எண்ணெய் இல்லாமல் அடுப்பில்லாமல் சமைப்பது இப்போது ட்ரெண்டாகி வருகிறது. இது நம் ஆரோக்கியத்திற்கு ஏற்றதுதானா என்று இப்பதிவில் பார்க்கலாம்.
ஆதி காலத்தில் இப்படித்தான் சாப்பிட்டோம் என்று சொல்லி, இந்தக் காலத்தில் முழு சாப்பாடும் சமைக்காமலே தயார் செய்வது சரியா?
வேகவைத்தல், வறுத்தல், பொரித்தல் போன்ற முறைகளுக்கு உட்படுத்தப்படும்போது அவற்றில் உள்ள சத்துக்கள் பெருமளவில் வீணாகின்றன. அதனால் சமைக்காமல் உணவு தயாரிக்கும் முறையைக் கொண்டு வருவதாக கூறுகின்றனர்.
மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமும் சமைத்து உண்பதில்லை என்கிறார்கள்.
காய்கறிகளை நறுக்குவது, ஊற வைப்பது, கலக்குவது என்ற மூன்று முறையில்தான் இப்போது சமைப்பதாக கூறும் இவர்கள் அரிசியை பொருத்தவரை அவற்றை அவல்களாக மாற்றி ஊறவைத்து சமைப்பதாக கூறுகிறார்கள்.
ஆனால், எல்லாவற்றையும் சமைக்காமல் சாப்பிடுவதால் ஜீரணப் பிரச்னை உருவாகலாம். வயிற்றுப் போக்கும், சில வகை சத்து குறைபாடுகளும் ஏற்படலாம்.
நார்ச்சத்து மிகுதியான சிறுதானியங்களை எடுத்துக்கொண்டால் கேழ்வரகைத் தவிர மற்றவற்றை முளைகட்ட முடியாது. அப்படியே முளைகட்டினாலும் நம்மால் அவற்றை அப்படியே சமைக்காமல் உண்ண முடியாது.
புரதம், கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சமைத்து சாப்பிடுவதுதான் சிறந்தது.
அப்படியானால் சமைக்காமல் சாப்பிடுவது தவறா?
நிச்சயம் சில வகை காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடலாம். அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால், காய்கறிகளை நறுக்கி நீண்ட நேரம் வைத்திருந்தால் பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. காலிபிளவர் முட்டை கோஸ் போன்றவற்றை சமைக்காமல் சாப்பிடுவது சரியில்லை.
சில விட்டமின்கள் ஏ,டி போன்றவை எண்ணெயில்தான் இருக்கும். இவற்றை தாளிப்பதற்குப் பயன்படுத்துவதால் தவறு ஒன்றும் இல்லை. கிழங்கு வகைகளை வேக வைத்துத்தான் உண்ண வேண்டும். சில வகை உணவுகளை ஆவியில் வேகவைத்து சாப்பிடுவது அதன் சத்துக்கள் வீணாகாமலும், உடலுக்கு நன்மை பயப்பதாகவும் இருக்கும்.
எனவே, சமைக்காத உணவுகளை வாரத்தில் ஒரு முறை அல்லது இருமுறை எடுத்துக்கொள்ளலாம். எல்லா நாட்களும் இதையே பின்பற்றுவது சரியல்ல.