லோபியா (Lobia) எனப்படும் பிளாக் ஐட் பீ (Black eyed pea)யானது உலகமெங்கும் பரவலாக பலராலும் உண்ணப்பட்டு வரும் ஓர் ஆரோக்கிய உணவாகும். இதிலுள்ள சத்துக்கள் என்னென்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
லோபியாவில் வைட்டமின்களும் கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம் போன்ற கனிமச் சத்துக்களும் அதிகளவில் நிறைந்துள்ளன. இவை பலமும் ஆரோக்கியமும் நிறைந்த எலும்புகள் அமைய பெரிதும் உதவுகின்றன.
லோபியாவிலுள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், சர்க்கரை உடலுக்குள் உறிஞ்சப்படும் வேகத்தை குறையச் செய்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென உயர்வதைத் தடுக்கிறது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த உணவாகும். லோபியாவில் கலோரி அளவும் கொழுப்புச் சத்தும் குறைவு; புரோட்டீன் சத்தும் நார்ச்சத்துக்களும் அதிகம்.
லோபியா ஜீரணமாவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் மீண்டும் பசியெடுக்க அதிக நேரமாகிறது. இதன் விளைவாக ஒரு நாள் முழுவதும் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவு குறைகிறது; இது உடல் எடையை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது.
லோபியாவிலுள்ள நார்ச்சத்துக்கள் சிறப்பான செரிமானத்துக்கு உதவுகின்றன; ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. மலச்சிக்கலைத் தவிர்க்கவும் உதவுகின்றன. இதிலுள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் மற்றும் பொட்டாசியம் சத்தானது அதிகப்படியான கொழுப்புகளைக் குறைக்கவும் உயர் இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தவும் உதவுகின்றன. இதனால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.
இதில் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இருந்தாலும் இதை ஆறு மணி நேரம் ஊற வைத்துப் பின் நன்றாக வேக வைத்து உண்பது நலம். ஏனெனில், மாசுக்களின் காரணமாக ஏற்படும் குமட்டல் போன்ற சிறு சிறு கோளாறுகள் உண்டாவதைத் தடுக்க இது உதவும்.
லோபியா தமிழில் காராமணிப் பயறு என அழைக்கப்படுகிறது. இதை சுண்டல் செய்து ஸ்நாக்ஸாகவும், தக்காளி, கத்தரிக்காய், வெங்காயம் சேர்த்து குழம்பாகவும் செய்து சாதத்தில் பிசைந்தும் உண்ணலாம்.