நம் உடலுக்கு சக்தி தரக்கூடிய உணவுகளில் அரிசி வகையும் ஒன்று. அரிசி உணவுகளுக்குப் பதிலாக குயினோவாவை (Quinoa) சேர்த்துக் கொண்டால் அதிக ஆரோக்கிய நன்மைகள் பெறலாம். குயினோவா தென் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் ஒரு வகை தானியம். இதை ஏன் நம் உணவில் அரிசிக்குப் பதில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான 8 விதமான காரணங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. குயினோவாவில் உடலுக்குத் தேவையான ஒன்பது முக்கிய அமினோ ஆசிட்கள் உள்ளன. இதனால் குயினோவா ஒரு முழுமையுற்ற புரோட்டீன் சத்துக்கள் அடங்கிய உணவாகிறது. தாவர அடிப்படையிலான வேறு எந்த உணவுகளிலும் இதுபோல் காண்பது அரிது.
2. அரிசியில் இருப்பதை விட குயினோவாவில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமானம் சீராக நடைபெறவும், எடைப் பராமரிப்பிற்கும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
3. குயினோவா குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டது. அதாவது, இது இரத்தத்தில் சர்க்கரை அளவை மெதுவாக படிப்படியாகக் கூட்டக்கூடிய திறமை கொண்டது. அதனால், நீரிழிவு நோய் உள்ளவர்களும், உடலில் சக்தியின் அளவை சீராக வெளிக் கொணர விரும்புபவர்களும் உண்பதற்கு ஏற்ற உணவு குயினோவா.
4. உடலின் மொத்த ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், தேவையான சக்தியை உற்பத்தி செய்யவும் உதவக்கூடிய B வைட்டமின்கள், மக்னீசியம், சிங்க் மற்றும் இரும்புச் சத்து போன்ற மினரல்கள் அதிக அளவில் நிறைந்துள்ள உணவு குயினோவா.
5. குயினோவா ஒரு குளூட்டன்-ஃபிரீ உணவு. எனவே, இது குளூட்டன் சகிப்புத்தன்மை இல்லாதவர்களும் சீலியாக் (Celiac) நோய் உள்ளவர்களும் உண்பதற்கு ஏற்ற உணவாகிறது.
6. குயினோவாவில் குயர்செட்டின் (Quercetin), கெம்ப்ஃபெரால் (Kaempferol) போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை உடலில் உள்ள தீங்கிழைக்கும் ஃபிரீரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி, வீக்கங்களைக் குறைக்க உதவும்.
7. குயினோவாவில் உள்ள அதிகளவு நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள், குறைந்த அளவு கொலஸ்ட்ரால் மற்றும் குறைந்த அளவு சோடியம் உள்ளன. இவை நம் இதயத்திற்கு உற்ற நண்பனாக உள்ளன.
8. இதிலுள்ள அதிகளவு புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துகள் வயிற்றில் அதிக நேரம் தங்கி பசியுணர்வைத் தடுத்து நிறுத்தி வைத்திருக்கும். இதனால் உட்கொள்ளும் உணவின் அளவு குறைந்து உடல் எடை அதிகரிக்காமல் பராமரிக்க முடியும்.
மேற்கூறிய காரணங்களுக்காக அரிசி உணவைக் குறைத்து, குயினோவாவைக் கூட்டி உண்போம்; குறைவில்லா ஆரோக்கியம் பெறுவோம்.