Mushroom Health Benefits
Mushroom Health Benefits 
ஆரோக்கியம்

Mushroom Health Benefits: வாரம் 2 முறை காளான் சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மைகளா?

இந்திராணி தங்கவேல்

சிறுவயதில் மழைக்காலங்களில் தோன்றும் காளானை குடைபோல் அமைந்திருக்கும் அதன் அமைப்பிற்காக கையில் பிடித்து விளையாடி மகிழ்வதுண்டு. இன்னும் படித்த காலத்தில் சிலவகை காளானிலிருந்து உயிர் காக்கும் பென்சிலின் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன என்று படித்திருக்கிறோம். ஆனால் அப்பொழுதெல்லாம் காளான் சாப்பிடும் பொருள் என்று தெரியாது. ஆனால் இப்பொழுது குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஹோட்டலுக்குச் சென்றால், அவர்கள் விரும்பிக் கேட்கும் உணவு காளான் வறுவல் தான். காளானில் நிரம்பியுள்ள சத்துக்கள் மற்றும் அதன் பயன்களைப் பற்றி இப்பதிவில் காண்போம். 

காளான்களில் நெய்க் காளான், மரக்காளான், முட்டைக் காளான், மருந்து காளான், சீமைக் காளான், விஷக்காளான், கடற்காளான் என அநேக வகைகள் உண்டு. மசக்கை காளான் என்று ஒரு வகை உண்டு. அது விஷத்தன்மை உடையது. அதை சமைத்து சாப்பிடக்கூடாது. இவைகளில் சில வகை கசப்பு தன்மை உடையவை. சில வகை காளான்களில் நச்சுத்தன்மை இருப்பதால், பொதுவாகவே கிராமப்புறங்களில் காளான்களை அதிகமாக வாங்கிப் பயன்படுத்த மாட்டார்கள். இன்றும் சைவ உணவை மட்டுமே விரும்பி சாப்பிடுபவர்கள் காளானை வாங்க மாட்டார்கள். அதில் எப்படி சமைத்தாலும் ஒரு வித அசைவ வாசனை வரும் என்பதால் அதை தவிர்த்து விடுபவர்கள் இன்றும் ஏராளம். 

ஆனால் காளான், ஜீவசத்து - புரோட்டின் மிகுந்த உணவு ஆகும். சமைத்தாலும் அழியாத வைட்டமின் பி இதில் உள்ளது. மாமிசத்தில் கிடைக்கிற அதே புரதசத்து காளானில் உள்ளது. இந்த புரதம் தரத்தில் உயர்ந்தது. ரத்தசோகை வராமல் தடுக்கின்றது. நம் உடலுக்கு தேவையான முக்கியமான அமினோ அமிலங்கள் போதிய அளவு இதில் உள்ளது. இதில் கொழுப்பு சத்து கிடையாது. நீரிழிவு மற்றும் இதய நோயாளிகளுக்கு ஏற்றது .இதை நியூஸ் பேப்பரில் சுற்றி ஃபிரிட்ஜில் வைத்தால் கெடாமல் இருக்கும். 

காளானை வேக வைக்கும் போது சிறிது எண்ணெய் மட்டும் சேர்த்தால் போதும். தண்ணீர் விட தேவை இல்லை. வேண்டுமானால் லேசாக தெளித்துக் கொள்ளலாம். அதுவும் அதில் சேர்க்கப்படும் மசாலாவிற்கு ஏற்ப தண்ணீர் தெளிக்க வேண்டும். காளான் சூப், காளான் பிரை, காளான் கிரேவி அனைத்திலும் சிறிது மிளகு, இஞ்சி பூண்டு விழுது அதிகமாக கலந்து சமைப்பவர்கள் உண்டு. 

இதில் காணப்படுகிற போரிக் அமிலம் ரத்த சோகை என்கிற நோயை தீர்க்கிறது. காளானில் அடங்கியுள்ள 'ரெடினே' என்கிற கூட்டுப்பொருள் புற்றுநோயை தடுக்க வல்லது. மேலும் உடல் பருமனை குறைப்பதற்கும் காளான் உதவுகிறது. புரதச்சத்து செரிந்துள்ள காளானில் பொட்டாசியம், சுண்ணச் சத்து, பாஸ்பரஸ் ,இரும்பு ஆகிய தாதுச் சத்துக்கள் உள்ளன ஏ,சி ,டி ,கே போன்ற வைட்டமின் சத்துக்களும் உண்டு. 

இரவில் சிலருக்கு வியர்த்துக் கொட்டும். இதற்கு காளான் தான் அருமையான மருந்து. நாம் பயன்படுத்துகிற சைவ உணவு வகைகளிலேயே 34% புரதச்சத்து அடங்கிய சத்துணவு காளான் எனலாம். காலானை சமைக்கும் போது காளான் உற்புறம் வெளுத்து இருக்கும் பகுதியை எந்தவித பயமும் இன்றி பயன்படுத்தலாம். அதன் உட்பகுதியில் லேசாக கருப்பு படிந்து விட்டாலும் அதை பயன்படுத்தாமல் இருப்பதுதான் நல்லது. அதேபோல் நிறம் மாறிய பழைய காளானையும் எடுத்து போட்டு விட வேண்டும். காளானை வாங்கியவுடன் ஃபிரஷ்ஷாக சமைத்து சாப்பிடுவதால் தான் எல்லா சத்தும் உடம்பில் சேரும். 

வாரம் இரண்டு முறை இந்த காளானை உணவில் சேர்த்துக் கொள்வது நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, கூடவே இன்றைய உணவு கலாச்சாரத்தையும் இது மேம்படுத்தும். 

உயிருக்கு உலை வைக்கும் உணவுகள்!

தெக்கத்து சட்னி மற்றும் பீட்ரூட் சட்னி செய்யலாம் வாங்க!

481 அடி உயரத்தில் ஒரு பிரம்மாண்டம்!

மின்சார வாகனங்களின் இருண்ட பக்கம்! 

காற்றின் மாசுபாடும் அதை தடுத்து நம்மைப் பாதுகாப்பதும்!

SCROLL FOR NEXT