கோடைக் காலத்தில் பலவித பழச் சாறுகளை அருந்தி உடல் சூட்டைக் குறைத்துக் கொள்கிறோம். உடல் சூடு குறைவது மட்டுமின்றி, உபயோகப்படுத்தப்படும் பழங்களிலுள்ள ஊட்டச் சத்துக்கள் அனைத்தும் உடலுக்குக் கிடைக்கிறது. கிவி ஜூஸ் அருந்துவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
இரத்தத்தில் சோடியம் அதிகரித்தால் இரத்த அழுத்தம் அதிகமாகும். கிவி ஜூஸ் அருந்தும்போது அதிலுள்ள பொட்டாசியம் சத்து சோடியத்துக்கு எதிராக வினை புரிந்து உயர் இரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்களின் இரத்த அழுத்தத்தை சமநிலைக்குக் கொண்டு வர உதவுகிறது.
கிவி ஜூஸில் உள்ள வைட்டமின் C மற்றும் வைட்டமின் E சத்துக்களானவை முடி உதிர்வதைத் தடுக்க உதவுகின்றன. கிவி ஜூஸில் பொட்டாசியம் மற்றும் நார்ச் சத்துக்கள் உள்ளன. இவை இதயத் துடிப்பின் அளவையும் கொலஸ்ட்ரால் அளவையும் சமநிலைப்படுத்த உதவி புரிந்து, இதய ஆரோக்கியத்தைக் காக்கின்றன.
இதிலுள்ள வைட்டமின் C சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமலும், சூரிய வெப்பம் மற்றும் சுற்றுப்புற மாசுக்களால் சருமத்துக்கு பாதிப்பு ஏற்படாமலும் பாதுகாக்கிறது. இதிலுள்ள வைட்டமின் E சருமத்தின் மிருதுத் தன்மையைப் பாதுகாக்க உதவுகிறது.
கிவி குறைந்த அளவு கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்ட பழம். இதன் காரணமாகவும் மற்றும் இதிலுள்ள நார்ச் சத்துக்களாலும் உடலின் இரத்த சர்க்கரை அளவு சமநிலை பெறுகிறது. மேலும், கிவியிலுள்ள இயற்கையான சர்க்கரை ஆல்கஹால் மற்றும் இனோசிடால் (Inositol) ஆகியவையும் இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவுகின்றன. கிவி ஜூஸிலுள்ள பைட்டோ கெமிகல்ஸ் சிறப்பான செரிமானத்துக்கு உதவுவதோடு, ஆக்ட்டினிடின் (Actinidin) என்ற என்ஸைம் வயிற்றிலும் சிறுகுடலிலுமுள்ள புரோட்டீன்களை உடைக்கச் செய்கிறது.
இத்தனை நன்மைகள் கொண்ட கிவி ஜூஸ் அனைவராலும் உண்ணத்தக்க பானமே என்றால் அது மிகையல்ல.