Happy New Year https://dheivegam.com
ஆரோக்கியம்

ஹேப்பி நியூ இயர்!

ரேவதி பாலு

வெளியே: லீலா தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

"ஏன் இப்படி உட்கார்ந்திண்டிருக்கே? ஷுகர் ஜாஸ்தியானாலே தலை சுத்தும்.  இப்போ பிபி வேற ஜாஸ்தியா இருக்குன்னு டாக்டர் சொல்றார்! இந்தா இந்த காப்பியை குடிச்சிட்டு  பேசாம படுத்துக்கோ" என்றார் பரிவுடன் நாராயணன்.

லீலா படுத்துக்கொண்டு கண்களை மூடிக் கொண்டாள்.

உள்ளே: "என்ன இது இவ்வளவு இருட்டா இருக்கு?" உரக்கப் பேசிக்கொண்டே உப்பிலி வந்தான்.

"ஆஹா, நீங்களா? பத்து வருஷத்துக்கு முன்னே தலையைக் காட்டிவிட்டுப் போனதோட சரி. அப்போ ரெண்டு பேரும் எப்படி உச்சத்தில இருந்தோம்! அப்புறம் இவ்வளவு வருஷமா நா மட்டும் தனியா ஒரு துணைக்கு ஏங்கிக்கிட்டிருந்தேன்.  இன்னிக்குதான் உங்களுக்கு என் நெனைப்பு வந்ததா?" மதுரம் ஓடிப்போய் உப்பிலியை அணைத்துக் கொண்டாள்.

ஒரு பொந்துக்குள் இருந்து சின்னக்குழந்தை ஒன்று தலையை மட்டும் எட்டிப் பார்த்தது.

"வா, வா! வெற்றி! நீயும் எங்களோட சேர்ந்துக்கோ!" என்றாள் மதுரம் உற்சாகமாக.

"நாம்ப முழு வீச்சில இயங்கலாம்னு நெனச்சாலே எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?" என்றாள் மதுரம்.

"ஆமாம்! நியூ இயர் வேற வரப்போகுது. நாம்ப 'ஹேப்பி நியூ இயர்'னு ஆடிப் பாடலாமா?" என்றது வெற்றி உற்சாகத்துடன்.

மூன்றும் கை கோர்த்துக் கொண்டு 'ஹேப்பி இன்று முதல் ஹேப்பி! ஹேப்பி நியூ இயர்!" என்று உற்சாகமாக குதித்து குதித்து ஆடத் தொடங்கின.

வெளியே: லீலா தலையை இறுகப் பிடித்துக் கொண்டே, "கொஞ்சம் இங்கே வாங்களேன்! தலை சுக்கு நூறா வெடிச்சுடும் போல, ‘விண் விண்’னு தெறிக்கிறது!" என்றாள்.

நாராயணன் அவள் அருகில் வந்து உட்கார்ந்து தலையை இதமாகப் பிடித்து விட்டார்.

"டாக்டர் கொடுத்த மாத்திரையெல்லாம் சரியா போட்டுண்டா இந்த தலைசுற்றல் எல்லாம் சரியாகிவிடும்!" என்றார் சமாதானமாக.

உள்ளே: "மதுரம்! இப்போ நீயும் நானும் சேர்ந்துட்டோமே, இனிமே நம்ப வாழ்க்கை  இதே மாதிரி சந்தோஷமா போகும் இல்லையா?" என்றான் உப்பிலி.

தன் மடியில் வந்து அமர்ந்து கொண்ட வெற்றியை தன்னோடு சேர்த்து அணைத்தவாறே மதுரம் பதிலளித்தாள்.

"ஊஹூம்! அப்படிச் சொல்லிட முடியாது. இந்த வீட்டு ஓனர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்!  அவங்க நெனச்சா நாம்ப எல்லோரும் இருந்த இடம் தெரியாம போயிடுவோம்!" என்றாள் மதுரம்.

"ஏன் அக்கா அப்படி சொல்ற? நீ சோர்ந்து போய் 'லோ' ஆக இருக்கும்போது நான் ஓடோடி வருவேன் இல்லே? 'வெர்டிகோ வெர்டிகோ'ன்னு ஜனங்க அலறுவாங்க, தலையை பிடிச்சுக்கிட்டு உக்காருவாங்க இல்லே? அதேபோல உப்பிலி அண்ணன் சோர்ந்து போய் 'லோ' ஆனாலும் நான் வருவேனே" என்றது வெற்றி உற்சாகமாக குதித்தபடி.

"பொறுத்திருந்து பாருங்கள்!" என்றாள் மதுரம்.

டிசம்பர் 31

வெளியே: "ராத்திரி நல்லா தூங்கினியா? இப்போ தலைசுற்றல் கொஞ்சம் பரவாயில்லையா?" என்றார் நாராயணன்.

"டாக்டர் பி.பி. ஜாஸ்தியாயிருக்குன்னு நேத்திலிருந்து பி.பி. மாத்திரை ஆரம்பிச்சிருக்காரே, அதிலேயே தூக்கத்துக்கும் இருக்கும்னு நெனைக்கிறேன். நல்லா தூங்கிட்டேன்!" என்றாள் ஏதோ யோசனையில் ஆழ்ந்தவாறே லீலா.

"என்ன யோசனை பலமாக இருக்கு?"

"ஷுகர் மட்டும் இருந்தபோது ஏதோ கொஞ்சம் முன்னே பின்னே இருந்திருப்பேன். இப்போ பி.பி.யும் சேர்ந்திருச்சுன்னு தெரிஞ்சதும் இனிமே நான் ஜாக்கிரதையா இருக்கணும், இல்லையா?" என்றாள் லீலா.

