ஆரோக்கியமான உணவு முறை ஊட்டச்சத்து குறைபாடுகளில் இருந்து நம்மைக் காக்கிறது. தற்போது பெருகிவரும் நீரிழிவு, இதயநோய், பக்கவாதம் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது அன்றாட சத்து மிகுந்த உணவுகள்.
தற்போதைய அவசர வாழ்க்கையில் ஆரோக்கியமற்ற உணவு மற்றும் உடல் உழைப்பு இல்லாமை ஆகியவை நம்முடைய உடல் நலத்திற்கு கேடு விளைவித்து ஆபத்துகளை ஏற்படுத்துகின்றன. நல்லதொரு உணவுப் பழக்கங்கள் குழந்தை பருவத்தில் இருந்தே துவங்குகின்றன. பிறந்ததும் தருகிற தாய்ப்பால் ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்கும் அமுதாகிறது. மேலும், அதிக எடை அபாயத்தைக் குறைத்து பிற்காலத்தில் நீண்ட கால ஆரோக்கிய நன்மைகளை அந்தக் குழந்தை பெற உதகிறது.
நம் உணவுப் பழக்க வழக்கங்கள் பாரம்பரியத்தில் இருந்து மேல்நாட்டு முறைப்படி மாறி வருவது வேதனைக்குரிய ஒன்று. நம் நாட்டின் தட்பவெட்பம் மற்றும் நமது சூழல் பொறுத்தே நமது உணவுகள் அமைகின்றன. தினசரி நாம் கவனத்துடன் சமச்சீர் சத்து மிகுந்த உணவுகளை எடுக்கும்போது மட்டுமே நம்மால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். ஆனால், அந்த ஆரோக்கியமான உணவுகள் என்பது என்ன என்பதை இந்தப் பதிவில் காணலாம்.
ஆரோக்கியமான உணவு என்பது பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், கொட்டைகள் மற்றும் முழு தானியங்கள், அதிலும் பதப்படுத்தப்படாத சோளம், தினை, ஓட்ஸ், கோதுமை, பழுப்பு அரிசி போன்றவைகளாகிறது.
ஒரு நாளைக்கு குறைந்தது 400 கிராம் அல்லது ஐந்து பகுதிகளாக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது. பழங்களில் உள்ள நார்ச்சத்து நம் உடல் இயங்கத் தேவையான தினசரி ஆற்றலைத் தருகிறது.
பானங்களில் காப்பி, டீயை தவிர்த்து கிரீன் டீ பருகினால் இளமை தோற்றம் பெறலாம். இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட் நோய்களுக்கு எதிராக செயல்பட்டு நமது உடல் எடையை குறைத்து ஆரோக்கியம் தருகிறது.
ஆரோக்கியம் தரும் தினசரி உணவுகளில் தற்போது பெருமளவு பேசப்படுவது பாதாம் பருப்பு மற்றும் வேர்க்கடலை ஆகியவை. பாதாம் பருப்பில் இதயத்துக்கு நன்மை செய்யும் அமிலம் மற்றும் நார்ச்சத்து, கால்சியம், கொழுப்பு மற்றும் புரதம் அதிகமாக இருப்பதால் உடலுக்கு வலிமை தந்து நினைவாற்றலை அதிகரிக்கவும் துணை புரிகிறது. மற்ற பருப்புகளுடன் ஒப்பிட்டால் பிரமாத பலன்களை தரும் பாதாம் பருப்புகளைப் போலவே முன்னணியில் இருக்கும் வேர்க்கடலையும் சத்து மிகுந்த பருப்பு ஆகிறது.
பல வண்ணங்களில் உள்ள காய்கறிகளை தினசரி நாம் எடுத்துக் கொள்ளும்போது ஆரோக்கியம் பெருகுகிறது. உதாரணமாக, ஆரஞ்சு, பச்சை மற்றும் சிவப்பு என பல்வேறு நிறங்களில் உள்ள குடைமிளகாய். இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கிறது பல வண்ணப் பழங்களும் காய்கறிகளும்.
புரதம், கால்சியம் மிகுந்த பால் மற்றும் தயிர் போன்றவை நம் உடலுக்கு வலிமையுடன் நோயெதிர்ப்பு சக்தியையும் தருகிறது.
சிறுதானிய உணவுகள் உடல் நலம் காப்பதில் சிறந்த பங்காற்றுகின்றன. அதிக புரத சத்துள்ள உணவுகளான திணை போன்றவை சைவ உணவை மட்டுமே உண்பவர்களுக்கான முக்கியமான உணவாகிறது. இதில் உள்ள நார்ச்சத்து, புரதச்சத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவி செய்வதோடு, உடல் எடையையும் கட்டுக்குள் வைக்கிறது.
பொதுவாக, ஒவ்வொரு பழங்களும் ஓவ்வொரு விதமான சத்துக்கள் கொண்டவை என்பதால் நிச்சயம் தினசரி உணவில் ஏதேனும் ஒரு பழம் இருக்க வேண்டும். உதாரணமாக ஆப்பிள். இதன் தோலில் ஆண்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளதால் தோலுடன் கூடிய ஆப்பிளை சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லது.
அடுத்து கீரைகள். அனைத்து கீரைகளிலும் நோய்களுக்கு எதிராகப் போராடும் சக்தி வாய்ந்த பீட்டா கரோட்டின் உள்ளதால் தினம் ஒரு கீரை வகை உணவில் இருப்பது சிறப்பு. ஆகவே, சைவ பிரியர்கள் முதல் அனைவருமே கீரைகள் எடுத்துக் கொள்வது நலம்.
அதேபோல், தினசரி உணவோடு முட்டையை எடுத்துக் கொள்வது நல்லது. புரதச்சத்து, ஊட்டச்சத்து, நல்ல கொழுப்புகள் நிறைந்த முட்டையை காலையில் எடுத்துக் கொண்டால் உடல் எடை குறைவதுடன், புரதம் காரணமாக இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்து, தசைகளுக்கு வலு சேர்க்கிறது.
அசைவ பிரியர்கள் மீன் சாப்பிட்டால் ஏராளமான நன்மைகள் பெறலாம். ஒமேகா கொழுப்பு , புரோட்டின், வைட்டமின், கால்சியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்திருக்கும் மீனை அன்றாட உணவில் எடுத்துக் கொள்ளலாம். மீன்களில் அதிக அளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.