இன்றைய தலைமுறையினரில் பலரும் நடைபயிற்சி மேற்கொள்வதை தவிர்க்கின்றனர். நடைபயிற்சி நமக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள இந்தப் பதிவைக் காண்போம்.
காலைக் கதிரவன் எழும் முன்னரே, சிலர் நடைபயணம் மேற்கொள்ளத் தயாராகி விடுவார்கள். அதிலும், குறிப்பாக விளையாட்டு வீரர்கள் மற்றும் முதியவர்கள் தான் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இன்றைய தலைமுறையினர் நடைபயிற்சி மேற்கொள்ளாமல் சோம்பேறித்தனமாக உள்ளனர். அவர்கள் எல்லோரும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டுமெனில் மாற்றம் ஒவ்வொருவருக்குள்ளும் உண்டாக வேண்டும். மாற்றத்தை உண்டாக்கக் கூடிய வழியை நாம் கையாள வேண்டும். நடைபயிற்சியை சிரமம் பார்க்காது மேற்கொள்ளுங்கள். ஆரோக்கியமான வாழ்வு உங்கள் வசப்படும். முதுமையிலும், இளமையாக வாழலாம். வயதானாலும் ஊன்றுகோலின் தேவை இருக்காது.
நடைபயிற்சி மேற்கொள்வதால், வழக்கத்தை விட 70 மடங்கு ஆக்ஸிஜன் என்ற பிராண வாயுவை உடல் கிரகித்துக் கொள்கிறது. பிராண வாயு அதிகரிப்பதால் இரத்தம் சுத்தமாகி, சுழற்சி வேகம் அதிகரிக்கும். உடல் கழிவுகள் வெளியேற்றப்படும். வியர்வையானது அதிகளவில் உப்பாக வெளியேறி உடலுக்கு நன்மை பயக்கும். மேலும், உடல் துர்நாற்றமும் குறையும்; பசி, தாகம், ஜீரணம் ஒழுங்குபடும்; எலும்பு திசுக்களில் சத்துகள் அதிகரிக்கும்; எலும்புத் தசைகளில் சிதைவு குறைந்து வலுப்பெறும். நுரையீரலில் சிற்றறைத் திசுக்கள் நலம் பெற்று சுவாசம் சீராகி மேம்படும். இதய செயல்பாடு சிறப்படைந்து, இதயத் திசுக்கள் வலிமை பெறும்.
உடல் எடை குறைய வேண்டுமெனில், நடைபயிற்சி மேற்கொள்வது ஒன்றே மகத்தான தீர்வு. உடலில் புதிய செல்கள் உருவாகி இளமையைக் காத்து, தொப்பை குறைய வழிவகுக்கும். நீரிழிவு நோய்க்கு சிறப்பான மருந்து நடைபயிற்சி தான். காலையில் தண்ணீர் குடித்து விட்டு சிறிது தூரம் நடந்தாலே போதும், கடின மலச்சிக்கலும் தீர்ந்து விடும். மனச்சுமை, மன அழுத்தம், உறக்கமின்மைக்கு நடைபயிற்சி ஒன்று தான் மிகச் சிறந்த தீர்வு.
சிறுவர்களிடம் இப்போதிலிருந்தே நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் என நாம் அறிவுறுத்தி, செயல்படுத்திக் காட்ட வேண்டும். மாணவர்கள் காலையில் நடப்பதால் படிப்பில் கவனச் சிதறலின்றி நன்றாகப் படிப்பார்கள்.வேலைக்கு செல்கையில் நடந்து செல்பவர்களும் உண்டு. அவர்களுக்கு அந்நடையே பயிற்சி தான். அற்புதப் பயன்கள் பெற நடைபயிற்சி தினந்தினம் வேண்டும். நடைபயிற்சி மேற்கொள்கையில், கைபேசியைப் பயன்படுத்த வேண்டாம். அது நம் கவனத்தை சிதறடித்து விடும். பாடல் கேட்டுக் கொண்டே நடைபயிற்சி மேற்கொள்வதும் தவறானப் பழக்கம். நம் கவனம் முழுவதும் நடைபயிற்சியில் இருந்தால் மட்டுமே நம்மால் முழுப்பயனையும் அடைய முடியும்.