உணவுதான் நம்முடைய ஓட்டு மொத்த ஆரோக்கியத்தின் அடிப்படையாக இருக்கிறது. எனவே நாம் உண்ணும் உணவுகளில் உடலுக்குத் தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களும் இருக்க வேண்டியது அவசியம். அதில் குறிப்பாக பொட்டாசியம் சத்து ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, உடலின் நீர் சமநிலையை சிறப்பாக வைத்திருக்க உதவுகிறது.
நம்மில் பெரும்பாலானவர்கள் இந்த பொட்டாசியம் சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படுகிறார்கள். இதுபற்றிய போதிய விழிப்புணர்வு யாரிடமும் இருப்பதில்லை எனவே இந்த பதிவு மூலமாக பொட்டாசியம் சத்து குறைபாட்டின் அறிகுறிகள் என்ன? அதனால் ஏற்படும் பாதிப்பிலிருந்து எப்படி மீளலாம் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
நமது ஆரோக்கியத்திற்கு தேவைப்படும் பல ஊட்டச்சத்துக்களில் பொட்டாசியம் சத்து மிக முக்கியமானது. இது உடலுக்கு பலத்தை சேர்க்கும் கனிமமாகும். இந்த சத்து நம் உடலில் குறைவதால் உடல் சோர்வு, இதய பிரச்சினை, மன அழுத்தம் போன்ற பல பாதிப்புகள் ஏற்படும். நம் உடலில் பொட்டாசியம் சத்து குறைவதற்கு பல காரணங்கள் உள்ளது. வயிற்றுப்போக்கு, வாந்தி, அதிகமாக வியர்த்தல், உடலில் போலிக் அமிலம் இல்லாதது போன்றவை மிக முக்கிய காரணங்களாகப் பார்க்கப்படுகிறது.
பொட்டாசியம் சத்து குறைவாக இருப்பதன் அறிகுறிகள்:
உடலில் பொட்டாசியம் சத்து குறைவாக இருந்தால் சிலருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இத்துடன் செரிமானம் சரியாக இல்லை என்றால் பொட்டாசியம் குறைந்ததற்கான அறிகுறியாக இருக்கலாம். செரிமான பிரச்சனை மேலும் பல காரணங்களால் வரும் என்பதால் எடுத்த உடனேயே இது பொட்டாசியம் குறைபாடு என நினைக்க வேண்டாம்.
நமது மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க பொட்டாசியம் சத்து முக்கியம். அது குறையும்போது மனச்சோர்வு, குழப்பம், மனநிலை மாற்றங்கள் போன்றவை ஏற்படலாம். இப்படி நீங்கள் அதிகமாக மன அழுத்தம் சார்ந்த பாதிப்புகளை சந்திக்க நேர்ந்தால் இது பொட்டாசியம் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.
அதேபோல தசைகளில் திடீரென பிடிப்பு சுருக்கம் போன்றவை ஏற்பட்டால் ரத்தத்தில் பொட்டாசியம் அளவு குறைவாக இருக்கிறது என அர்த்தம். அத்துடன் கை கால்கள் திடீரென மரத்து போதல் பொட்டாசியம் சத்து குறைபாட்டால் நடக்கிறது.
பொட்டாசியம் சத்து குறைவாக உள்ளவர்கள் என்ன செய்வது?
பொட்டாசியம் சத்து குறைவாக இருப்பதற்கான அறிகுறிகள் உங்களுக்குத் தென்பட்டால், வாழைப்பழம், இளநீர், கீரைகள், அவகாடோ, பூசணி விதைகள் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வது மூலமாக உடலுக்குத் தேவையான பொட்டாசியம் சத்தை நாம் பெற முடியும். குறிப்பாக கீரைகளில் அதிக அளவு பொட்டாசியம் சத்து உள்ளது. எனவே வாரம் இருமுறையாவது உங்களது உணவில் கீரைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் உருளைக்கிழங்கு, பாதாமிலும் பொட்டாசியம் சத்து இருக்கிறது. இவற்றை எடுத்துக் கொள்வதன் மூலமாக உங்களது பொட்டாசியம் சத்து தேவையை பூர்த்தி செய்ய முடியும்.