ஃபிரைடு ரைஸ் சிண்ட்ரோம்  https://www.firstpost.com
ஆரோக்கியம்

ஃபிரைடு ரைஸ் சிண்ட்ரோம் தரும் பக்கவிளைவுகள் பற்றி தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

‘ஃபிரைடு ரைஸ் சிண்ட்ரோம்’ என்பது பேசிலஸ் செரியஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் உணவு நச்சுத்தன்மையைக் குறிக்கிறது. சரியாக சமைக்கப்படாத அல்லது சேமிக்கப்படாத உணவை உண்ணும் போது உடலுக்கு பல தீமைகள் ஏற்படும். அது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

நீரூற்றி வைத்த பழைய சாதத்தில் ஏகப்பட்ட நன்மைகள் உண்டு. நமது முன்னோர்கள் காலையில் எழுந்து பல் துலக்கி விட்டு, காஃபி, டீ அருந்தாமல், பழைய சாதத்தில் உள்ள நீரை அருந்தினார்கள். அவர்களது உடலும் ஆரோக்கியமாக இருந்தது. தற்போது பழைய சாதத்தை மறந்து விட்டு, ஆரோக்கியமில்லாத உணவைத்தான் உண்கிறோம்.

அரிசியை சமைக்கும் முன்பு அதை சிறிது நேரம் நீரில் ஊற வைத்து, இரண்டு மூன்று முறை நன்றாக கழுவி, நீரில் அலசிவிட்டு, அதன் பின்பு அதை நன்றாக வேகவைக்க வேண்டும். உண்டு முடித்த பின் மீதம் உள்ள தேவையில்லாத உணவை, ஆறியதும் ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி போட்டு குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும்.

மறுநாள், அதை  வெளியில் எடுத்து வைத்து அறை வெப்பநிலையில் சிறிது நேரம் வைத்து, பின்னர் சூடுபடுத்தி உண்ண வேண்டும். அப்படி இல்லாமல் சமைத்த சாதத்தை சரியாக பாதுகாக்கப்படாமல் வைத்திருந்தால், அதில் பேசிலஸ் செரியஸ் என்ற பாக்டீரியாக்கள் பெருகி நச்சுக்களை உருவாக்கும். அதை உண்ணும்போது, பல உடல் நலக்குறைவுகளை ஏற்படுத்தும்.

ஃபிரைடு ரைஸ் சிண்ட்ரோம் ஏற்படுத்தும் பக்க விளைவுகள்:

1. வாந்தி: பாக்டீரியாக்கள் உற்பத்தி செய்யும் நச்சுக்கள் காரணமாக இரைப்பை மற்றும் குடல் பாதிக்கப்படும். ஒரு வகையான குமட்டல் உணர்வு தோன்றும். வயிற்றில் ஒரு சங்கடமான உணர்வு ஏற்படும். கடுமையான வாந்தி ஏற்படலாம். இது நச்சுக்களை வெளியேற்ற உடல் முயற்சி செய்கிறது என்று அர்த்தம்.

2. வயிற்றுப்போக்கு: பல முறை வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இது நச்சுக்களால் குடலில் ஏற்படும் எரிச்சலின் விளைவாகும். மேலும், வயிற்றுப் பிடிப்புகள் ஏற்படும்.  நச்சுக்களுக்கு எதிராக இரைப்பையும் குடலும் வினையாற்றுவதால் வயிற்றுப் பகுதியில் கடுமையான வலி அல்லது அசௌகரியம்  ஏற்படும்.

3. பசியின்மை: குமட்டல் மற்றும் வாந்தியின் விளைவாக பசியின்மை தோன்றும். உணவு உண்ணப் பிடிக்காமல் போகும்.

4. நோய் எதிர்ப்பு அமைப்பு பாதிப்பு:  கெட்டுப்போன உணவு உட்கொண்ட ஆறிலிருந்து 24 மணி நேரத்திற்குள் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். சில சமயங்களில் வயிற்றுப்போக்கு வாந்தி போன்றவை நீண்ட காலம் நீடிக்கலாம். கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டால் உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு ஆபத்தில் முடியலாம். இதனால் சிறு குழந்தைகள் முதியவர்கள் போன்றவர்களுக்கு நோய் எதிர்ப்பு அமைப்பு பாதிக்கப்படும்.

எனவே, அரிசியை முறையாக சமைத்து உண்ண வேண்டும். மீதமுள்ள சாதத்தை முறையாக நீரூற்றி வைத்து உண்ணலாம். பிரியாணி போன்ற உணவு வகைகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து  சேமித்துவிட்டு, மீண்டும் சூடுபடுத்தி உண்ண வேண்டும். அதை விட சிறந்த வழி அளவாக சமைத்து உண்பதுதான். தேவைப்படும்போது மீண்டும் சமைத்து உண்பது நல்லது.

ஓ! இப்படித்தான் நம்ம உடல் வெப்பத்தை கட்டுப்படுத்துதா? 

மழைக்கால சிறுநீர் தொற்று பாதிப்பும் காரணங்களும்!

பணி ஓய்விற்குப் பின் வரும் காலம் பயனற்றதா?

சிறுகதை: 'லக்கி லதா'!

ருசியான கப்பக்கிழங்கு புழுக்கும் சின்ன வெங்காய தொக்கும்!

SCROLL FOR NEXT