தொழில்நுட்பங்களின் வளர்ச்சி, உணவுப் பழக்க வழக்கங்களில் மாற்றம், காலநிலை மாற்றம் ஆகிய பல காரணங்களால் நமக்கு பல நோய்கள் வந்தவண்ணம் இருக்கிறது. ஒரு நோயை குணப்படுத்துவதற்கு மருந்துகள் சாப்பிட்டால், அதன் பக்க விளைவாக மற்றொரு நோய் வருகிறது. நம் முன்னோர்கள் உணவே மருந்து என வாழ்ந்து வந்தார்கள். அதனால் தான் அவர்கள் 100 வயதை கடந்தும் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.
அவர்களின் காலத்தில் ஆங்கில மருத்துவத்திற்கு எல்லாம் வேலையே கிடையாது. உடலில் ஒரு நோய் தொற்று ஏற்பட்டால், உடனே எங்கிருந்தோ ஒரு மூலிகை செடியை பறித்து வந்து அதனை பக்குவமாய் கொடுத்து நோய் இருந்த இடம் தெரியாமல் விரட்டிவிடுவார்கள். அந்த வகையில் நம்மை சுற்றி பல வகையான மருத்துவ குணம் கொண்ட செடிகள் உள்ளன. ஆனால் நாம் அதனை எல்லாம் களை செடிகள் என நினைத்து கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுகிறோம்.
நாம் இந்த பதிவில் துத்தி இலையின் மருத்துவ பயன்களை பற்றி காணலாம்.
துத்தி இலை:
துத்தி இலை அல்லது துத்தி கீரை என்று இதனை அழைப்பார்கள். துத்தி என்றால் உண்ணக்கூடிய என்பது பொருள். அதனால் இந்த கீரையை தாராளமாக உண்ணலாம். எந்தவித பக்கவிளைவுகளும் வராது. Abutilon Indicum என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். இதய வடிவமுடைய இலை, மஞ்சள் நிறத்தில் பூக்கள், சக்கர வடிவிலான விதைகளை கொண்ட புதர் செடியாகும். பெரும்பாலும் இந்த செடிகள் சாலை ஓரங்களில் காணப்படும்.
துத்தி இலை மருத்துவ பயன்கள்:
துத்தி இலை மூலநோயை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் உஷ்ணத்தால் அல்லது மலச்சிக்கலால் வரக்கூடிய மூலநோயை துத்தி இலை குணப்படுத்துகிறது. காலை எழுந்ததும் துத்தி இலைகளை நீரில் கொதிக்க வைத்து, அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறைந்து மூலநோய் குணமாகிவிடும்.
மேலும் துத்தி இலையின் சாறை காலை வெறும் வயிற்றில் 2 ஸ்பூன் குடித்து வர மலச்சிக்கல் வராது.
துத்தி இலையை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால், இரத்தம் சுத்திகரிக்கப்படும்.
துத்தி செடியின் வேரை நீரில் போட்டு கசாயம் வைத்து குடித்து வருவதால், பக்கவாதம் தடுக்கப்படுகிறது.
துத்தி இலையில் கேலிக் மற்றும் டையூரிக் அமிலம் உள்ளதால் சிறந்த வலி நிவாரணியாக பயன்படுகிறது.
இரத்த வாந்தி பிரச்சனை உள்ளபோது துத்தி இலை சாறு எடுத்து, அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்த வாந்தி பிரச்சனை தீர்ந்து விடும்.
மேலும் ஆறாத புண்கள் மற்றும் கட்டிகள் இருந்தால் இந்த துத்தி இலையை அரைத்து அதில் பற்று போட்டால் உடனே ஆறிவிடும்.
எவ்வாறு சாப்பிடலாம்?
துத்தி இலையை, மற்ற கீரைகள் சமைப்பது போல சமைத்து சாப்பிடலாம். பருப்பு சேர்த்து கூட்டு, பொரியல் செய்து சாப்பிடலாம்.
துத்தி இலையை நீரில் கொதிக்க வைத்து அதில் தேன் அல்லது நாட்டுச் சக்கரை கலந்து ஆறவைத்து குடித்து வரலாம்.
மேலும் துத்தி இலை கிடைக்காதவர்கள், நாட்டு மருந்து கடைகளில் துத்தி இலை பொடி வாங்கி வந்து பயன்படுத்தலாம்.