வயதானால் ஏற்படும் மிகவும் குறிப்பிடத்தக்க உடல்நல சவால்களில் ஒன்று தசை வலி மற்றும் பலவீனம். நாம் 30 வயதை எட்டும்போது, ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் 3 முதல் 5 சதவிகிதம் தசை தனது பலத்தை இழக்கத் தொடங்குகிறது. இதற்கு சர்கோபீனியா என்று பெயர்.
சர்கோபீனியாவின் பாதிப்பு 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு 5 முதல்13 சதவிகிதம் மற்றும் 80 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு 11 முதல் 50 சதவிகிதம் வரை இருக்கும். சர்கோபீனியா அன்றாட செயல்பாடு மற்றும் வாழ்க்கைத் தரத்தை எதிர்மறையாக பாதிக்கும். நடப்பதில் சிரமம், படிக்கட்டுகளில் ஏறுதல் மற்றும் கனமான பொருட்களை எடுத்துச் செல்வது ஆகிய செயல்களை முடக்கும். நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் (சிஓபிடி), நாள்பட்ட சிறுநீரக நோய், இதய செயலிழப்பு, மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் (HIV), நீரிழிவு நோய், புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
சர்கோபீனியாவின் காரணங்கள்: சர்கோபீனியாவின் முதன்மைக் காரணம் முதுமை என்றாலும் பிற காரணங்களும் இதற்கு வழிவகுக்கின்றன. உடல் ரீதியாக செயலற்ற நிலையில் இருப்பது மற்றும் போதுமான புரதத்தை உட்கொள்ளாதது வயதானவர்களுக்கு சர்கோபீனியா ஏற்படுவதற்கான முக்கியக் காரணிகளாகும். உடல் பருமன் மற்றொரு காரணியாக இருக்கலாம்.
உட்கார்ந்த வாழ்க்கை முறை: போதுமான உடல் செயல்பாடு அல்லது உடற்பயிற்சி இல்லாதது ஒரு நபருக்கு சர்கோபீனியா அபாயத்தை அதிகரிக்கும். வயதானவர்கள் குறைவாக நடப்பது விரைவான தசை இழப்பு, பலவீனம் மற்றும் அதிக நோய் அபாயத்திற்கு வழிவகுக்கிறது.
ஆரோக்கியமற்ற உணவு: ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வது ஊட்டச்சத்தை குறைக்கும். எனவே, சர்கோபீனியா அபாயத்தை அதிகரிக்கும். கலோரிகள் மற்றும் புரதங்கள் குறைவாக உள்ள உணவு குறிப்பாக தசை வலிமையை இழக்க வழிவகுக்கும். சர்கோபீனியா தசைக்கூட்டு அமைப்பை பாதிப்பதால், எலும்பு முறிவுகளுக்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கும். அறுவை சிகிச்சைகளுக்கும் இது வழிவகுக்கும்.
சர்கோபீனியாவை கையாள்வது எப்படி?
சர்கோபீனியாவை முற்றிலும் தடுக்க முடியாது. இருப்பினும், நிலைமையை நிர்வகிப்பதற்கும் கடுமையான சிக்கல்களுக்கு முன்னேறுவதைத் தடுப்பதற்கும் வழிகள் உள்ளன.
1. ஆரோக்கியமான உணவை உண்ணுதல்: கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற எலும்புகளுக்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்களைப் பெற உணவில் பால் பொருட்களைச் சேர்க்கவும். பச்சைக் காய்கறிகள், உலர்ந்த பழங்கள், டோஃபு போன்ற உணவுகள் மற்றும் பால், பாலாடைக்கட்டி மற்றும் தயிர் போன்ற பால் பொருட்கள், மீன், சிவப்பு இறைச்சி, கல்லீரல், முட்டையின் மஞ்சள் கரு போன்றவற்றை உண்ண வேண்டும்.
2. வைட்டமின் டி அவசியம்: தினமும் இருபது நிமிடங்கள் போதுமான சூரிய ஒளியில் நின்று வைட்டமின் டியைப் பெற வேண்டும். இது எலும்புகளுக்கு பலம் சேர்க்கும்.
3. சுறுசுறுப்பான உடல் செயல்பாடு: சைக்கிள் ஓட்டுதல், நடனம் மற்றும் விறுவிறுப்பான நடைப்பயிற்சி செய்யவேண்டும். ஓட்டம், ஜாகிங் மற்றும் ஜம்பிங் போன்ற அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் பயிற்சிகளைத் தவிர்க்கவும். பிரஸ் - அப்கள், பளு தூக்குதல் அல்லது ஜிம்மில் எடை உபகரணங்களைப் பயன்படுத்துதல் போன்ற எதிர்ப்புப் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.
4. ஆரோக்கியமற்ற பழக்கங்களைத் தவிர்ப்பது: மது அருந்துதல், புகைபிடித்தல், போதைப்பொருள்கள் உட்கொள்ளுவதை நிறுத்த வேண்டும். இளையவர்களுக்கும் சர்கோபீனியா ஏற்பட வாய்ப்புள்ளது. சர்கோபீனியாவுக்கு அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் எதுவும் இல்லை. மாறாக, வாழ்க்கை முறை மாற்றங்களே அவசியம்.