தேமல் என்றால் பொதுவாக எல்லோருக்கும் தெரியும். ஏதேனும் ஒரு காலகட்டத்தில் பெரும்பாலோருக்கு உடலில் தேமல் வந்து சரியாகி இருக்கும். ஆனால் எச்சில் தேமல் (Pityriasis Rosea) மழைக்காலத்தில் குழந்தைகளுக்கும் டீன் ஏஜ் பருவத்தினருக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் உடலில் தோன்றும் ஒரு சரும பாதிப்பு.
முதலில் உடலில் ஒரே ஒரு வட்ட தேமல் தோன்றும். இது மதர் பேட்ச் (mother patch) எனப்படுகிறது. பின்பு ஒரு வாரத்தில் உடல் முழுவதும் முதுகு, வயிறு அல்லது மார்பில் முகப்பரு போன்று பொரிப்பொரியாக கொப்புளங்கள் தோன்றும். அவை ஒரு இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். இது பொதுவாக 2 முதல் 10 சென்டி மீட்டர்கள் (தோராயமாக 1 முதல் 4 அங்குலம்) அளவில் இருக்கும். இவை 'மகள் இணைப்புகள்' என்று அழைக்கப்படுகின்றன. பெரும்பாலும் பைன் மரம் அல்லது கிறிஸ்துமஸ் மரத்தின் வடிவத்தை ஒத்திருக்கும். பின் வட்ட வட்டமாக தோல் உரியும். நூற்றுக்கணக்கான கொப்புளங்கள் சூரிய வெளிச்சம் படாத உடலில், நெஞ்சு, வயிறு, முதுகு, மேற்கை மற்றும் தொடை பகுதிகளில் காணப்படும்.
வீட்டில் உள்ள மூத்தோர் இது அம்மை என்று நினைத்துக்கொண்டு பிள்ளைகளை பள்ளி, கல்லூரிக்குச் செல்ல வேண்டாம், வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று தடுப்பார்கள். வீட்டில் அவர்களைத் தனிமைப்படுத்தி விடுவார்கள். உப்பில்லாமல் சாப்பிட வேண்டும் என்று சொல்லி அதுபோன்ற உணவுகளைத் தருவார்கள்.
இது பெரிய நோய் அல்ல. சாதாரண கெடுதல் இல்லாத சரும பிரச்னைதான். இதற்கு பயப்படத் தேவையில்லை. மிக அரிதாகவே சிலருக்கு அரிப்பு இருக்கும். குழந்தைகளுக்கு காலையில் தேங்காய் எண்ணெயை தடவி, சூரிய ஒளியில் சிறிது நேரம் நிற்க வைத்து பிறகு குளிக்க வைத்தால் சீக்கிரம் சரியாகிவிடும். அதற்குப் பின்னரும் சரியாகவில்லை என்றால் அருகில் உள்ள சரும மருத்துவரை அணுகலாம்.
எச்சில் தேமல் வந்த பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பலாம். வகுப்பில் அருகில் அமரும் குழந்தைகளுக்கு இந்த நோய் தொற்றாது. பிறருடன் விளையாட அனுமதிக்கலாம். வீட்டில் உணவு பத்தியம் தேவையில்லை. துணிகளை சேர்த்து துவைக்கலாம். அந்த துணிகளில் நோய்க் கிருமிகள் இருக்காது.