Kleptomania Causes and Solutions 
ஆரோக்கியம்

‘க்ளெப்டோமேனியா’ காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தீர்வுகள்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

‘க்ளெப்டோமேனியா’ என்பது கட்டுப்பாடற்ற திருடுவதற்கான தொடர்ச்சியான தூண்டுதலாக வரையறுக்கப்படுகிறது. இது மிகவும் அரிதாக நிகழும் ஒரு சிக்கலான மனநிலை கோளாறாகும். இந்த சொல் பிரெஞ்சு மற்றும் கிரேக்க மொழியிலிருந்து வந்ததாகும். ‘க்ளெப்டோமேனியா’வால் பாதிக்கப்பட்டவர்கள் சிறிய அல்லது மதிப்பு இல்லாத பொருட்களை திருடுகிறார்கள். இவை பொதுவாக தேவையில்லாதது மற்றும் மலிவானதாக இருக்கும். இவர்கள் திருடும் அந்தப் பொருட்களை அரிதாகவே பயன்படுத்துவார்கள். திருடும் பொருட்களை பதுக்கி வைப்பது, தூக்கி எறிவது அல்லது வேறொருவருக்கு கொடுக்கவும் செய்வார்கள். ஒரு சக்தி வாய்ந்த தூண்டுதலின் காரணமாக இவர்கள் திருடுகிறார்கள்.

அறிகுறிகள்: பொருட்களை திருடுவதற்கான ஆசையை கட்டுப்படுத்த இயலாமல் இருப்பது. தேவையில்லாத அல்லது எளிதில் வாங்கக்கூடிய பொருளை திருடுவதற்கு உந்துதல் ஏற்பட்டு திருடுதல். திருடுவதற்கு முன்பு பதற்றம், மன அழுத்தம் மற்றும் பல வகையான உணர்வுகள் அதிகரித்து காணப்படும். திருடியதும் மனநிறைவு, நிம்மதி அல்லது மகிழ்ச்சி போன்ற உணர்வினை பெறுவது. திருட வேண்டும் என்ற தூண்டுதலை கட்டுப்படுத்த முடியாத நிலை போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் குற்ற உணர்வும், அவமானமும் நிறைந்த வாழ்க்கையை வாழ்கிறார். காரணம், அவதூறுக்கு பயந்து மனநல மருத்துவரை சந்திக்கவோ, ஆலோசனை கேட்கவோ பயப்படுகிறார்கள்.

காரணங்கள்: இதற்கான துல்லியமான காரணங்கள் இன்னும் சரியாக அறியப்படவில்லை. மன அழுத்தம், பயம், உணர்ச்சிகளின் கட்டுப்பாட்டின்மை போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம். மூளையின் கெமிக்கல் சமநிலை மாற்றங்கள், குறிப்பாக டோபமைன் மற்றும் செரோடோனின் போன்ற நரம்பியல் பக்க விளைவுகள் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

செரோடோனின் என்பது நம் மனநிலையையும், உணர்ச்சிகளையும் மாற்றியமைக்கும் ஒரு மூளையின் வேதிப்பொருள் ஆகும். க்ளெப்டோமேனியாவால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த வேதிப்பொருள் அளவு குறைவாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இதனால் ஏற்படும் விளைவுகள்: குற்றமாக எண்ணி தண்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குடும்பத்திலும், நண்பர்கள் மத்தியிலும், வேலை செய்யும் இடத்திலும் நன்மதிப்பு குறைவதற்கு வழிவகுக்கும். மனநலம் பாதிக்கப்படலாம். திருட்டிற்குப் பிறகு குற்ற உணர்ச்சியால் அவதிப்படலாம். சமூகத்தில் ஒதுக்கப்பட்டு விடலாம். மன அழுத்தம் காரணமாக உடல் நலனும் பாதிக்கப்படலாம்.

க்ளெப்டோமேனியா கவனிக்கப்படாமல், நீண்ட காலம் சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தால் பல சிக்கல்களை உருவாக்கும். மனச்சோர்வு, பதற்றம், குற்ற உணர்வு, சட்ட சிக்கல்களை உருவாக்கும். அறிகுறிகள் தெரிந்ததும் உடனடியாக மனநல நிபுணரின் ஆலோசனை பெறுவது அவசியம். அத்துடன் தேவையான சிகிச்சைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தீர்வுகள்: மனநல சிகிச்சை, ஆரோக்கிய உணவு முறைகள் மற்றும் மனநல ஆலோசனைகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை வழிநடத்தலாம். நவீன மருத்துவம் இதனை ஒரு மனநிலைக் கோளாறாகத்தான் பார்க்கிறது. இதற்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும், புரிதலும், அரவணைப்பும் இவர்களின் மனநல மேம்பாட்டிற்கு பெரிதும் உதவும். க்ளெப்டோமேனியா உள்ளவர்களை குறைத்து மதிப்பீடு செய்யாமல் அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதன் மூலம் அவர்களை மன அழுத்தத்தில் இருந்து காக்கலாம்.

திருவிழாக்களில் கொடியேற்றம் மற்றும் வாகன பவனியின் தத்துவம் தெரியுமா?

வெற்றிக்கு உதவும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள கற்க வேண்டிய 7 பழக்கங்கள்!

அத்திப்பழம் வெஜிடேரியனா அல்லது நான்-வெஜிடேரியன் ஃபுரூட்டா?

ஆரோக்கியத்தை வாரி வழங்கும் வாழைப்பூ!

'வித்யாலட்சுமி திட்டம்' - உயர்கல்வி நிறுவனங்களில் பயில மாணவர்களுக்கு கல்விக் கடன் உதவி!

SCROLL FOR NEXT