ஜாதிக்காய் பொடி 
ஆரோக்கியம்

செரிமான பிரச்னைக்கு சிறந்த மருந்தாகும் ஜாதிக்காய்!

பொ.பாலாஜிகணேஷ்

ந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், மலேசியாவின் பினாங் பகுதியிலும் அதிகம் பயிரிடப்படுகிறது ஜாதிக்காய். இது கனிந்த பிறகு, அதன் சதைப்பகுதி ஊறுகாய் செய்வதற்கும், தோல் ஜாதிபத்திரி என்ற பெயரில் மசாலாப் பொருளாகவும், விதைப்பகுதி ஜாதிக்காய் என்னும் உணவு மற்றும் மருந்துப்பொருளாகவும் பயன்படுகிறது. ‘மிரிஸ்டிகா பிராக்ரன்ஸ்’ என்ற தாவரவியல் பெயரால் அழைக்கப்படும் ஜாதிக்காய், காரத்தன்மையும் இனிப்பு சுவையும் கலந்து இருப்பதால், உணவில் தனிப்பட்டதொரு சுவையைக் கொடுக்கிறது. இதன் காரணமாக, மசாலா உணவு மட்டுமல்லாமல், ரொட்டிகள், இனிப்பு உணவுகள், சாஸ் வகைகள், புட்டிங் உணவுகள் போன்றவற்றிலும் இது சேர்க்கப்படுகிறது.

ஜாதிக்காயில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய், மருந்து மற்றும் வாசனை திரவியம் தயாரிப்புத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. எண்ணெயின் பிரதானப் பொருளாக பினைன் மற்றும் மைரிஸ்டிஸின் இருக்கின்றன. இவற்றுள், மைரிஸ்டிஸின், ஜாதிக்காயால் ஏற்படும் ஒவ்வாமை அல்லது நச்சுத் தன்மைக்குக் காரணமாக இருக்கிறது. ஜாதிக்காயில் இருந்து பிரித்தெடுக்கப்படும் மற்றொரு பொருள் ஜாதிக்காய் வெண்ணெய். இதில் கொழுப்பு அமிலமும் இருப்பதால், கோகோ வெண்ணெய்க்குப் பதிலாக உணவுகளிலும், பருத்தி எண்ணெய் அல்லது பாமாயிலாக பிற தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

செரிமானக் கோளாறுகளைத் தீர்க்கும் ஜாதிக்காய், பல் வலிக்கும் சிறந்த நிவாரணியாகப் பயன்படுகிறது. ஜாதிக்காயை அரிசி சோற்றுடன் வேகவைத்து, உலர்த்திப் பின்பு இழைத்துப் பாலில் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு கட்டுப்படும் என்பதால். இன்றளவும் முதியோர்களால் வயிற்றுப்போக்கிற்குப் பிரதான மருந்துப்பொருளாக இது பயன்படுத்தப்படுகிறது. அது மட்டுமல்லாமல், பேதியால் ஏற்படும் நீர்ச்சத்துக் குறைபாடு, அதனால் ஏற்படும் நா வறட்சி, அதிக தாகம் போன்றவற்றையும் இது தணிக்க வல்லது. சரியான உடல் எடை இல்லாத இரண்டு, மூன்று மாதங்கள் ஆன குழந்தைக்கு ஜாதிக்காயை இழைத்துப் பாலுடன் அல்லது நீருடன் சேர்த்துக்கொடுத்து வந்தால், குழந்தையின் உடல் எடை கூடும் என்பதும் இன்றளவும் கிராமங்களில் இருக்கும் பழக்கம்.

ஜாதிக்காயை தினமும் 1 முதல் 2 கிராம் வரையில் சாப்பிடலாம் என்று ஆய்வு முடிவுகள் அறிவிக்கின்றன. ஒருவேளை, ஜாதிக்காயாக மூன்றும், ஜாதிக்காய் பொடியாக 5 கிராமுக்கு அதிகமாகவும் சாப்பிடும் நிலையில்,மனக்குழப்பம், வாந்தி, வயிற்று உப்புசம், செரிமானமின்மை அல்லது தொடர் வயிற்றுப்போக்கு போன்றவையும் ஏற்படலாம்.

ஜாதிக்காயில், சிறிதளவு போதைத் தன்மையும் இருப்பதால், மூன்று விதைகளுக்கு மேல் சாப்பிடும் நிலையில், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என்பதை உறுதி செய்யும் வகையில், இரண்டு ஜாதிக்காய் முழுவதுமாக சாப்பிட்ட 8 வயது குழந்தையின் இறப்பு ஆய்வு அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல், அதிகளவு எடுத்துக்கொண்ட ஜாதிக்காய், இரத்தத்தில் விஷத்தன்மையை உயர்த்தியதால், 55 வயது முதியவரும் மரணமடைந்த ஆய்வு முடிவு, வரையறுக்கப்பட்ட அளவைவிட அதிகமானால் ஏற்படும் ஆபத்தை நன்கு உணர்த்துகிறது.

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

Alia bhatt beauty tips: நடிகை ஆலியா பட் அழகின் ரகசியம் இதுதான்!

6 Super Cool Facts About The Moon!

SCROLL FOR NEXT