ஒரு பெண்ணுக்கு தாய்மைப்பேறு என்பது சுகமான அனுபவம். தானும் தனது வயிற்றில் வளரும் சிசுவும் ஆரோக்கியம் பெற எந்த மாதிரியான உணவை எடுக்கவேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தும் காலம் இது. இவர்கள் தவிர்க்கும் உணவுகளில் ஒன்றாக எள் உள்ளது. எள்ளில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் குறித்துக் காண்போம்.
3500 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வளர்க்கப்படும் பழைமையான எண்ணெய் வித்து எள். எள் கறுப்பு, வெள்ளை, மஞ்சள், சிவப்பு என பல நிறங்களில் உலகெங்கும் உள்ளது. இதில் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கி செரிமானத்தை சீராக்கும் அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் அடங்கி உள்ளன.
எள்ளில் தாய்க்கும் சேய்க்கும் நலன் பயக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளன என்றாலும் இது வெப்பத்தைத் தரும் உணவாகவும் உள்ளதால் இயற்கை நிலையைப் பாதித்து உடல் சூட்டை அதிகரிக்கும் என்றும், இதன் காரணமாக குமட்டலுடன் துவக்க நிலை கர்ப்பத்தைப் பாதிக்கும் என்பதால் முதல் 3 மாதங்களுக்கு எள்ளைத் தவிர்க்கும்படி பெரியவர்கள் சொல்லிச் சென்றதால் இந்தியாவில் உள்ள பெண்கள் கர்ப்ப காலத்தில் எள்ளைத் தவிர்க்கிறார்கள்.
எள்ளில் இரும்பு, கால்சியம், புரதம், நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிரம்பி உள்ளன. மேலும், வளர்ச்சி தரும் ரிபோஃபுளேவின், நியாசின், தியாமின், பைரிடாக்சின் போன்ற பி வைட்டமின்களும் உள்ளன.
இதிலுள்ள ஜிங்க் சத்தும் இரும்புச்சத்தும் உடல் வலுவிற்கு உதவுகின்றன. வைட்டமின் சி பாதிப்பு தரும் கிருமிகளைத் தடுத்து நோயெதிர்ப்பு சக்தியைத் கொடுக்கிறது. இதன் நார்ச்சத்து சீரான செரிமானம் தந்து மலச்சிக்கலுக்கு தீர்வு தருகிறது. கால்சியத்தின் பலனாக பற்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சி முறையாக நடைபெறுகிறது. ஃபோலிக் அமிலம் நரம்பு பிரச்னைகளைத் தடுக்கிறது. இரத்த நாளங்களில் தேங்கி பாதிப்பு தரும் கெட்ட கொலஸ்ட்ராலை அகற்றி அடைப்பை நீக்க உதவுகிறது. நல்ல கொழுப்பின் அளவைப் பராமரித்து கெட்ட கொலஸ்ட்ராலை மற்றும் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
மேலும், இதிலிருந்து எடுக்கப்படும் எள் எண்ணெய் அநேக நலன்களைத் தருகிறது. இதன் ஆக்சிஜனேற்றப் பண்புகளால் இதைக் கொண்டு மசாஜ் செய்வதால் தசைகள் மற்றும் மூட்டுகளின் இயக்கத்தை மேம்படுத்தி மூட்டு வலியைக் குறைக்கிறது. இதை முறையாக சருமத்தில் பயன்படுத்தினால் மென்மையான, பொலிவான சருமத்தைப் பெறலாம். இது சருமக் காயங்களை விரைவில் ஆற்றும் தன்மை கொண்டது. குறிப்பாக, பிறந்த குழந்தைகளுக்கு சருமப் பிரச்னைகள் வராமல் காக்க இந்த எண்ணெய் பயன்படுகிறது.
இப்படி ஏராளமான நன்மைகள் எள் எண்ணெயில் இருந்தாலும், ஒருசிலருக்கு இதனால் ஒவ்வாமையும் ஏற்படுகிறது. ஆகவே, ஒவ்வாமை இல்லாத பட்சத்தில் மருத்துவரின் ஆலோசனைப்படி கர்ப்பிணிகள் மட்டுமின்றி, அனைவருமே மிதமான அளவில் எள்ளை பயன்படுத்தி நலம் பெறலாம்.