Black Rice 
ஆரோக்கியம்

இன்னுமா வெள்ளை அரிசியை சாப்பிட்டுக்கிட்டு இருக்கீங்க? இந்த கருப்பு அரிசியைப் பற்றியும் தெரிஞ்சுக்கோங்க! 

கிரி கணபதி

பண்டைய காலங்களில் இருந்து நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றுதான் கருங்குருவை. இதை இயற்கையின் கொடை எனலாம். பசுமை புரட்சிக்குப் பிறகு ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பரவலாக பயன்படுத்தப்பட்டாலும், கருங்குருவை போன்ற பாரம்பரிய நெல் வகைகள் தனது தனித்துவமான இடத்தை இழக்காமல் இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் கருங்குருவையின் மருத்துவ குணங்கள் மற்றும் சத்துக்கள் நிறைந்த தன்மைதான். 

கருங்குருவை நெல் குறுவை பட்டத்தில் பயிரிடப்படும் ஒரு சிறப்பான ரகம். இதன் கால அளவு 125 நாட்கள், சராசரி உயரம் 105 சென்டிமீட்டர், ஆயிரம் நெல்மணிகளின் எடை 25 கிராம் இருக்கும். இதன் சிறப்பம்சமே அதன் அடர் பழுப்பு நிறம்தான். இது மோட்டா அரிசி வகையைச் சேர்ந்ததாகும். மகசூலைப் பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு சுமார் 825 கிலோ நெல் மற்றும் 1300 கிலோ வைக்கோல் வரை கிடைக்கும். இது மட்டுமின்றி, வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களைத் தாங்கி நிற்கும் தன்மை கொண்டது. 

கருங்குறுவையின் ஆரோக்கிய நன்மைகள்: 

கருங்குருவை அரிசியில் சாம்பல் மற்றும் புரதச்சத்து அதிக அளவில் உள்ளது. இதில் இரும்பு, பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் போன்ற முக்கியமான தாது உப்புக்கள் நிறைந்துள்ளன. 

இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், புற்றுநோய் செல்கள் வளர்வதைத் தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. மேலும், இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், ரத்தசோகை, தசை மற்றும் எலும்பு பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. 

இது ரத்தத்தில் சர்க்கரை அளவை சமநிலையில் வைத்து நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை அளிக்கிறது. பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள், இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி இதய நோய்கள் வராமல் தடுக்கின்றன. 

கருங்குருவை அரிசி செரிமானத்தை சீராக வைத்து மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள சில குறிப்பிட்ட சத்துக்கள் தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. 

இந்த அரிசியைக் கொண்டு இட்லி, தோசை, பணியாரம், புட்டு மற்றும் பலகார வகைகளைத் தயாரித்து சாப்பிடலாம். இது உணவுக்கு ஒரு தனித்துவமான சுவையை அளித்து, ஆரோக்கியத்தையும் அள்ளித் தருகிறது. இது நம் உடல் நலத்திற்கு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும் ஒரு பயிர். நாம் அனைவரும் இத்தகைய பாரம்பரிய உணவுப் பொருட்களை மீண்டும் பயன்படுத்தி, நம் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ள முயல வேண்டும். 

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

SCROLL FOR NEXT