பச்சைப் பயறில் (Moong Dal) இருக்கும் ஆரோக்கிய நன்மைகளுக்காக இது நெடுங்காலமாக இந்திய உணவுகளில் ஓர் உன்னத இடத்தைப் பிடித்துள்ளது. இதை ஊற வைத்து துணியில் கட்டி முளை விட்டபின் சாப்பிடும்போது அதிலுள்ள ஊட்டச்சத்துக்களின் அளவு மேலும் பன்மடங்கு அதிகரிக்கிறது. இதை ஏன் முளைகட்டி உண்ண வேண்டும் என்பதற்கான 6 முக்கிய காரணங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இப்பயறை முளைக்கும் சூழலில் வைத்திருக்கும்போது இதிலுள்ள காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் புரோட்டீன் சத்துக்கள், மூங் தாலில் உள்ள அமிலேஸ் (Amylase) மற்றும் புரோட்டீஸ் (Protease) என்ற என்சைம்களால் உடைக்கப்பட்டு சிம்பிள் வடிவாக்கப்படுகின்றன. இதனால் இவை வயிற்றில் சுலபமாக ஜீரணிக்கப்பட்டு ஊட்டச் சத்துக்கள் உறிஞ்சப்படுகின்றன. மேலும், வயிற்றில் வீக்கம் மற்றும் வாய்வு உண்டாவதும் தடுக்கப்படுகிறது.
இது ஒரு குறைந்த கலோரி அளவு கொண்ட உணவு. இதிலுள்ள நார்ச்சத்து அதிக நேரம் பசியுணர்வைத் தடுத்து, உட்கொள்ளும் கலோரி அளவைக் குறைக்க உதவுகிறது. இதனால் எடை அதிகரிக்கும் வாய்ப்பு குறைகிறது. இதிலுள்ள அதிகளவு புரோட்டீனானது, ஓய்வில் இருக்கும்போதும் கலோரிகளை எரிக்கச் செய்யும் லீன் மஸில் மாசை (Lean Muscle Mass) உருவாக்க உதவுகிறது.
இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் இரத்த அழுத்தத்தை சம நிலையில் வைக்கவும், அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் உதவுகின்றன. இதனால் இதய இரத்த நாளங்கள் கோளாறின்றி செயல்பட முடிகிறது.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தீங்கு தரும் ஃபிரீ ரேடிகல்களை எதிர்த்துப் போராடி ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் மற்றும் வீக்கங்களை குறைக்க உதவுகின்றன. இதனால் இதயத்தின் மொத்த ஆரோக்கியம் காக்கப்படுகிறது.
பச்சைப் பயிறை முளைகட்டி உபயோகிக்கும்போது அதிலுள்ள வைட்டமின் C யின் அளவு அதிகமாகும். அதன் மூலம் ஆன்டி ஆக்ஸிடன்ட்களின் அளவும் அதிகரிக்கும். இதனால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி வலுவடைந்து தொற்று நோய்க் கிருமிகள் உடலுக்குள் வருவது தடுக்கப்படும். நோய்களும் விரைவில் குணமாகும்.
முளை கட்டிய மூங் தால் குறைந்த க்ளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டது. இதில் நார்ச்சத்து அதிகம். இவை இரண்டும் சர்க்கரையை இரத்தத்தில் மெதுவாக கலக்கச் செய்து இரத்தத்தில் சர்க்கரை அளவு உயராமல் பாதுகாக்கவும், டைப் 2 டயாபெட் வரும் அபாயத்தை தடுக்கவும் செய்கின்றன.
இதிலுள்ள ஃபிளவனாய்ட்ஸ் மற்றும் பாலிஃபினால்ஸ் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஃபிரீ ரேடிகல்களினால் சருமத்தின் செல்களில் உண்டாகும் சிதைவைத் தடுத்து சருமம் பளபளப்பு, இளமைத் தோற்றம் மற்றும் ஆரோக்கியம் பெற உதவுகின்றன. இதிலுள்ள வைட்டமின் E சருமத்தை நீரேற்றமாகவும் மிருதுவாகவும் வைக்க உதவுகிறது.
இத்தனை ஆரோக்கிய நன்மைகள் தரும் மூங் தாலை முளை விடச் செய்து சாலட்களில் சேர்த்தும் கிரேவியாக சமைத்தும் உட்கொண்டு நலம் பல பெறுவோம்.