மனித உடலின் மற்ற பகுதிகளைப் போல அல்லாமல் உதடுகளில் எண்ணெய் சுரப்பிகள் இல்லை. உதடுகளால் ஈரப்பதத்தை உற்பத்தி செய்ய முடியாது. இதனால் அடிக்கும் வெயிலில் அடிக்கடி உதடுகள் உலர்ந்து போகும். உதடுகள் உலர்ந்து போவதைத் தடுக்க லிப் பாம்களை உபயோகிக்கலாம். இவை உதடுகளில் ஊடுருவி நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. உதடுகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையில் ஒரு தடையை உருவாக்குவதன் மூலம் உதடுகளை ஈரமாக வைக்கிறது.
லிப் பாம் பயன்படுத்துவதன் நன்மைகள்:
1. ஈரப்பதமாக்குதல்: லிப் பாம்களில் பெரும்பாலும் தேன், மெழுகு, ஷியா வெண்ணெய் மற்றும் எண்ணெய்கள் போன்ற பொருட்கள் உள்ளன. அவை உதடுகளை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகின்றன. உதடுகள் உலர்ந்து போவதையும் வெடிப்பதையும் தடுக்கின்றன.
2. பாதுகாப்பு: சூரிய ஒளியில் இருந்து உதடுகளைப் பாதுகாக்க சில லிப் பாம்களில் SPF உள்ளது. இது வெளியே செல்லும்போது உதடுகள் உலர்ந்து போவதைத் தடுக்கிறது.
3. உடனடி நிவாரணம்: உதடுகள் வெடித்திருக்கும்போதோ அல்லது உலர்ந்திருக்கும் நிலையிலோ லிப் பாமை தடவும்போது அது உடனடி நிவாரணத்தை அளிக்கிறது. உதடுகளுக்கு ஈரப்பதத்தை அளித்து நீண்ட நேரம் உதடு காயாமல் வைக்கிறது.
தரமான லிப் பாம் எப்படி இருக்க வேண்டும்?
நாம் பயன்படுத்தும் லிப் பாம் தரமானதாக இருக்க வேண்டும். அதில் பின்வரும் பொருள்கள் கட்டாயம் இருக்க வேண்டும் அவை: ஹையலூரோனிக் அமிலம், பெட்ரோலியம் ஜெல்லி, ஷியா வெண்ணெய், தேன், மெழுகு. வைட்டமின் ஈ ஆகியவையாகும்.
ஹையலூரோனிக் அமிலம் ஒரு சக்தி வாய்ந்த ஈரப்பதமாகும். இது உதடுகளுக்கு ஈரப்பதத்தை அளித்து நீண்ட நேரம் உதடு காயாமல் வைக்கிறது. பெட்ரோலியம் ஜெல்லி, ஷியா வெண்ணெய் மற்றும் தேன் மெழுகு ஆகியவை நீர் இழப்பைத் தடுக்கின்றன. மேலும், வைட்டமின் ஈ ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும், இது புற ஊதா கதிர்வீச்சிலிருந்தும் ஃப்ரீரேடிக்கல் சேதத்திலிருந்தும் உதடுகளைக் பாதுகாக்கிறது. உதடுகளை சூரிய வெப்பத்தில் இருந்து பாதுகாக்க குறைந்தபட்சம் SPF 15 கொண்ட லிப் பாம் தயாரிப்பைத் தேர்ந்தெடுப்பதும் முக்கியம்.
லிப் பாமில் என்னவெல்லாம் இருக்கக்கூடாது?
நாம் பயன்படுத்தும் லிப் பாம் தரமற்றதாக தேவையில்லாத பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதாக இருந்தால் அது தீங்கு விளைவிக்கும். பின்வரும் பொருட்கள் கொண்ட லிப் பாமை தவிர்க்க வேண்டும். அவை: பினோல், மெந்தோல், சாலிசிலிக் அமிலம், லானோலின் மற்றும் வெண்ணிலா அல்லது இலவங்கப்பட்டை போன்ற சில வாசனைகள் அல்லது சுவைகள் கொண்ட தயாரிப்புகளும் தீங்கு விளைவிக்கும்.
வாசனை திரவியங்கள் போன்ற லிப் பாம்களில் உள்ள சில பொருட்கள் சில நபர்களுக்கு ஒவ்வாமை அல்லது எரிச்சலை ஏற்படுத்தலாம். ஏதேனும் ஒவ்வாமை, எதிர்விளைவுகள் மற்றும் பாதகமான விளைவுகள் ஏற்பட்டால் லிப் பாமை பயன்படுத்துவதை நிறுத்துவது அவசியம். இயற்கையான அல்லது ஆர்கானிக் லிப் பாம்களைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.
உதடுகளை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் இயற்கை வழிகள்: போதுமான தண்ணீர் குடிப்பதன் மூலம் உதடுகள் ஈரப்பதமாக இருக்கும். உதடுகள் காய்ந்து போயிருந்தால் அவற்றை நாவால் ஈரப்படுத்தக் கூடாது. மீண்டும் மீண்டும் அது உலர்ந்து விடும். உமிழ் நீர் வேகமாக ஆவியாகி உதடுகளை வெகுவாக உலரச் செய்யும்.