காணும் இடமெங்கும் கண்ணுக்கு இதமாய் மலர்ந்து சிரிப்பவை துத்தி. இது குப்பைமேடுகள், சாலையோரங்கள் என பல இடங்களிலும் வளரும். துத்தியில் பசுந்துத்தி, கருந்துத்தி, சிறுதுத்தி, பெருந்துத்தி, நிலத்துத்தி, கொடிதுத்தி, காட்டுதுத்தி என நிறைய வகைகள் உண்டு.
இது கீரை வகையைச் சேர்ந்தது. ஆனால், இதனை பெரும்பாலும் யாரும் சமையலுக்குப் பயன்படுத்துவதில்லை. இதனை மற்ற கீரைகளைப் போலவே பொரியல் செய்து சாப்பிடலாம். துத்தி செடியின் இலை, பூ, வேர், பட்டை என அனைத்துமே மருத்துவப் பயனுடையவை.
துத்தி இலை உடலில் உள்ள புண்களை ஆற்றும். மலத்தை இளக்கி எளிதாக மலம் கழிக்கவும் உதவும். துத்தி இலை மற்றும் வேர் ஆகியவற்றை குடிநீரில் இட்டு சுட வைத்து அந்தத் தண்ணீரை வாய் கொப்பளிக்க, பல் ஈறுகளில் இருந்து இரத்தம் வடிவது நிற்கும்.
இந்தச் செடியில் உள்ள பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணமுடையது. துத்திப் பூக்களுடன் துவரம் பருப்பு சேர்த்து சமைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர சிறுநீரில் இரத்தம் வருதல், இரத்த வாந்தி, பேதி, சளியில் ரத்தம் கலந்து வருதல் போன்றவை குணமாகும்.
துத்திப் பூக்கள் ஆண்மையைப் பெருக்கும் தன்மை உடையவை. துத்திப் பூக்களை காம்பு நீக்கி நிழலில் நன்கு காய வைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இத்துடன் சர்க்கரை கலந்து காலை, மாலை இரண்டு வேளை பாலில் போட்டு பருக இரைப்பு நோய் (ஆஸ்துமா) குணமாகும்.
காசம் எனப்படும் எலும்புருக்கி நோயை குணப்படுத்தும் சக்தி துத்தி பூவுக்கு உண்டு. சூட்டினால் உண்டாகும் மூல நோய்க்கு ஒரு கைப்பிடி அளவு துத்தி பூவை பசும்பாலில் போட்டு நன்கு காய்ச்சி சிறிது சர்க்கரை சேர்த்து பருகி வர மூல நோய் கட்டுப்படும்.
துத்தி விதைகளை பொடித்து அத்துடன் சம அளவு கல்கண்டு சேர்த்து இரண்டையும் பொடித்து சிறிதளவு நெய்யுடன் குழைத்து தினம் உண்டு வர வெண்புள்ளி நோய் குணமாகும். துத்தி இலையை அரைத்து சாறு எடுத்து அத்துடன் தேங்காய் எண்ணெய் கலந்து நீர் வற்றும் வரை நன்றாக சுண்டைக்காய்ச்சி ஆறியதும் பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும். குழந்தைகளுக்கு ஏற்படும் கரப்பான்களுக்கு இதைத் தடவி வர விரைவில் குணமாகும். அல்சர் எனப்படும் குடல் புண்ணிற்கு துத்தி இலை கஷாயத்தை தினசரி இரண்டு வேளை சிறிது சர்க்கரை கலந்து குடித்து வர நல்ல குணமுண்டாகும்.