brain fog 
ஆரோக்கியம்

மூளை மூடுபனியை எதிர்கொள்வது எப்படி?

எஸ்.விஜயலட்சுமி

மூளை மூடுபனி (brain fog) என்பது நினைவாற்றல் குறைபாடு, கவனம் செலுத்துவதில் சிரமம், குழப்பம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றால் ஏற்படும் ஒரு அறிவாற்றல் செயலிழப்பு ஆகும். இந்த நிலையை எதிர்கொள்வது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

மூளை மூடுபனியின் அறிகுறிகள்:

கவனம் செலுத்துவதில் சிரமம்: செய்யும் வேலைகளில் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படும். அதில் தவறுகள் ஏற்பட்டால் மிகவும் சோர்ந்து போவார்கள்.

நினைவாற்றல் குறைபாடு: ஒருவரை இந்தத் தேதியில், இந்த நேரத்தில் சந்திக்கிறேன் என்று கூறிவிட்டு பின்பு அதை சுத்தமாக மறந்துபோவது, செய்ய வேண்டிய வேலைகளையும் மறப்பது, தான் என்ன பேசினோம் என்பதே ஞாபகத்தில் இல்லாமல் இருப்பது போன்றவை.

குழப்பம்: மூளை மூடுபனியால் பாதிக்கப்பட்டவருக்கு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை பற்றிய ஒரு தெளிவற்ற உணர்வு இருக்கும்.

மெதுவான செயலாற்றல்: சாதாரணமாக வேலைகளை செய்ய அதிக நேரம் எடுத்துக்கொள்வது அல்லது எந்த வேலையும் செய்யவில்லை என்பது போன்ற உணர்வு ஏற்படும்

தெளிவின்மை: இவர்களால் தெளிவாக சிந்திக்க முடியாது. எண்ணங்களில் மேகமூட்டமாக அல்லது குழப்பமாக உணர்வார்கள். மனம் வெறுமையாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

வார்த்தைகளை கண்டுபிடிப்பதில் சிரமம்: தாம் என்ன நினைக்கிறோம் என்பதை சரியான வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாமல் போராடுவார்கள்.

சோர்வு: நன்றாகத் தூங்கி ஓய்வெடுத்த பின்பும் மனதளவில் சோர்வாக உணர்வது.

மூளை மூடுபனி ஏற்படக் காரணங்கள்: பெரும்பாலான மக்கள் சில சமயங்களில் தற்காலிகமாக மூளை மூடுபனியை அனுபவிக்கிறார்கள். மோசமான தூக்கம், ஜெட்லாக், அதிகப்படியான உணவு போன்றவை இதற்குக் காரணங்களாக இருக்கலாம். மற்றும் குறுகிய கால உடல் மற்றும் உணர்ச்சி அழுத்தங்களாலும் ஏற்படலாம்.

தூக்கமின்மை: சரியாக இரவில் தூங்காமல் இருப்பது அல்லது தூங்கும்போது இடையிடையே எழுவது என்று மோசமான தூக்கமும் ஒரு காரணம்.

மன அழுத்தம்: நாள்பட்ட மன அழுத்தம் மற்றும் மனப்பதற்றம்.

ஊட்டச்சத்து குறைபாடுகள்: ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், பி வைட்டமின்கள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் குறைபாடுகளாலும் மூளை மூடுபனி ஏற்படும்.

மருத்துவ நிலைமைகள்: கர்ப்ப காலம், மாதவிடாய், தைராய்டு கோளாறுகளின்போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், ஹைபோ தைராய்டிசம், இரத்த சோகை.

சுற்றுச்சூழல் நச்சுகள்: பூச்சிக்கொல்லிகள் கன உலோகங்கள் மற்றும் இரசாயனங்களின் உபயோகங்கள் மூளை மூடுபனிக்கு பங்களிக்கும்.

மூளை மூடுபனியை சமாளிப்பதற்கான உத்திகள்:

நல்ல உறக்கம்: தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த வேண்டும். தினமும் வழக்கமான நேரத்தில் உறங்கச் செல்ல வேண்டும். கண்டிப்பாக உறங்கப்போகும் முன்பு செல்போன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.

தியானம், யோகா: தியானம், யோகா மற்றும் ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள், நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் நீச்சல், மிதமான உடற்பயிற்சி அவசியம்.

ஆரோக்கியமான உணவு: பழங்கள் காய்கறிகள், கொட்டைகள், விதைகள் போன்ற சமச்சீரான உணவும் சால்மன், அக்ரூட் பருப்புகள் போன்றவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

போதுமான நீர்: உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டும். மூளை நீரேற்றமாகவும் சரியாகவும் செயல்பட நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

நினைவாற்றல் பயிற்சி: தற்போதைய தருணத்தில் கவனம் செலுத்த வேண்டும். மேலும், நினைவாற்றல் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.

இடைவேளை: எப்போதும் எதைப்பற்றியாவது சிந்தித்துக்கொண்டே இருக்காமல் மனதையும் மூளையையும் ஓய்வெடுக்க செய்ய வேண்டும். அவ்வப்போது சிறிய இடைவெளிகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மூளை மூடுபணியை கடக்க பொறுமை மற்றும் விடாமுயற்சி தேவை. வாழ்க்கை முறை மாற்றங்கள் சிகிச்சை ஆரோக்கியம் போன்றவை மூளை மூடுபனியை எதிர்கொள்ள நன்றாக உதவும்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT