நம் உடலில் உண்டாகும் நச்சுக்களை வெளியேற்ற உதவுவது சிறுநீரகம்தான். அவை முறையாக செயல்படாதபோது உடலில் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்தியாவில் அதிகப்படியான நபர்களுக்கு சிறுநீரக பாதிப்பு இருந்தாலும், பெரும்பாலானவர்கள் தங்களுக்கு சிறுநீரக பாதிப்பு உள்ளது என்பதை அறியாமல் இருக்கிறார்கள். இதனால் அந்த நோய் மேலும் முதிர்ச்சி அடைந்து தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த பதிவில் சிறுநீரக பாதிப்பு உள்ளதன் 7 அறிகுறிகள் என்னவென்று பார்க்கலாம்.
குமட்டல் மற்றும் பசியின்மை: பசியின்மை, குமட்டல் மற்றும் உணவில் நாட்டமின்மை போன்றவை சிறுநீரக பாதிப்பின் பொதுவான அறிகுறிகளாக கருதப்படுகிறது. மேலும் சிறுநீரகத்தில் தீவிர பாதிப்பு ஏற்பட்டால் உடலில் தேவையில்லாத நச்சுக்கள் அதிக அளவு ரத்தத்தில் கலந்து நோயாளிகளுக்கு விக்கல், வாந்தி போன்றவை அடிக்கடி ஏற்படலாம். அடிக்கடி குமட்டல் ஏற்பட்டால் சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ரத்த சோகை: சிறுநீரக பாதிப்பு இருந்தால் ரத்தசோகை ஏற்பட வாய்ப்புள்ளது. ரத்தசோகை ஏற்படுபவர்களுக்கு கவன குறைபாடு உடல்நலிவு போன்றவை பொதுவாக தென்படும். ஒருவரை சிறுநீரக நோய் தாக்கும்போது இத்தகைய அறிகுறிகள் ஆரம்பத்தில் இருக்கலாம். சில சிகிச்சைகளுக்குப் பிறகும் ரத்த சோகையை குணப்படுத்த முடியவில்லை என்றால், சிறுநீரகம் அதிக பாதிப்புக்குள்ளாகி இருக்க வாய்ப்புள்ளது.
மூச்சுத்திணறல்: சிறுநீரகத்தில் கல் அல்லது பாலிசிஸ்ட்டிக் ஓவரி பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு அடிக்கடி முதுகு வலி மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படும். இன்னும் சிலருக்கு சிறுநீரகத்திலேயே அதிக வலி தென்படும். உடல் வலி, முதுகு வலி, கால்களில் பிடிப்பு போன்றவை சிறுநீரக நோய்களின் அறிகுறிகள் ஆகும். சிறுநீரகம் பாதிக்கப்படும்போது சிவப்பு ரத்த அணுக்களில் ஆக்சிஜன் அளவு குறைவதால், தேவையற்ற திரவம் குடலில் தங்கிவிடும், இதனால் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.
உயர் ரத்த அழுத்தம்: பொதுவாகவே சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம். குறைந்த வயதிலேயே ரத்த அழுத்த பிரச்சனை இருந்தால் அதற்கு சிறுநீரகக் கோளாறு காரணமாக இருக்கலாம். உயர் ரத்த அழுத்தத்தால் மேலும் பல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இது இதயத்தை பலவீனப்படுத்தி இதய நோய்களை ஏற்படுத்தும்.
சுவாசத்தில் துர்நாற்றம்: சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என்றால் ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும். இது ஒருவரின் மூச்சுக்காற்றை மோசமான துர்நாற்றமாக மாற்றிவிடும். ஆரோக்கியமான சிறுநீரகங்கள் ரத்தத்திலிருந்து கெட்ட விஷயங்களை அகற்றுகின்றன. இவை சரியாக வெளியேற்றப்படவில்லை என்றால் சுவாசத்தில் துர்நாற்றம் ஏற்படலாம்.
வீக்கம்: சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என்றால் அதனால் தேவையற்ற நீரை வெளியேற்ற முடியாது. இதனால் கைகள் கால், பாதம், முகத்தில் வீக்கம் ஏற்படலாம். முகம் வீங்குதல் அல்லது பாதம் வீங்குதல் சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகளாகும்.
தூக்கமின்மை: சிறுநீரகம் முறையாக செயல்படாமல் உடலில் நச்சுக்களின் அளவு அதிகரித்துவிட்டால், அது உங்களின் தூக்கத்தை கடினமாக்குகிறது. எனவே சிறுநீரக பாதிப்பு இருந்தால் நிம்மதியான தூக்கம் வராது. நாள்பட்ட சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு ‘ஸ்லீப் அப்னீயா’ எனப்படும் தூக்கத்தில் மூச்சு திணறல் ஏற்படும் பாதிப்பு உண்டாக்கலாம்.
இந்த பதிவில் கூறப்பட்டுள்ள அறிகுறிகள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும் என சொல்ல முடியாது. ஒருவேளை இந்த அறிகுறிகள் இருந்து உங்களுக்கு சிறுநீரக பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. இந்த பதிவு ஒரு விழிப்புணர்வுக்காக மட்டுமே எழுதப்பட்டதாகும்.