மனித உடலுக்கு பாதங்கள் மிகவும் முக்கியமானவை. நமது முழு உடல் எடையையும் சுமப்பது முதல் சமநிலை, தோரணை மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு ஆகியவற்றின் அடிப்படையில் முழு உடலுக்கும் கால்கள் அடித்தளமாக விளங்குகின்றன. அவற்றின் முக்கியத்துவத்தை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
பாதங்களின் சேவை:
ஆதரவு மற்றும் எடை தாங்கி: ஒட்டுமொத்த உடலின் எடையையும் தாங்கி நிற்கவும், நிற்றல், நடத்தல், ஓடுதல் என உடலின் கட்டமைப்பை ஆதரிக்கவும் தோரணையை பராமரிக்கவும் உதவும் ஒரு நிலையான அமைப்பு பாதங்கள். மனித உடலின் இயக்கத்திற்கு கால்கள் மிகவும் அவசியம். கால்களில் உள்ள எலும்புகள், தசைகள், தசைநார்கள் ஆகியவற்றின் சிக்கலான அமைப்பு உடலின் நெகிழ்வுத் தன்மையையும் இயக்கத்தையும் செயல்பட உதவுகின்றன.
ஷாக் அப்சார்பர்கள்: கால்களில் உள்ள வளைவுகள் மற்றும் மென்மையான திசுக்கள் இயற்கையான ஷாக் அப்சார்பர்களாக செயல்படுகின்றன. நடைப்பயிற்சி அல்லது ஓடும்போது உடலில் குறிப்பாக முதுகெலும்பு மற்றும் மூட்டுகளில் ஏற்படும் தாக்கத்தை குறைக்கிறது. உடலின் ஈர்ப்பு மையத்துடன் செயல்பட்டு, சமநிலையில் உடலை வைத்திருக்க உதவுகின்றன. கால்களின் வளைவுகள் மற்றும் நரம்புகளில் இருந்து வரும் உணர்வுபூர்வமான பின்னூட்டங்கள் நிமிர்ந்து நிற்கவும் அசையாமல் இருக்கவும் உதவுகின்றன.
சுகாதார குறிகாட்டிகள்: கால்களின் நிலை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் குறிகாட்டியாக விளங்குகின்றன. நீரிழிவு அல்லது நரம்பு சேதம் போன்ற பிரச்னைகள் பெரும்பாலும் பாதங்களில்தான் முதலில் வெளிப்படுகின்றன. நீரிழிவு நோயாளிகள் பாதங்களை மிகவும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது முக்கியம். முதியவர்களில் 75 சதவீதம் பேருக்கு கால் பிரச்னை உள்ளது.
பாதங்களை பராமரிக்கும் முறை:
சரியான காலணிகள்: கால்களுக்கு சரியான காலணிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். நிற்பதற்கும், நடப்பதற்கும் ஓடுவதற்கும் கால்கள்தான் முதன்மையான போக்குவரத்துக்கு உதவுகின்றன. எனவே, சரியான காலணிகள் அணிந்து நடக்க வேண்டும். குஷன் வைத்த காலணிகள், கால்களுக்கு பொருத்தமான வகையில் உள்ள காலணிகளை தேர்ந்து செய்ய வேண்டும். இருக்கமான அல்லது தளர்வான காலணிகள் அணிவதை தவிர்க்க வேண்டும். ஜாகிங், மலையேற்றம், நடைப்பயிற்சி போன்றவற்றுக்கு ஏற்ப பொருத்தமான காலணிகள் இருப்பது அவசியம்.
பாத ஆரோக்கியம்:
1. கால்களை தினமும் சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவ வேண்டும். கால் விரல்களுக்கு இடையில் கவனம் செலுத்தி பூஞ்சை தொற்றுகளை தடுக்க இவற்றை நன்கு உலர்த்த வேண்டும்.
2. வறண்ட பாதங்களை தடுக்க நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும். அதில் வெடிப்பு ஏற்பட்டால் மாய்சரைசர் பயன்படுத்த வேண்டும்.
3. கால் விரல் நகங்களையும் அவ்வப்போது வெட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூஞ்சை தொற்றுகளில் இருந்து பாதுகாக்க, அதற்கு ஏற்ப பிரத்தியேகமான வாட்டர் ஷூக்களை அணியலாம்.
4. கால் உறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். தினமும் அவற்றை துவைத்து வெயிலில் உலர்த்தி எடுக்கவும்.
5. கால்களில் ஏதாவது கொப்புளங்கள், வெட்டுக்கள் புண்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக நீரிழிவு நோயாளிகள் இதில் அதிக கவனம் வைக்கவேண்டும்.
6. கால் வலி அல்லது அசௌகர்யம் ஏற்பட்டால் தகுந்த பராமரிப்பு அவசியம்.
7. கால்களுக்கு தேவையான பயிற்சிகளை தர வேண்டும். அப்போதுதான் கால் நெகிழ்வுத்தன்மையோடு இருக்கும்.
8. நீண்ட நேரம் நிற்பதையோ அல்லது உட்காருவதையோ தவிர்க்க வேண்டும். அவ்வப்போது இடைவேளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
9. ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது அவசியம். அதிக எடை கால்களில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது கால் வலி மற்றும் காயம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.