில வரைமுறைகள் ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. அதன்படி மீன் உணவுகளை பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களுடன் உண்பது, சாப்பிட்டவுடன் பழங்களை உண்பது, தயிருடன் முட்டை அல்லது பீன்ஸ்  சாப்பிடுவது, கொழுப்பு நிறைந்த உணவுகளுடன் புரோட்டீன் சத்து அதிகமுள்ள உணவை சேர்த்து உண்பதெல்லாம் உடல் நலக் கோளாறுகளை உண்டுபண்ணக்கூடியவைகளாக கணிக்கப்பட்டுள்ளன.

ஊட்டச்சத்து நிபுணர் அபூர்வா அகர்வாலின் பரிந்துரையின்படி இரண்டு வகை உணவுகளை சேர்த்து உண்ணும்போது ஒன்றிலுள்ள ஊட்டச்சத்தானது மற்றொன்றின் சத்துக்களை மேம்படுத்தவும், அவற்றை உடலுக்குள் முழுமையாக உறிஞ்சவும் உதவுமானால் அவை இரண்டையும் சேர்த்து உண்பது அதிக நன்மை தரும் என்பதாகும். அவ்வாறான கூட்டணி உருவாக எந்தெந்த உணவுகளை தேர்ந்தெடுக்கலாம் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

சான்ட்விச், சாலட் மற்றும் பீட்ஸா போன்றவற்றை தயாரிக்கும்போது தக்காளியையும் அவகோடாவையும் சேர்த்து செய்வது அதிக நன்மை தரும். அவகோடாவிலுள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பானது, தக்காளியிலுள்ள கேன்சரை எதிர்த்துப் போராடக்கூடிய லைக்கோபீன் என்ற பொருளின் சக்தியை நான்கு மடங்கு அதிகரிக்கச் செய்கிறது.

ஆப்பிளையும் டார்க் சாக்லேட்களையும்  சேர்த்து பல ரெசிபிகளை செய்து அசத்தலாம். தேங்காய் எண்ணையில் டார்க் சாக்லேட்களை கரைத்து வரும் கலவையில் நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை முக்கி எடுத்து பேக் (bake) செய்தால் சுவையான ஸ்நாக்ஸ் கிடைக்கும். இதயத்துக்கு பாதுகாப்பளிக்கும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் ஆப்பிளில் உள்ளது. டார்க் சாக்லேட்டில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை இரண்டும் சேர்ந்து இரத்த நாளங்களில் ஏற்படும் இரத்த உறைவைத் தடுக்கும். இதனால் இரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவும். இதய நோய் வராமல் தடுத்து நிறுத்தும்.

க்ரீன் டீயில் லெமன் ஜூஸ் கலந்து அருந்துவது உடலுக்கு அதிக நன்மை தரும். லெமன் ஜூஸ், க்ரீன் டீயில் உள்ள சக்தியளிக்கும் பொருளான கேட்டச்சினை (catechin) முழுவதுமாக உடல் உறிஞ்சி கொள்வதற்கு உதவி புரிகிறது.

வேகவைத்த கொண்டைக்கடலை மற்றும் பீட்ரூட் சேர்த்து சாலட் அல்லது சூப் செய்து சாப்பிடும்போது அவற்றிலிருந்து கிடைக்கும் பயன்கள் பல மடங்கு பெருகும். கொண்டைக்கடலையில் உள்ள வைட்டமின் B6, பீட்ரூட்டில் நிறைந்துள்ள மக்னீசியம் என்ற சத்தை முழுவதுமாக உடல் உறிஞ்சி கொள்ள உதவுகிறது.

இவ்வாறு நன்மை தருவதில் ஒன்றிற்கொன்று துணையாயிருக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து, சேர்த்து உட்கொண்டு நற்பலன் பெறுவோம்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT