Nomophobia https://www.indiaglitz.com
ஆரோக்கியம்

நோமோஃபோபியா அதன் விளைவுகள் பற்றி தெரியுமா?

கே.எஸ்.கிருஷ்ணவேனி

நோமோஃபோபியா என்பது உளவியல் தொடர்பான ஒரு பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், அது ஒரு உளவியல் கோளாறாக இன்னும் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், கவலை தரக்கூடிய ஒரு பிரச்னையாகத்தான் அது உள்ளது. 2008ம் ஆண்டு யுனைடெட் கிங்டம் (UK) தபால் அலுவலகம்தான் இந்தச் சொல்லை அறிமுகப்படுத்தியது.

உறவுகளைப் பிரிந்து இருக்க முடியாத காலம் போய், இப்பொழுது போன்களை பிரிந்திருக்க முடியாத நிலைக்கு போய் விட்டோம். அனைவரும் ஃபோன்களுக்கு அடிமையாகி நீண்ட காலம் ஆகிவிட்டது. இன்றைய டிஜிட்டல் மயமாக்கப்பட்ட உலகில் தொழில்நுட்பத்துடன் ஆழமாகப் பின்னிப்பிணைந்துள்ள ஸ்மார்ட் போன் இல்லை என்றால் அசாதாரணமாகப் பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட் ஃபோன்களின் அதிகப்படியான பயன்பாடு போதைப் பொருள் போன்று நம்மை அடிமையாக்கி வைத்து இருக்கிறது. இரண்டு மாத குழந்தையிலிருந்து பல் போன தாத்தா வரை ஆண்ட்ராய்டு போன் இல்லாமல் இருக்க முடிவதில்லை. நெட்வொர்க் கிடைக்கவில்லை என்றாலோ, போன் ஹேங் ஆகிவிட்டாலோ ஏற்படும் பதற்றத்தை சொல்லி முடியாது. நெட்வொர்க் கவரேஜ் இல்லாமலோ போன் பழுதானாலோ ஏற்படும் உச்சகட்ட பயம்தான் நோமோஃபோபியா (Nomophobia) எனப்படுகிறது.

‘No Mobile Phobia’ என்னும் நோமோஃபோபியா நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். இனி, இதற்கான அறிகுறிகளைப் பார்ப்போம்.

காலையில் எழுந்ததும் பல் கூட தேய்க்காமல் போனை நோண்டுவது, பிறரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது கூட ஃபோனை அடிக்கடி பார்ப்பது, டைம் பாஸ் என்ற பெயரில் தூங்கப்போகும் வரை ஃபோனை விட்டு பிரியாதிருப்பது, பாத்ரூம் போனால் கூட ஃபோனை உடன் எடுத்துச் செல்வது, அதிகப்படியாக போனை உபயோகிப்பதால் பதற்றம், நெட்வொர்க் கவரேஜ் இல்லாதபோது பயம், கவலை உண்டாவது இதன் அறிகுறிகளாக உள்ளது.

இதனால் ஏற்படும் விளைவுகள்:

மனிதர்களிடமிருந்து விலகி இருப்பது, தூக்கத்தைத் தொலைப்பது, மன நலனில் பாதிப்பு, கண்ணிற்கு ஃபோனின் வெளிச்சத்தால் பாதிப்பு பெருமளவில் ஏற்படுவது, கண்களில் எரிச்சல், நீர் வடிவது, மங்கலான பார்வை, கண்களைச் சுற்றி கருவளையம் உண்டாவது, எதிலும் கவனக்குறைவு ஏற்படுவதோடு நில்லாமல்  தலைவலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி என்று அவஸ்தைப்படுவது போன்றவை இதன் விளைவுகள் ஆகும்.

இப்படி செல்போனுக்கு அடிமையாவதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள சில விஷயங்களை கையாளலாம்.

தினமும் போன் பயன்படுத்தும் நேரத்தை படிப்படியாக குறைத்துக்கொண்டு வரலாம். குடும்பத்தினருடன் கலந்து பேசி, சேர்ந்து உண்டு அவர்களுடன் சிறிது நேரத்தை செலவிடலாம். புத்தகங்களைப் போன்ற சிறந்த நண்பன் வேறு எதுவும் இல்லை. எனவே, புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

செல்போனை சரியான முறையில் அளவோடு பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் அதிகரிப்பதன் மூலம் இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு காணலாம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT