perfume allergy https://www.dailyrecord.co.uk
ஆரோக்கியம்

வாசனை திரவியங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றி தெரியுமா?

தி.ரா.ரவி

பெர்ஃப்யூம் எனப்படும் வாசனை திரவியங்களை சிறு வயதினர் முதல் வயதானவர்கள் வரை உபயோகிக்கின்றனர். ஆனால், சிலருக்கு இவற்றின் வாசனை  ஒத்துக்கொள்வதில்லை. பெர்ஃப்யூம்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

வாசனை திரவியங்கள், ஏர் ஃபிரஷ்னர்கள், டியோடரென்ட், அழகு சாதனப் பொருட்கள் போன்றவற்றில் உள்ள ரசாயனங்கள் சிலருக்கு  பாதகமான எதிர்வினைகளை ஏற்படுகிறது

பெர்ஃப்யூம் உணர்திறன் அறிகுறிகள்: வாசனை திரவியங்கள் ஒத்துக் கொள்ளாமல் இருந்தால் சென்சிட்டிவிட்டி அல்லது உணர்திறன் தொடர்பான பாதிப்புகளை உண்டாக்கும். முதலில் தும்மல் வரும். அதன் காரணமாக மூக்கில் நீர் வடியும். மூக்கைச் சுற்றிலும் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படும். இருமலும் வரலாம். லேசானது முதல் கடுமையான தலைவலி வரலாம். மூக்கு ஒழுகுதல், கண்களில் நீர் வடிதல் சுவாசிப்பதில் சிரமம், தலைசுற்றல் மற்றும் சோர்வு, குமட்டல் மற்றும் வாந்தி, தசை வலிகள், மூச்சுத்திணறல், செய்யும் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போதல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வாசனை திரவியங்களில் உள்ள வலுவான வாசனை அந்தத் தாக்குதலை தூண்டிவிடும்.

பெர்ஃப்யூம் (அலர்ஜி) ஒவ்வாமையின் அறிகுறிகள்: சருமத்தில் ஏற்படும் அலர்ஜிகள் எரிச்சல், சிவத்தல், அரிப்பு மற்றும் தடிப்புகள் உடலில் வீக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும். சிலருக்கு கண்களைச் சுற்றியும், தொண்டையிலும் கூட அரிப்பு உண்டாகும். சிலருக்கு சருமத்தில் கொப்புளங்கள் கூட உருவாகும். பெர்ஃப்யூம் அடித்துக் கொண்டு வெளியில் சென்றால் சூரிய ஒளியில் உடல் பட்டு இன்னும் நிலைமை மோசமாகும்.

எதனால் ஒவ்வாமை ஏற்படுகிறது?

வாசனை திரவியங்களில் செயற்கை ரசாயனங்களின் கலவை அதிகமாக உள்ளது. சராசரியான வாசனை திரவியங்களில் சுமார் 14 வகையான ரசாயனப் பொருள்கள் உள்ளன. வாசனை திரவியங்கள் உள்ள பாட்டிலைத் தொடும்போது, அதைத் தனது உடலில் அப்ளை செய்து கொள்ளும்போது, பிறர் அவற்றை உபயோகித்திருக்கும் போது அதை முகர்ந்தாலும் ஒத்துக்கொள்ளாது.

இவற்றிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

பெர்ஃப்யூம் அலர்ஜி இருப்பவர்கள் அவற்றை முழுவதுமாக விலக்கி வைக்கலாம். அதற்கு பதிலாக இயற்கை முறையில்  தயாரிக்கப்பட்ட தாவர அடிப்படையிலான பெர்ஃப்யூம்களை உபயோகிக்கலாம். ஆனால், செயற்கை ரசாயனங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட பெர்ஃப்யூம்கள் வேண்டாம்.

பணிபுரியும் இடத்தில் அல்லது பொது இடங்களில் அதிக அளவில் வாசனை நிறைந்த பெர்ஃப்யூம் உபயோகிப்பவரிடம் இருந்து சற்று தள்ளியே இருக்கலாம். உங்களைச் சுற்றியும் ஒரு ஏர் பியூரிஃபையரை வைத்துக் கொள்ளலாம். அது இதுபோன்ற கடுமையான வாசனைகளில் இருந்து காப்பாற்றும்.

உடன் பணிபுரிபவரிடம் உங்களுக்கு இருக்கும் இந்த ஒவ்வாமை பற்றி சொல்லி அவர்களை குறைவாக போட்டுக்கொண்டு வர சொல்லலாம். அதே சமயம் உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை நன்றாக அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

பெர்ஃப்யூம் உபயோகிக்கும் விதம்: நிறைய பேருக்கு எப்படி பெர்ஃபியூம் அடிப்பது என்பதே தெரியவில்லை. தனக்கு மட்டும் பெர்ஃபியூம் அடித்துக்கொள்ளாமல் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும், அந்த ஏரியாவுக்கே பெர்ஃபியூம்  அடித்தது போல எக்கச்சக்கமாக அடித்துக் கொண்டு அந்த சூழ்நிலையையும், மனிதர்களையும்  மூச்சுத் திணற செய்வார்கள். இது மிகவும் தவறு.

பொதுவாக, பெர்ஃபியூம்களை மணிக்கட்டு, கழுத்து, காதின் பின்புறம் மற்றும் முழங்கையின் உட்புறத்தில் மட்டும்தான் உபயோகிக்க வேண்டும். இந்த ஏரியாக்கள் மட்டுமே வெப்பமடையும். அதனால் அங்கு உபயோகித்தால் போதும்.

பெர்ஃப்யூம் என்பது ஒரு தனி மனிதனுடைய உபயோகத்திற்காகத்தானே தவிர, பிறரின் மூக்கை பதம் பார்ப்பதற்கு அல்ல. பெர்ஃப்யூம்களை உபயோகிக்கும் போது உடலில் இருந்து ஆறு இன்ச் தள்ளி வைத்து தான் அவற்றை உபயோகிக்க வேண்டும். கொசு மருந்து அடிப்பது போல அல்லாமல், மிகவும் மைல்டாக உபயோகித்தாலே போதுமானது.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT