'2025ஆம் ஆண்டு நம் நாட்டிலிருந்து இந்த நோய் ஒழிக்கப்பட்டுவிடும்' என்று தனது, 'மன் கீ பாத்' வானொலி நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். அது எந்த நோய்? அது எப்படி சாத்தியமாகும்?
அதுதான் காசநோய். “இதை ஒழிப்பதற்கான முயற்சியை 'நிக்க்ஷய் மித்ரா' அமைப்பு முன்னெடுத்திருக்கிறது” என்கிறார் பிரதமர்.
உலக சுகாதார அமைப்பு 2030ம் ஆண்டில் உலக அளவில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 80 சதவிகிதத்தை குறைக்கப்போவதாகவும், இந்த நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையை 90 சதவிகிதமாகக் குறைக்கப்போவதாகவும் அறிவித்திருக்கிறது.
அப்படியிருக்க, இந்தியாவால் அதற்கு சில ஆண்டுகள் முன்னதாகவே இந்த சாதனையை செய்ய முடியுமா என்பதை அறிய, 'நிக்க்ஷய் மித்ரா' திட்டத்தைப் பற்றி அறிந்து கொள்வோம்.
அது Ni-kshay Mitra. அதாவது, ‘க்ஷய்’ என்றால் க்ஷயரோகம் என்று அழைக்கப்படும் காச நோய். 'நி' என்பது முடிவு என்பதை இங்கு குறிக்கிறது. 'காசநோயை முடிவுக்குக் கொண்டு வரும் நண்பன்.'
2012 ஜூன் நான்காம் தேதி அறிமுகமான இந்தத் திட்டத்தில் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளும் ஒவ்வொரு காசநோயாளிக்கும் மாதம் 500 ரூபாய் ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. கூடவே அந்த நோய்க்கான சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக அது பரவாமலும் தடுக்கப்படுகிறது
காசநோய் - பாதிப்புகள், சிகிச்சை முறைகள்: 1882 மார்ச் 24 ஆம் தேதி டாக்டர் ராபர்ட் கோச் என்பவர் காசநோய்க்குக் காரணமான மைக்ரோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் என்ற பாக்டீரியாவைக் கண்டறிந்தார். அந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் காசநோய் மிக மிக அதிகமாகப் பரவி, அதனால் பாதிக்கப்பட்டவர்களில் ஏழில் ஒருவரைக் காவு வாங்கிக் கொண்டிருந்தது. இதற்கான பாக்டீரியாவைக் கண்டறிந்த பிறகுதான் அதற்கு எதிரான மருந்து குறித்த ஆராய்ச்சிகள் தீவிரம் அடைந்தன.
பிரபல ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகோவ், பிரபல ஆங்கிலக் கவிஞர் ஜான் கீட்ஸ், பிரபல எழுத்தாளர் மற்றும் விமர்சகர் ஜார்ஜ் ஆர்வெல், பிரபல விஞ்ஞானியும் ஸ்டெதெஸ்கோப்பைக் கண்டுபிடித்தவருமான ரெனே லென்னக், புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர் ஜேன் ஆஸ்டின் ஆகியோர் காசநோயால் இறந்தவர்கள். நம் நாட்டைச் சேர்ந்த உருது கவிஞர் மிர்ஸா காலிப், பகத் சிங், கவிக்குயில் சரோஜினி நாயுடு, பிரபல பெண் கல்வியாளர் சாவித்ரிபாய் பூலே, சமூக செயற்பாட்டாளர் பாபா அம்தே போன்ற பலரும் கூட காசநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள்.
காசநோயால் பாதிக்கப்படுபவர்களில் உலகளவில் நான்கில் ஒரு பங்கு இந்தியாவில்தான் இருக்கிறார்களாம். காச நோயால் பாதிக்கப்படுபவர்கள் அதிகமாக இருப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. பிற பெரும்பாலான நோய்கள் உருவாக நம் உடலில் அதற்கான கிருமிகள் நூற்றுக்கணக்கிலோ ஆயிரக்கணக்கிலோ செயல்பட வேண்டும். ஆனால், காசநோயை உருவாக்க அதற்கான பத்து அல்லது இருபது கிருமிகள் போதும். தவிர, இது மெதுவாகத் தனது கைவரிசையைக் காட்டும் நோய். இதன் அறிகுறிகள் என்று தொடர்ந்து இருமுவதைக் கூறுவார்கள். ஆனால், இந்த அடிப்படை அறிகுறிகூட காச நோய்க்கிருமிகள் சில காலம் நம் உடலில் தங்கிய பிறகுதான் வெளிப்படுகிறது.
இதன் காரணமாக காசநோயால் பாதிக்கப்பட்டவர் (அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு முன்பாகவே) வெகு எளிதாக அதைப் பிறருக்குப் பரப்பிக் கொண்டிருக்கிறார். காச நோயால் பாதிக்கப்பட்டவர் இருமினாலோ தும்மினாலோ அருகில் இருப்பவர்களுக்கு அந்த நோய் மிக எளிதாகப் பரவுகிறது.
காசநோய்க்கு சிகிச்சை உண்டு. அது குணப்படுத்தக்கூடிய ஒன்றுதான். ஆனால், தொடர்ந்து சுமார் ஆறு மாதங்களுக்கு அதற்கான மருந்தை உட்கொள்ள வேண்டும். நடுவில் குணமாகிவிட்டது என்று எண்ணிக்கொண்டு அதை நிறுத்தினால் மீண்டும் வந்து தொலைக்கும். காசநோய்க்கான பாக்டீரியாவின் மேல் உறை கடினமானதாக இருப்பதும் மருந்துகள் உடனடியாக செயல்பட முடியாமைக்கு ஒரு காரணம்.
குழந்தை பிறந்தவுடன் அதற்கு அளிக்கப்படும் பி.சி.ஜி. தடுப்பு மருந்து இதுதான். இதை ஒரு முறை செலுத்தினாலே போதுமானது. பலவித காசநோய் வகைகள் (முக்கியமாக நுரையீரல் காசநோய்) உருவாகாமல் இது தடுக்கிறது. காசநோய்க்கான தடுப்பு மருந்து பெரியவர்களுக்கு உதவுவதில்லை.