தற்போதைய காலகட்டத்தில், வசதி உள்ளவர்கள் வசதி இல்லாதவர்கள் என்று ஸ்டேட்டஸ் பேதம் ஏதுமின்றி அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் தங்கள் உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. நம்மில் பலர் குறிப்பிட்ட இடைவெளியில் வைட்டமின் அல்லது ஊட்டச்சத்து குறைபாடு உடம்பில் உள்ளதா என்று கண்டறிய மருத்துவரின் ஆலோசனையுடன் பரிசோதனை சாலையில் பரிசோதித்துக் கொள்கின்றர். குறை ஏதும் இருப்பின் அதை நிவர்த்தி செய்யும் வகையில் உணவுப் பழக்கத்தை மாற்றியமைத்து சரிசெய்துக் கொள்ளவும் செய்கின்றனர். அந்த வகையில், தண்ணீரில் ஆலிவ் ஆயில் மற்றும் லெமன் ஜூஸ் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயில், லெமன் ஜூஸை தண்ணீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் குடல் இயக்கங்கள் சரிவர நடைபெறும். சரும ஆரோக்கியம் மேம்படும். ஆலிவ் ஆயிலில் உள்ள நெகிழ்வுத் தன்மையானது மலக்குடலில் உள்ள கழிவுகள் சுலபமாகப் பயணித்து சிரமமின்றி வெளியேற உதவும்.
பித்த நீர் சுரப்பை அதிகரிக்கவும், உடலுக்குக் கொழுப்புச் சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தரவும் ஆலிவ் ஆயில் உதவும். மேலும் ஆலிவ் ஆயிலில் உள்ள வைட்டமின் E சருமத்தை ஈரப்பதத்துடனும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது.
லெமன் ஜூஸில் உள்ள சிட்ரிக் ஆசிட் ஜீரணத்துக்கு உதவும் என்சைம்களை ஊக்குவித்து ஜீரணம் சிறப்பாக நடைபெறவும் குடல் இயக்கங்கள் தங்கு தடையின்றி செயல்படவும் உதவும். லெமன் ஜூஸிலிருக்கும் அதிகளவு வைட்டமின் C கொலாஜன் உற்பத்தியை பெருகச் செய்து சருமத்தின் நீட்சித்தன்மையை (Elasticity) சிறப்படையச் செய்யும்.
எதையும் பளிச்சிடச் செய்யும் குணம் கொண்ட லெமன் ஜூஸ் நம் உடல் சருமத்தில் உள்ள கறைகளை நீக்கி சருமத்தின் நிறம் பளபளப்புப் பெற உதவும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளும் தரமான தூக்கமும் சரும ஆரோக்கியத்திற்கு அவசியம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த பானத்தை குறைந்த அளவிலேயே உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில், லெமன் ஜூஸில் உள்ள அமிலத்தன்மை பற்களின் எனாமலை சேதப்படுத்தக் கூடும். ஆலிவ் ஆயிலில் உள்ள அதிகளவு கலோரி, எடை அதிகரித்தல் போன்ற பிரச்னைகள் உருவாகக் காரணமாகலாம். அதனால் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்பு இந்த பானத்தை அருந்துவது நலம் தரும்.