Health benefits of black gram. 
ஆரோக்கியம்

கருப்பு உளுந்தின் ஆரோக்கிய நன்மைகள்!

கிரி கணபதி

நாம் தினசரி உண்ணும் உணவில் கூட்டு, பொரியல், குழம்பு போன்றவற்றில் பல வகையான பருப்புகளைப் பயன்படுத்துகிறோம். அதில் நம் உடலுக்கு பல நன்மைகளை அள்ளித் தருவது உளுந்தம் பருப்பு. இந்த உளுந்தில் கருப்பு மற்றும் வெள்ளை என இரு வகை உள்ளன. இதில் கருப்பு உளுந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

கருப்பு உளுந்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இரத்த சோகை உள்ளவர்கள் இதைச் சாப்பிடுவது நல்லது. எனவே, கருப்பு உளுந்து பயன்படுத்தி செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுப்பதால் அவர்களுக்கு உள்ள இரத்த சோகை விரைவில் நீங்கும்.

தற்போது இருப்பதிலேயே மிகவும் கொடுமையான வியாதி எதுவென்றால் நீரிழிவு பிரச்னையை சொல்லலாம். நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதிகப்படியான நார்ச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும். கருப்பு உளுந்தில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இது நம் உடலின் இரத்த சர்க்கரை அளவை சரியாக வைத்திருக்க உதவுகிறது.

மனிதர்களுக்கு வயது ஏற ஏற எலும்புகளின் பலம் குறையும். கருப்பு உளுந்தில் எலும்புகளுக்கு வலுவூட்டும் பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை இருப்பதால், அதை பயன்படுத்தி செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். இது நமது எலும்பு மற்றும் மூட்டுகளின் வலிமையை அதிகரிக்கும்.

எதிர்பாராத விதமாக ஒருவருக்கு அடிபட்டால் காயங்கள், புண்கள் போன்றவை ஏற்படுகின்றன. சிலருக்கு விபத்துகளில் உள்காயங்கள் கூட உண்டாகிவிடும். இத்தகையவர்கள் கருப்பு உளுந்து பயன்படுத்தி செய்யப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புண்கள், காயங்கள் அனைத்தும் வேகமாக ஆறிவிடும்.

இயற்கை மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் சரும பிரச்னைகளைப் போக்குவதற்கு கருப்பு உளுந்து பரிந்துரை செய்யப்படுகிறது. இது சருமத்தில் உள்ள தழும்பு, கரும் புள்ளிகள் போன்ற பிரச்னைகளைத் தீர்க்க உதவுகிறது.

மேலும், கருப்பு உளுந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்கு அதிக ஆற்றலைக் கொடுக்கும் சத்துக்கள் நிறைந்த உணவாகும். எனவே, கருப்பு உளுந்து பயன்படுத்தி செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுப்பதன் மூலமாக அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT