கோடை வெயிலுக்குக் குளுமையான பலன் தரும் சமய சஞ்சீவினியாக விளங்குகிறது தர்பூசணி. குறைவான விலையில் நிறைவான பலன் தரும் தர்பூசணி நீர்ச்சத்து மிகுந்த ஒரு பழமாகும். உடலுக்குக் குளிர்ச்சி தருவதோடு, பல்வேறு ஆரோக்கிய நலன்களையும் அளிக்கும் தர்பூசணியின் சில வகை பயன்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
இதய நலனைக் காக்கும்: தர்பூசணியில் லைக்கோபீன் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிக அளவில் உள்ளது. இது ஃப்ரீரேடிக்கல்ஸால் உண்டாகும் தீமைகளைக் குறைக்கும். இதயத்தை இளமையாக வைத்திருக்கும். தர்பூசணியில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இது மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளை குறைத்து இதயத் துடிப்பை சீராக்குகிறது. லைக்கோபீன் மார்பு, நுரையீரல், கர்ப்பப்பை, பெருங்குடல் போன்ற இடங்களில் தோன்றும் புற்றுநோயைத் தடுக்கும்.
கண்களைப் பாதுகாக்கும்: தர்பூசணியில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி லூடீன், சியாக்ஸன்தின் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிக அளவில் உள்ளன. இவை மாலைக்கண் நோய், கண் விழி மிகை அழுத்த நோய் போன்றவற்றிலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது.
நீர் இழப்புப் பிரச்னையைத் தடுக்கும்: உயர் இரத்த அழுத்தத்தை தர்பூசணி குறைக்கிறது. தமனிகள் சிறப்பாக செயல்பட உதவுவதோடு, இது எலும்புகளை பாதுகாத்து ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்கிறது. தர்பூசணியில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. உடல் காயங்களை விரைவில் ஆற்றும் தன்மை கொண்டது. தர்பூசணியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். முகப்பரு பிரச்னைகளை சரி செய்யும்.
தர்பூசணியில் வைட்டமின் பி6 உள்ளது. இது நமது மூளையில் உள்ள பல வேதிப்பொருட்களை உற்பத்தி செய்கிறது. இந்த வேதிப் பொருட்கள்தான் நமது நடவடிக்கை மற்றும் மனநிலைக்குக் காரணமாக அமைகிறது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மன அமைதி கிடைக்கும்.
தர்பூசணிப் பழம் சிறுநீரகத்தைப் பாதுகாத்து அதன் செயல்பாட்டை காக்கிறது. சிறுநீர் வெளியேறும்போது சிரமம் கொடுக்கும் அமோனியாவை, கல்லீரலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது. அதேபோல், மலச்சிக்கலையும் இது சரி செய்து நெஞ்செரிச்சலையும் போக்குகிறது. இவ்வாறு பல நன்மைகளைத் தரும் தர்பூசணி மலிவாகக் கிடைக்கும் இந்த சீசனில் சாப்பிட்டு கோடை வெயிலை குளுமையாக்குவோம்.