பொதுவாகவே, கிழங்கு வகைகள் அனைத்தும் மிகவும் சத்தானவை. அதிலும் சர்க்கரை வள்ளிக் கிழங்கில் அதிக வைட்டமின், நார்ச்சத்து இருப்பதால் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும், செரிமான பிரச்னையை சீராக்கும். சர்க்கரை வள்ளிக் கிழங்கு வேகவைத்து சாப்பிட்டாலே மிகவும் சுவையாக இருக்கும். அப்படிப் பிடிக்காதவர்கள் அதை கேக்காக செய்து கூட சாப்பிடலாம்.
பச்சை கொண்டைக் கடலை உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு பட்டியலில் முக்கியப் பங்கு வகிக்கும். இதில் புரோட்டீன் சத்து அதிகமாக இருப்பதால் உங்கள் தசை மற்றும் நார்சதையை வலுவாக்கும். பொதுவாக, தமிழ்நாட்டில் கருப்பு, வெள்ளை கொண்டைக்கடலையே அதிகமாகப் பார்த்திருப்போம். ஆனால், பச்சை கொண்டைக்கடலை ஒரு மிகச் சிறந்த உணவாகும்.
கம்பு நமது பாரம்பரிய உணவாகும். நமது தாத்தா பாட்டி காலத்தில் கூட தினம் கம்பங்கூழ் சாப்பிடுவார்கள். அதனால்தான் அவர்களால் இன்று வரை அயராது உழைக்க முடிகிறது. கம்பில் அதிக நார்ச்சத்தும், நம் உடலுக்குத் தேவையான தாதுக்கள் இருப்பதாலும் அது உடல் நலத்துக்கு மிகவும் நல்லதாகும்.
எளிதாகக் கிடைக்கக்கூடிய ஒரு பொருள்தான் எள். இதை நாம் பொடியாக அரைத்தும் சாப்பிடலாம் அல்லது இட்லி பொடியுடன் சேர்த்து அரைத்தும் சாப்பிடலாம் அல்லது வெறும் வாயிலேயே மென்றும் சாப்பிடலாம். முடியாதவர்கள் இதில் லட்டு செய்து கூட சாப்பிடலாம். எள்ளில் அதிக நன்மை உண்டு. கால்சியம் சத்து இதில் அதிகம் இருப்பதால் இது உங்கள் எலும்புகளை வலுவாக வைத்திருக்கும்.