உடல் சருமத்தின் ஆழத்திலிருந்து மனித முடி முளைத்து வளர்கிறது. ஆனால், எல்லா முடிகளும் இறந்துபோன சரும செல்களில் இருந்துதான் முளைக்கின்றன. உலர்ந்த மற்றும் இறந்துபோன செல்களில் ‘கெரட்டின்’ என்ற புரதம் இருக்கிறது. இந்தப் புரதத்தில் இருந்து முளைப்பதுதான் நமது முடிகள்.
கர்ப்பம் தரித்து இரண்டாவது மாதத்திலிருந்தே கருவிலேயே குழந்தைக்கு முடி வளர ஆரம்பித்தது விடுகிறது. பிறந்த குழந்தையின் தலை முடி 2 சென்டி மீட்டர் இருக்கும். மிகவும் மென்மையானதாக இருக்கும். தினமும் சராசரியாக 0.045 மில்லி மீட்டர் வீதம் தலைமுடி வளர்கிறது.
உடலின் சருமத்துக்கு நிறத்தைக் கொடுக்கும், ‘மெலனின்’ என்ற நிறமிதான் முடிக்கும் நிறத்தை கொடுக்கிறது. மனித வாழ்வில் மூன்று விதமான முடிகள் முளைக்கின்றன. குழந்தை கருவில் இருக்கும்போது உடலில் உருவாகும் முடி ‘வெல்லஸ் முடி’ (Vellous). இது பிறந்து 30 முதல் 40 வாரம் வரை குழந்தையின் உடலில் இருக்கும். இது உடல் முழுவதும் இருக்கும். மிக அரிதாக சில பெண்களுக்கு அவர்கள் பருவமடையும் வயது வரை கூட இருப்பது உண்டு. அடுத்து, ‘லேனுகோ முடி’( lanugo hair). மனிதனின் உடலில் வளரும் கருப்பான தடிமனான முதல் முடி இதுதான். மூன்றாவதாக, ‘டெர்மினல் முடி’ (terminal hair). நன்றாக வளர்ந்த முழுமையான முதிர்ச்சியடைந்த முடிக்கு இந்தப் பெயர். இதற்குக் காரணமாக இருப்பது, ‘ஆன்ட்ரோஜன்’ எனும் ஹார்மோன்.
முடி மக்கிப்போகாது, ஆனால் எரிந்து போகும். ஒரே ஒரு தலைமுடி சுமார் 100 கிராம் எடையைத் தாங்கும் சக்தி கொண்டது. விஷத்தினால் இறந்தவர்களை அதை உறுதி செய்ய முடியில் உள்ள விஷத்தை பரிசோதித்து கண்டுபிடிக்கிறார்கள். ஒரு மாதம் வரை இறந்தவர்களின் தலைமுடியில் விஷப் பொருள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
20 வயதிற்கு மேற்பட்ட ஆண்களின் தலையிலும், உடலிலும் 50 லட்சம் முடிகள் வரை இருக்கும். ஒரு மனிதனின் தலையிலிருந்து சராசரியாக 50 முதல் 100 முடி வரை தினசரி கொட்டும். அதே நேரத்தில், இதே விகிதத்தில் புதிய முடிகள் முளைக்கும். அதனால் முடிகள் இழப்பு வெளியே தெரிவதில்லை.
முடிகள் வளர்வதற்கு இரும்புச்சத்து மற்றும் துத்தநாக சத்தும் தேவை. தினமும் முளைகட்டிய கொண்டைக்கடலை ஒரு கைப்பிடி, முற்றிய தேங்காய் துண்டு ஒன்று, 10 பாதம் பருப்பு, வெங்காயம், ஏதாவது ஒரு கீரை ஆகியவை உணவில் இடம் பெற்றால் ஆணுக்கும், பெண்ணுக்கும் முடிகள் நன்கு வளரும்.
இளம் வயதில் அதிகப்படியான முடி கொட்டுவதற்கும், இளநரை ஏற்படுவதற்கும் முக்கியக் காரணம் அதிகப்படியான மன அழுத்தம், புகை பிடித்தாலும்தான் காரணம் என்கிறார்கள். அதிகப்படியான மன அழுத்தம், மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுத்துவதும் அதனால் நமது மண்டை ஓட்டிற்கு குறைந்த ஆக்ஸிஜன் கிடைப்பதும்தான் முடியின் இளநரைக்கு காரணமாகிறது என்கிறார்கள்.
இதனைத் தவிர்க்க முடிக்கு தினந்தோறும் மூலிகை எண்ணெய் தேய்த்து வருவது நல்லது என்கிறார்கள். நெல்லிக்காய், வெங்காயம், கறிவேப்பிலை, மருதாணி இவற்றை எண்ணெயில் வதக்கி தேய்க்க வேண்டும் என்கிறார்கள்.
வைட்டமின் பி12, பி9, இரும்புச்சத்து, போலிக் அமிலம் அதிகமுள்ள நெல்லி, பீட்ரூட், கீரைகள், கொட்டை வகைகள், எள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முடிகள் மெலிவதற்கு காரணம் ஹார்மோன் சீரற்ற நிலை, தைராய்டு, மன அழுத்தம் புரோட்டீன் மற்றும் வைட்டமின் குறைபாடுகள். முடி 90 சதவீதம் புரோட்டீனால் ஆனது. எனவே, புரோட்டீன் சத்துள்ள உணவுகள் முடி உதிர்தலை தடுக்கும். இரும்புச்சத்துதான் உடல் முழுவதும் ஆக்ஸிஜனை செல்களுக்குக் கொண்டு செல்கிறது. முடிகளுக்கும் அப்படியே. எனவே, முடி ஆரோக்கியத்திற்கு இரும்புச்சத்து மிகவும் முக்கியம்.
வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்களும் முடி உதிர்தலைத் தடுக்கும். வைட்டமின் ஈ சத்துகள் முடியின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது க்யூட்டிகல் செல்களை மூடுவதற்கும், முடி உடைவதைத் தடுக்கவும் உதவும் எனக் கூறப்படுகிறது. இவை அவகோடா, முட்டை, கொட்டை உணவுகள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கருப்பட்டி போன்றவற்றில் உள்ளது.