அவளுக்கு உடல் நிலை சரியாக இல்லாததால் நாராயணனே சமைத்து விட்டார்.

"இதோ பார்! உனக்குப் பிடிச்ச உருளைக்கிழங்கு ரோஸ்ட்! முருங்கைக்காய் சாம்பார்! கிச்சலி சம்பா அரிசியில சாதம் வெள்ளைவெளேர்னு எவ்வளவு ஜோரா இருக்கு பாரு!"

"இல்லை! வேணாங்க! கார்போஹைடிரேட் இனிமே குறைச்சலா எடுத்துக்கணும்.  அந்த கேரளா அரிசி சிவப்பு கலர்ல வாங்கி வச்சிருக்கேனே? அதை எனக்குத் தனியா சமைச்சுக்கிறேனே!"

"கொட்டை கொட்டையா உனக்கு அது பிடிக்கவே  பிடிக்காதே?" என்றார் நாராயணன் கவலையுடன்.

"அப்படி அரிசி  இருந்தாதான் நிறைய சாப்பிட மாட்டோம். அதனால் அந்த அரிசிதான் இனிமே சாப்பிடப்போறேன்!" என்றாள் லீலா.

"மோர் சாதத்திற்கு ஊறுகாய் இல்லாம உனக்கு இறங்காதே?" என்றார் நாராயணன்.

லீலா காதில் அது விழுந்ததாகவே தெரியவில்லை. கொட்டை கொட்டையாக இருந்த சிகப்பு அரிசி சாதத்தை மோரை விட்டு கஷ்டப்பட்டு கடித்து முழுங்கிக் கொண்டிருந்தாள்.

உள்ளே: "கார்ப்ஸ் இல்லேன்னா என் பாடு கஷ்டந்தான்!" என்றாள் வருத்தத்துடன் மதுரம்.

ஜனவரி 1

வெளியே: "உனக்கு பாதுஷா ரொம்பப் பிடிக்குமேன்னுதான் வாங்கிண்டு வந்தேன்.  இந்தா கொஞ்சூண்டு வாயில போட்டுக்கோ! இன்னிக்கி நியூ இயர் இல்லியா? ஸ்வீட் சாப்பிடாம எப்படி? ஒண்ணும் ஆயிடாது!" என்றார் நாராயணன்.

"வேண்டான்னா வேண்டாந்தாங்க!" பிடிவாதமாக மறுதலித்தாள் லீலா.

உள்ளே: "நான் சொன்னேனில்ல, ஓனர் அம்மா ரொம்ப ஸ்டிரிக்ட்.  நம்பளை ஒழிச்சுக்கட்டப் பார்ப்பாங்கன்னு? இப்போ பாருங்க!" என்றாள் மதுரம்.

வெளியே: "என்ன லீலா இது? எங்களுக்கெல்லாம் பாயசம் வச்சிட்டு, புது வருஷமும் அதுவுமா நீ பாகற்காய் ஜூஸ் குடிக்கறே?" என்றார் நாராயணன் பதறிப்போய்.

"இனிமே இப்படிதாங்க!" என்றாள் லீலா தீர்மானமாக. "வேண்டாததையெல்லாம் சாப்பிட்டதெல்லாம் போதும்! இனிமே ஆரோக்கியம்தான் முக்கியம்!"

"ஏங்க? காலையிலிருந்து கசப்பு,  துவர்ப்புன்னு சாப்பிட்டதே உடம்பில ஒரு நல்ல மாற்றம் தெரியுதுங்க!" என்றாள் லீலா உற்சாகத்துடன்.

உள்ளே: "நான் சொன்னேனில்லை. இனிமே நம்ப பாடு அதோகதி தான்" என்று மதுரம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, 'வெர்டிகோ', 'தலை சுற்றல்' என்னும் வெற்றி திரும்பவும் தன் பொந்துக்குள் போய் பதுங்கிக் கொண்டது.

"என்னையே அவங்க மருந்து மாத்திரை சாப்பிட்டு யோகாவெல்லாம் பண்ணி கட்டுப்பாடாதான் வச்சிருப்பாங்க. இப்போ வயதாகி உடம்பில  நோய் எதிர்ப்பு சக்தி கொறஞ்சதால்தான் நான் திரும்ப முழு வீச்சில என் கூட்டுக்குள்ளேயிருந்து வர முடிஞ்சது!" என்றாள் மதுரம் ஈனஸ்வரத்தில்.

"அப்போ... நான் அவ்வளவுதானா..." என்றான் உப்பிலி என்னும் பி.பி. தீனமான குரலில் ஏக்கமாய்.

"அப்படியெல்லாம் பயப்படாதீங்க! இந்த மனுஷங்களுக்கு ஒரு பலகீனம் இருக்கு.  சாப்பிடற விஷயங்கள்ல இவங்களால தொடர்ந்து கட்டுப்பாடா ரொம்ப நாள் இருக்க முடியாது! நீங்க வேணா பாருங்க! பாதுஷாவையும், ஆவக்காய் ஊறுகாயையும் வெளுத்துக் கட்டிட்டு, இவங்களே நம்மை அழைப்பு விடுத்துக் கூப்பிடற நாள் ரொம்ப தொலைவில இல்லை!" என்று மதுரம் என்னும் ஷுகர் முனகி விட்டு, ஒரு மூலையில் முடங்கிக் கொண்டாள்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT