மரிக்கொழுந்து 
ஆரோக்கியம்

மரிக்கொழுந்து மணத்துக்கு மட்டுமில்லை; மருத்துவத்துக்கும்தான்!

பொ.பாலாஜிகணேஷ்

ரிக்கொழுந்து இது பூக்கடைகளில் கிடைக்கும். ஆனால், அதை நாம் ஒரு பொருட்டாகவே நினைப்பது இல்லை. இதில் என்ன இருக்கு வெறும் வாசனைதானே என நாம் கடந்து வந்து விடுவோம். ஆனால் மரிக்கொழுந்தில் மகத்துவம் மிக்க மருத்துவம் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? மரிக்கொழுந்து! பசுமை வண்ணத்தில் சிறிய இலைகளுடன், மெலிதான உருவில் தண்டுகளாகக் காட்சியளிக்கும். அவை இருக்கும் இடங்கள் எல்லாம் நறுமணத்தைப் பரப்பும்!

நமது தேசத்தில் மிக அதிக அளவில் பயிரிடப்படும் மரிக்கொழுந்து, வாசனை மலர் மாலைகளிலும், மலர் பூங்கொத்துக்களிலும் சேர்க்கப்படுகிறது. வாசனை எண்ணை தயாரிப்பிலும், வாசனை மலர் மருத்துவத்திலும், அறை நறுமணமூட்டியாகவும், பயன்படுகிறது. அழகு சாதன பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்களின் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மரிக்கொழுந்து, வண்டல் நிலம், கரிசல் நிலம், மற்றும் செம்மண் நிலங்களில் அதிக அளவில் வளரும்.

மிதமான மழை மற்றும் சூரிய ஒளி மரிக்கொழுந்து செடிகளை நன்கு வளர வைக்கும் தன்மை உள்ளவை. அடிக்கடி தண்ணீர் பாய்ச்சி, உரம் மற்றும் மருந்து தெளிக்க வேண்டிய அவசியம் இல்லாமலேயே, நன்கு செழித்து வளரும் தன்மை மிக்கது. ஓராண்டு காலம் வரை இலைகள் மற்றும் தண்டுகள் மூலம், நறுமணப் பயன்கள் தரும் மரிக்கொழுந்து, அடர்த்தியாக, நிறைய கிளைகளுடன் வளரும்.

மனிதரின் பல்வேறு உடல் நல பாதிப்புகளுக்கு தீர்வாகும் தன்மைமிக்கது. சருமத்தில் தொற்றுக்களால் ஏற்படும் பாதிப்புகள், சிறுநீரக கோளாறுகள், உடல் வலி, தூக்கமின்மை மற்றும் வயிற்று பாதிப்புகளைப் போக்கி, உடலை நலமாக்கக் கூடியது. மன நிலை சார்ந்த மன உளைச்சல், மன வேதனை பாதிப்புகளை சரி செய்து, மன நிலையை சீராக்கும் ஆற்றல் மிக்கது மரிக்கொழுந்து. உடலுக்கு கெடுதல் செய்யும் வியாதிக் கிருமிகளை அழிக்கும் மரிக்கொழுந்து, சருமத்தில் ஏற்படும் பூஞ்சைத் தொற்றுகளுக்கு மருந்தாகிறது. உடல் வீக்கங்கள் கட்டிகள் தரும் வலியைப் போக்கி, அவற்றை சுருங்க வைக்கிறது. மன நல பாதிப்புகளுக்கு ஆற்றல்மிக்க நிவாரணமாகத் திகழ்கிறது.

சிலருக்கு மன உளைச்சல்கள் அல்லது உடல் நல பாதிப்புகள் காரணமாக, இரவில் உறக்கம் வராது. இத்தகைய பாதிப்புகள் நீங்கி, நல்ல தூக்கம் வர உதவுகிறது மரிக்கொழுந்து. தினமும் உறங்கப் போகுமுன், தலையணையின் கீழே, ஒரு கொத்து, மரிக்கொழுந்து இலைகளைத் தண்டுடன் வைத்துக்கொண்டு, அதன் பின் உறங்கச் செல்ல இதுநாள் வரை உறக்கம் இல்லாமல் தவித்தவர்களின் கண்களைத் தூக்கம் மெள்ளத் தழுவும்.

மரிக்கொழுந்து இலைகளை அரைத்து விழுதாக்கி, அதில் ஒரு தம்ளர் தண்ணீர் கலந்து சற்று நேரம் ஊற வைக்கவும். பின்னர், அந்த நீரைப் பருகி வர வயிற்று வலி குணமாகும். சருமத்தில் பூஞ்சை தொற்றால் சரும கோளாறு உள்ளவர்கள் இந்த நீரை தினமும் பருகி வர, நச்சுத் தொற்றுகளினால் ஏற்பட்ட சரும பாதிப்புகள் விலகி விடும். மரிக்கொழுந்து உடல் சூட்டினால் உண்டாகும் வயிற்றுக் கடுப்பு மற்றும் நீர்க்கடுப்பு பாதிப்புகளை தணிக்கும் ஆற்றல் மிக்கது.

வாணலியில் நல்லெண்ணை விட்டு சற்று சூடு வந்ததும் விழுதாக அரைத்து வைத்திருக்கும் மரிக்கொழுந்துடன் சிறிது சுக்குத்தூள் கலந்து நன்கு வதக்கவும். இந்தக் கலவையை இறக்கி சற்று ஆறியதும் நெற்றியில் பற்று போல தடவி வர தலைவலி விலகும்.

சிலருக்கு வியாதிகளுக்கு உட்கொள்ளும் மருந்துகளினால் அல்லது முறையான பராமரிப்பு இல்லாத காரணங்களால், தலைமுடி செம்பட்டையாக மாறிவிடும். இதனால் இளம் வயதிலேயே வயது முதிர்ந்தது போலத் தோற்றம் உண்டாகி மன உளைச்சல் அடைவார்கள். இவர்கள் மரிக்கொழுந்து இலைகளை நிலாவாரை இலைகளுடன் கலந்து நன்கு மைபோல அரைத்து, அதைத் தலையின் மயிர்க்கால்கள் வரை நன்கு மசாஜ் செய்வதுபோல தடவி ஊற வைத்து சற்று நேரம் கழித்து குளித்து வர தலைமுடி செம்பட்டை வண்ணம் நீங்கி விரைவில் கருப்பு வண்ணம் தோன்ற ஆரம்பிக்கும்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT