Medicinal properties of Nochi leaves.
Medicinal properties of Nochi leaves. 
ஆரோக்கியம்

வலிகளைக் கண்டிக்கும் நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?

இந்திராணி தங்கவேல்

நொச்சியின் இலை மிகுந்த மருத்துவ பயன் உடையது என்பது அனைவரும் அறிந்ததே. அதில் பல்வேறு வலிகளை குணமாக்கும் சிறந்த மூலிகையாக பயன்படுவது கருநொச்சி. நொச்சி எப்படி மருந்தாகிறது. அதை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை இப்பதிவில் காண்போம். 

நீர்வளம் உள்ள இடங்களில் தானே வளரும் இயல்புடையது நொச்சி. இதன் இலை, பூ, வேர், பட்டை ஆகியவை கருப்பு நிறமாய் அமைந்த கருநொச்சி எல்லா இடங்களிலும் அரிதாக காணப்படுகின்றது. இலை வேதனை தணித்தல், சிறுநீர்ப் பெருக்குதல், நோய் நீக்கி உடல் நலம் மிகுத்தல், மாதவிலக்கைத் தூண்டுதல், நுண்புழுக்கொள்ளுதல் ஆகிய பண்புகளை உடையது. பட்டை சுரந் தணிந்து உடலை வலுவாக்கமும், சரளியகற்றி சிறுநீர் பெருக்கவும் பயன்படும். 

வலி நிவாரணி: நொச்சி இலை சாற்றுடன் மிளகுத்தூளும் சிறிது நெய்யும் கலந்து காலை, மாலை பத்தியத்துடன் சாப்பிட்டு வர மூட்டு வலி, இடுப்பு வலி, வாத வீக்கம் ஆகியவை தீரும். நொச்சி வேர் பட்டையை உலர்த்தி பொடித்து அதை தேனில் குழைத்து கொடுத்து வர வாத பிடிப்பு, நரம்பு வலி, வயிற்று வலி, நீர்க் கோவை ஆகியவை தீரும். நொச்சி இலையுடன் பாதியளவு மிளகு சேர்த்தரைத்து சுண்டைக்காய் அளவு காலை மாலை கொடுத்து வர குளிர் சுரம், செரியாமை உடம்பு வலி, கை கால் பிடிப்பு ஆகியவை தீரும். 

வேது பிடித்தல்: நொச்சி, வேம்பு, தழுதாழை, ஆடாதொடை, தும்பை, நாயுருவி, குப்பைமேனி, வேலிப்பருத்தி இவைகளை ஒரு கைப்பிடி எடுத்து முக்கால் அளவு நீர் உள்ள வாய் அகன்ற  மண்கலத்தில் இட்டு கொதிக்க வைத்து வேது பிடிக்க வாத நோய்கள் தணியும். வாரம் இரு முறை பயன்படுத்தலாம். நொச்சி இலையை நீரிலிட்டு காய்ச்சி வாத வீக்கம் உள்ள இடங்களில் வேது பிடிக்க குணமாகும். இலையை வதக்கி துணியில் கட்டிக்கொண்டு ஒத்தடம் கொடுக்க கீழ்வாதம், வாத வீக்கம் ஆகியவை குணமாகும். 

கல்லீரல் மண்ணீரல் குணமாக: நொச்சியிலையை இடித்து பிழிந்து வடிகட்டிய சாற்றுடன் சமன் அளவு கோமியம் கலந்து பருகி வர கல்லீரல், மண்ணீரல் வீக்கம் குணமாகும். 

இதர பயன்கள்: இலையை தலையணையாக பயன்படுத்தி வர மண்டை இடி, கழுத்து வீக்கம் ,பிடரி வீக்கம், சன்னி, இழுப்பு, மீக்கடைப்பு ஆகியவை தீரும். நொச்சிப் பூவை உலர்த்தி பொடித்து கற்கண்டு கலந்து காலை ,மாலை தேனில் கொடுத்து வர ரத்த வாந்தி, இரத்தபேதி ஆகியவை தீரும். நொச்சி இலை, மிளகு, கிராம்பு, பூண்டு பல் ஆகியவற்றை வாயிலிட்டு மென்று சுவைத்து சாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கினால் ஆஸ்துமாவினால் ஏற்படும் மூச்சுத்திணறல் தீரும். இம்முறையை நீடித்துப் பயன்படுத்த நோய் முற்றிலும் அகலும். நொச்சி இலையை மென்மையாய் அரைத்து பற்று போட கட்டிகள் வீக்கங்கள் தீரும். 

சிறுநீர் பிரச்சனை: நொச்சி வேரை இடித்து நீரிலிட்டு பாதியாக சுண்ட காய்ச்சிக் குடித்து வர, சிறுநீர்ப்பை அலர்ஜி தீர்ந்து, சொட்டு மூத்திரம், நீர்க் கடுப்பு, வயிற்று  மழப் புழுக்கள் ஆகியவை தீரும். 

இந்த மருத்துவ குறிப்புகளை பயன்படுத்தும் பொழுது இதற்கான வைத்தியருடன் ஆலோசனை கேட்டால், அளவு முறையிலிருந்து அனைத்தையும் பக்குவமாக எடுத்துரைப்பார்கள் .அதன்படி பயன்படுத்தினால் நிவாரணம் கிடைக்கும் .

இப்படி பல்வேறு பிரச்சனைகளை போக்கும் நொச்சியை வீட்டுத் தோட்டத்தில் வளர்த்து பயன்பெறுவோமாக!

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் அறிவோம்!

உங்க உடலில் அதிகமாக உப்பு இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள்!  

பெட்ரோல் பங்கில் கட்டாயம் இருக்க வேண்டிய வசதிகள்... இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

RCB Vs CSK: பெங்களூரு அணியே வெற்றிபெறும் – பிரையன் லாராவின் கணிப்பு!

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் 15 உணவுகள்!

SCROLL FOR NEXT