Is nail biting a disease?  
ஆரோக்கியம்

நகம் கடிப்பது ஒரு வகையான நோயா?

சங்கீதா

நம்மில் பலருக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும். சாதாரணமாக உட்கார்ந்து இருக்கும் போது, எதையாவது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் போது, மன அழுத்தத்தில் உள்ளபோது, பதட்டமாக உணரும் போது, சலிப்பாக உள்ளபோது என பல சமயங்களில் நாம் நகத்தை கடித்து கொண்டு இருப்போம். ஆனால் இவ்வாறு நகம் கடிக்கும் போது நம்மையும் அறியாமல் இதை செய்கிறோம். இதன் பின்விளைவுகள் பற்றி நாம் யோசிப்பது கிடையாது. நகம் கடிப்பது சாதாரணமாக தோன்றலாம். ஆனால் பெரிய விளைவுகளை அது ஏற்படுத்திவிடும்.

முக்கியமாக குழந்தைகள் நகம் கடித்துக்கொண்டிருப்பார்கள். இது பெற்றோர்களுக்கு பெரிய தலைவலியாக இருக்கும். சொல்லபோனால் இந்த பழக்கம் பெரியவர்களுக்கும் இருக்கும். அவர்கள் நினைத்தாலும் சில சமயங்களில் நகம் கடிப்பதை நிறுத்த முடியாது.

நகம் கடிப்பது ஒரு வகையான நோயா?

நகம் கடிக்கும் பழக்கத்தை மருத்துவ ரீதியாக ஓனிகோபேஜியா என கூறுவார்கள். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஏற்பட கூடிய உணர்ச்சிகளை குறைப்பதற்காக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தங்களின் நகங்களை கடிப்பார்கள். இது பொதுவான மன அழுத்தம் அல்லது நரம்பு தொடர்புடைய பிரச்சனை ஆகும். நகம் கடிப்பது ஒரு வகை நோய் என்று சொல்லாவிட்டாலும், அது பல நோய்கள் வருவதற்கு வழி வகுக்கும்.

விளைவுகள்

நம் விரல் நகத்தில் 'மேட்ரிக்ஸ்' என்றழைக்கப்படும் ஒரு அடுக்கு உள்ளது. நகத்தை அடிக்கடி கடித்துக் கொண்டிருக்கும் போது இந்த மேட்ரிக்ஸ் பாதிக்கப்பட்டு உள் வளரும் நகம் பாதிக்கப்படும். மேலும் நகத்தில் ஆணி நோய் (ஓனிகோசிஸ்) ஏற்படும்.

மேலும் பெரியவர்கள் நகம் கடிப்பதால் அவர்களின் நகம் சற்று கடினமாக இருக்கும். எனவே இது பற்களில் சேதத்தை ஏற்படுத்தும். பல் கூச்சம் போன்றவை ஏற்படலாம்.

நகங்களை கடிக்கும் போது நகங்களில் உள்ள பாக்டீரியா, வைரஸ் வாய்வழியாக செல்லும் போது நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்பட்டு திடீர் காய்ச்சல், சளி போன்வற்றை உருவாக்கும். உடல் உள்ளுப்புகளை பாதிக்கும்.

மேலும் ஒரு சிலர் பதற்றமாக இருந்தால் அவர்கள் கடிக்கும் நகத்தை கீழே துப்பாமல் என்ன செய்கிறோம் என தெரியாமல் மென்று விழுங்கிவிடுவார்கள். அதனால் வயிற்றுவலி ஏற்படும்.

அடிக்கடி நகம் கடிக்கும் போது நகத்தின் வளர்ச்சியில் மாற்றம், நகத்தை சுற்றி எரிச்சல், வலி, மேலும் நகத்தின் நிறத்தில் மாற்றம் ஏற்படும்.

தடுப்பது எப்படி?

நகத்தை கடிப்பதற்கு முன்பு ஏன் நகத்தை கடித்து கொண்டிருக்கிறோம் என சிந்திக்க வேண்டும். சோர்வு, பசி, மன அழுத்தம் இதில் எந்த மனநிலையில் இருக்கிறீர்கள் என்பதை கவனித்தால் நகம் கடிப்பதில் இருந்து விடுபடலாம்.

அடுத்ததாக நகத்தை நீங்கள் நீளமாக வைத்துக்கொள்ளாமல், வளரும் போதே வெட்டி கொள்வது நல்லது. விரலில் கடிப்பதற்கு நகம் இல்லையென்றால் இந்த பிரச்சனையை தவிர்க்கலாம்.

கசப்பு தன்மை கொண்ட நெயில் பாலிஷ் பயன்படுத்தலாம். நகம் கடிக்கும் போது கசப்பாக இருக்கும். அதனால் மீண்டும் நகம் கடிக்க தோன்றாது. குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டாம்.

குழந்தைகள் நகம் கடிப்பதை பார்த்தால் அவர்களின் கவனத்தை திசை திருப்பும் விதமாக அவர்களை ஓவியம் வரைய சொல்லுங்கள், பெயிண்ட் செய்ய சொல்லலாம். குழந்தைகளுக்கு  நகம் கடிக்கும் பழக்கம் அதிகமாகும் பட்சத்தில் விரலில் வேப்ப எண்ணெய் தடவி விடவும். இதனால் மீண்டும் அவ்வாறு செய்ய மாட்டார்கள்.

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

மைக்ரோ கீரைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? சாகுபடி முறை இதோ!

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

SCROLL FOR NEXT