நோயை எதிர்க்கும் சக்தி நமது உடலுக்கு மிகவும் அவசியம். ஆகையால், நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்கும் உணவுகளையும் தெரிந்து வைத்துக்கொள்ளுதல் மிக மிக அவசியம்.
நோய்கள் அடிக்கடி வருவதற்கு காரணமே, நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பதே. இந்த நோயெதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்பட்ட பின்பு கிருமிகளை கொல்லும். அதேபோல் மீண்டும் நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
அந்தவகையில் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலமாக வைத்துக்கொள்ளும் சில உணவுகளைப் பார்ப்போம்.
பெர்ரி:
ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி, ப்ளூபெர்ரி, ப்ளாக்பெர்ரி போன்ற பெர்ரி பழங்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து உடலைப் பாதுகாப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவும். எனவே இந்தப் பழங்களை தினமும் எடுத்துக்கொள்ளுங்கள்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு:
சர்க்கரை வள்ளிக்கிழங்கை தினமும் வேகவைத்தோ அல்லது மற்ற காய்கறிகளுடன் சேர்த்தோ சாப்பிட வேண்டும். நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமைக்கு தேவையான பீட்டா கரோட்டின் கரோட்டினாய்டுகள் இதில் அதிகம் உள்ளன.
சிட்ரஸ் பழங்கள்:
திராட்சை, எலுமிச்சை, ஆரஞ்சு உள்ளிட்ட சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகளவு உள்ளது. இது உடலில் நோய்த் தொற்றுகளை எதிர்த்து போராடும் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை இயற்கையாக அதிகப்படுத்துகிறது. மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ஸ், ஃப்ரீ ரேடிக்கல்களின் பாதிப்பிலிருந்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுக்கிறது.
ஓட்ஸ்:
ஓட்ஸில் நார்ச்சத்து மற்றும் பீட்டா – குளுக்கன் ஆகியவை உள்ளன. இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவதன் மூலம் சளி, காய்ச்சல் போன்றவை அடிக்கடி வராமல் தடுக்கும்.
கிவி:
ஃப்ரீ ரேடிக்கல் பாதிப்பு மற்றும் ஆக்ஸினேற்ற அழுத்தம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடவும் கிவி பழம் உதவும். இவற்றில் ஆரஞ்சு பழத்தைவிட அதிகமான வைட்டமின் சி உள்ளது.
தயிர்:
பொதுவாக குடல் ஆரோக்கியமாக இருந்தாலே, நோயெதிர்ப்பு சக்தியும் வலிமையாக இருக்கும். தயிர் சாப்பிடுவதன்மூலம் குடல் ஆரோக்கியமாகி, நோயெதிர்ப்பு மண்டலமும் வலிமையாகிவிடும்.
பூண்டு:
பூண்டு, உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கிறது. மேலும் இதில், ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்ட அல்லிசின் என்ற மூலக்கூறு, உடலில் இருக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களைக் கொன்று ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ரத்தக் குழாய்களில் தேங்கும் கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்கும்.
இந்த உணவுகளில் கவனம் செலுத்தினாலே, நோயெதிர்ப்பு மண்டலமும் வலிமையடையும்.