கால் ஆணி என்பது பலருக்கு ஏற்படும் ஒரு பொதுவான பாதிப்பாகும். இது காலில் வலி மற்றும் அசௌகர்யத்தை ஏற்படுத்தும். காலின் அடிப்பகுதியில் ஏற்படும் இந்த கால் ஆணிப் பிரச்சனை உராய்வு அல்லது அழுத்தம் காரணமாக கால்களில் உருவாகின்றன. இதற்கு பல்வேறு சிகிச்சைகள் இருந்தாலும், இயற்கை வைத்திய முறைகளிலேயே இதிலிருந்து நிவாரணம் பெற முடியும். இந்த பதிவில் கால் ஆணி விரைவில் குணமடைய செய்யக்கூடிய வீட்டு வைத்திய முறைகள் பற்றி பார்க்கலாம்.
வெந்நீரில் ஊறவைத்தல்: உங்கள் கால்களை வெதுவெதுப்பான நீரில் ஊற வைப்பது மூலமாக, கடினமான கால் ஆணி மென்மையாகி அவற்றை அகற்றுவதை எளிதாக்கும். வெதுவெதுப்பான நீரில் உப்பு அல்லது சிறிதளவு டீட்ரீ ஆயில் சேர்த்து, உங்கள் கால்களை சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். இது கால் ஆணியுடன் தொடர்புடைய வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவும்.
பியூமிஸ்ட் ஸ்டோன்: உங்கள் கால்களை ஊற வைத்த பிறகு, ஆணி இருக்கும் பகுதியில் சொரசொரப்பாக இருக்கும் பியூமிஸ்ட் ஸ்டோன் பயன்படுத்தி மெதுவாக தேய்த்து இறந்த செல்களை அகற்றவும். இதற்கு அந்த கல்லை நனைத்து ஆணியின் மீது வட்ட இயக்கத்தில் தேய்க்கவும். தேய்க்கும்போது அதிக அழுத்தம் கொடுக்கக் கூடாது. இப்படி செய்வது கால் ஆணியின் அளவை படிப்படியாக குறைக்க உதவும்.
ஆப்பிள் சைடர் வினிகர்: ஆப்பிள் சைடர் வினிகரில் அமிலப் பண்புகள் உள்ளன. அது கால் ஆணியை மென்மையாக்கி விரைவில் குணமடைய உதவும். ஆப்பிள் சைடர் வினிகரை கார்ட்டன் துணியில் சிறிதளவு தொட்டு ஆணியின் மீது வைக்கவும். இதை கட்டு போட்டு இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடலாம். கால் ஆணி குணமாகும் வரை தினசரி இந்த செயல்முறையை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்.
எலுமிச்சை சாறு: எலுமிச்சை சாறில் இயற்கை அமிலங்கள் உள்ளன. அவை ஆணியை கரைத்து அதன் அளவைக் குறைக்க உதவும். எலுமிச்சை சாறு ஆணியின் மீது தடவி 15 நிமிடங்கள் ஊறிய பிறகு கழுவி விடவும். இவ்வாறு தினசரி தொடர்ச்சியாக செய்து வந்தால் விரைவில் கால் ஆணி சரியாகும்.
பாதுகாப்பு: கால் ஆணியின் மேல் உராய்வு மற்றும் அழுத்தத்தைத் தடுக்க அதை பாதுகாக்க வேண்டியது அவசியம். எனவே கால் ஆணி எதிலும் படாதவாறு இடையில் ஒரு தடையை உருவாக்குவது நல்லது. இது நடக்கும் போது ஏற்படும் அசௌகரியத்தை குறைத்து, ஆணி விரைவில் குணமடைய உதவும்.
சரியான காலணிகள்: நீங்கள் சரியான காலணிகளை பயன்படுத்தவில்லை என்றால், அது ஆணியின் அளவை அதிகரிக்கச் செய்யும். எனவே ஆணியின் மேல் அதிக அழுத்தம் கொடுக்காத காலணிகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும்.
மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி கால் ஆணியை நீங்கள் வீட்டிலிருந்தபடியே எளிதாக குணப்படுத்த முடியும். இவற்றை முயற்சி செய்தும் தொடர்ந்து உங்களுக்கு வலியை உண்டாக்கினால் தகுதியான சுகாதார நிபுணரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.