‘ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கலாம்’ எனக் கேட்டால், நான்கு அல்லது ஐந்து முறை கழிக்கலாம். இரவு தூங்கும்போது நடுவில் ஒரு முறை எழுந்து சிறுநீர் கழிப்பதில் தவறு ஏதும் இல்லை. குறிப்பிட்ட இடைவெளியில் சிறுநீர் கழிப்பதுதான் ஆரோக்கியமான செயல். பொதுவாக, ஆண்களின் சிறுநீர்ப்பை 300 மில்லி சிறுநீரை தேக்கி வைக்கும். பெண்களின் சிறுநீர்ப்பை 400 மில்லி சிறுநீரைத் தேக்கி வைக்கும்.
கால நிலைக்கு ஏற்றாற்போல், நாம் இருக்கும் இடத்திற்கு ஏற்றாற்போல் சிறுநீர் கழிக்கும் தன்மை மாறுபடும். ஏசி அறையில் அதிக நேரம் பணிபுரிபவர்களுக்கு அதிக தாகம் எடுக்காது. அதனால் சிறுநீர் கழிக்கும் உணர்வும் அதிகம் ஏற்படாது. அதேபோல், ஏசி அறையில் பணிபுரிபவர்கள் தாகம் எடுக்கவில்லை என்றாலும் குறிப்பிட்ட இடைவெளியில் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
சிலருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் போல் தோன்றும். இதுவும் ஆரோக்கியமானதல்ல. இதற்கு மருத்துவரின் ஆலோசனை அவசியம். சிறுநீர் வெளியேறும் போது அதன் நிறத்தையும் கவனிக்க வேண்டும். சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் போன்ற நிறங்களில் சிறுநீர் வெளியேறினால் ஒன்று நாம் எடுத்துக்கொள்ளும் ஏதேனும் மாத்திரையின் காரணமாக இருக்கலாம். இல்லையென்றால் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசித்து அவர் கூறும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
பொதுவாக, மஞ்சள் நிறத்தில் சிறுநீர் போகிறது என்றால் குடிக்கிற தண்ணீர் போதவில்லை என்று அர்த்தம். உடனடியாக குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி, சிறுநீர் முழுமையாக வெளியேறவில்லையோ என்ற எண்ணம் இருந்தால் சிறுநீரக மருத்துவரைப் பார்த்து ஆலோசிப்பது நல்லது.
சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும். அத்துடன் வெளியேறும் சிறுநீரின் அளவும் அதிகமாக இருக்கும். இவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று தேவையான மருந்துகளை எடுத்துக்கொள்வது அவசியம். எனவே, நாம் ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கிறோம் என்பதை கவனிப்பதுடன், எந்த நிறத்தில் சிறுநீர் வெளியேறுகிறது என்பதையும் கவனிப்பது அவசியம். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டால், அதற்கான காரணம் என்ன என்பதை அறிய மருத்துவரை கலந்தாலோசிப்பது அவசியம்.
கோடைக்காலத்தில் அதிக உடல் உஷ்ணம் காரணமாக நீர் சுருக்கு, நீர்க்கடுப்பு ஏற்படும். இதற்கு நிறைய தண்ணீர் பருகுவதுடன் இளநீர், பழச்சாறுகள் எடுத்துக் கொள்வது நல்லது. சிலருக்கு சிறுநீர் தொற்று காரணமாக சிறுநீர் கழிக்கும்போது அடிவயிற்று வலி, சிறுநீர் வெளியேறும்போது எரிச்சல், அரிப்பு ஆகியவை உண்டாகும். இதற்கும் மருத்துவ சிகிச்சை தேவைப்படும். ஆண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு புரோஸ்டேட் பிரச்னைகள், சிறுநீர் பாதை நோய் தொற்று, நீரிழிவு நோய் என பல காரணங்கள் இருக்கலாம்.
சிறுநீரகப் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம்:
1. மாதுளை பழத்தின் தோலை எடுத்து நன்கு அலம்பி விழுதாக அரைத்து இரண்டு ஸ்பூன் அளவு தண்ணீரில் கரைத்துப் பருக அடிக்கடி சிறுநீர் கழிப்பதை நிறுத்துவதற்கு உதவும்.
2. வெந்தயப் பொடியை தினம் காலை வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் அளவு தண்ணீர் கலந்து பருக நல்ல பலன் கிடைக்கும்.
3. பெரிய நெல்லிக்காயின் சாற்றை சிறிதளவு தேன் கலந்து பருக அடிக்கடி சிறுநீர் கழிப்பதை கட்டுப்படுத்த உதவும்.
4. சிலருக்கு சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறும். சிறுநீர் நன்றாக வெளியேறாதது போல் தோன்றினால் சிறுநீரை நன்கு வெளியேற்ற உதவும் வாழைத்தண்டு, முள்ளங்கி, பார்லி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.