குபுவாசு (Cupuassu) என்ற பழம் அமேசான் காடுகளை பிறப்பிடமாகக் கொண்டு பிரேசிலில் அதிகளவில் மரங்களாக வளர்க்கப்பட்டு வருகிறது. கொக்கோவுடன் தொடர்புடைய வெப்ப மண்டல மழைக் காட்டு மரம் இது. இந்த மரத்தின் பழம் தனித்துவமான சுவையுடன் அநேக ஆரோக்கிய நன்மைகள் தரக்கூடியது. இதிலுள்ள ஆரோக்கிய நன்மைகள் ஐந்தினைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
குபுவாசு பழத்தில் வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், இதய நோய், புற்றுநோய், நீரிழிவு நோய் போன்ற நாள்பட்ட வியாதிகள் வரும் அபாயத்தைத் தடுக்கின்றன. இப்பழத்தை அடிக்கடி உண்டு வந்தால் பொதுவாக உடலின் மொத்த நலனும் மேம்படும்.
இதிலுள்ள அதிகளவு வைட்டமின் Cயானது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை வலுவடையச் செய்கிறது. குறிப்பாக, தொற்று நோய்க் கிருமிகளையும் அவை உண்டு பண்ணும் நோய்களையும் எதிர்த்துப் போராடக்கூடிய இரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்களின் உற்பத்திக்கும் அவற்றின் செயல்பாட்டிற்கும் மிகவும் உதவி புரிகிறது இது.
இந்தப் பழத்திலுள்ள அதிகளவு நார்ச் சத்து ஜீரண மண்டல உறுப்புகளின் சிறப்பான இயக்கத்திற்கு உதவுகிறது; ஜீரண உறுப்புகளின் கடைசிப் பாதையில் கழிவுகள் சிரமமின்றிப் பயணித்து, வெளியேறச் செய்கின்றன; இவ்வுறுப்புகளில் வளரும் நன்மை தரும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது; இரத்தத்திலுள்ள கொழுப்புகளின் அளவையும் சமநிலைப்படுத்தி இதய ஆரோக்கியம் காக்க பெரிதும் உதவுகிறது.
குபுவாசு பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் நல்ல கொழுப்புகளும், ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்ஸினால் இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களில் உண்டாகும் வீக்கங்களையும், செல்களில் ஏற்படும் சிதைவுகளையும் குறைக்க உதவி புரிந்து இதயத்தை ஆரோக்கியத்துடன் செயல்பட துணை நிற்கின்றன.
சருமத்துக்குத் தேவையான நீர்ச் சத்தை அளிக்கவும் சருமத்தை மென்மையாக்கக் கூடியதுமான குணங்கள் இப்பழத்தில் உள்ளதால் சருமப் பாதுகாப்பிற்காக தயாரிக்கப்படும் வர்த்தகப் பொருள்களில் இதை சேர்த்து வருகிறார்கள் என்பது முக்கியத் தகவல்.
இப்பழத்தை அப்படியேயும் சாப்பிடலாம். ஐஸ்க்ரீம் போன்ற உணவுப் பொருள்களில் கூட்டுப் பொருளாகவும் இது சேர்த்து வழங்கப்படுகிறது.