Are you thirsty at night? 
ஆரோக்கியம்

இரவில் அதிகமா தாகம் எடுக்குதா? போச்சு! 

கிரி கணபதி

இரவில் சிலர் திடீரென தூக்கத்திற்கு நடுவே எழுந்து அதிகப்படியான தண்ணீரை குடிப்பார்கள். பகலில் போதுமான அளவு தண்ணீர் குடித்திருந்தாலும், இரவில் தாகம் எடுப்பது பலருக்கு ஏற்படும் ஒரு அனுபவமாகும். இது வெறும் சாதாரண விஷயமாக இல்லாமல் உடலில் ஏதேனும் பிரச்சனை இருப்பதற்கான ஒரு அறிகுறியாகவும் இருக்கலாம். இந்தப் பதிவில் அதிகமாக இரவில் தாகம் எடுப்பதற்கான பல்வேறு காரணங்கள் குறித்து பார்க்கலாம். 

இரவில் அதிகமாக தாகம் எடுப்பது நீரிழிவு நோயின் ஒரு முக்கிய அறிகுறியாகும். இந்த நோயினால் உடலின் இன்சுலின் குறைபாடு ஏற்பட்டு, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இதனால், சிறுநீரகம் அதிகப்படியான சர்க்கரையை வெளியேற்றும்போது அதிகமாக செயல்பட வேண்டி இருக்கும். இதன் விளைவாக உடல் நீரை இழந்து தாகம் அதிகமாக எடுக்கும். சிறுநீரகம் சரியாக செயல்படாவிட்டாலும் அடிக்கடி சிறுநீர் வெளியேறி இரவில் தாகம் எடுக்கலாம். 

இதயம் சரியாக ரத்தத்தை பம்ப் செய்யாவிட்டால், உடலில் திரவம் தேங்கி இரவில் தாகம் எடுக்கும் பிரச்சனை ஏற்படும். மேலும், சிலருக்கு தைராய்டு, பிட்யூட்டரி போன்ற சுரப்பிகளில் ஏற்படும் கோளாறுகள் இரவில் தாகம் எடுப்பதற்கு காரணமாக அமையும். 

ரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் அதை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தும் சில மருந்துகள் இரவில் சிறுநீர் கழிக்கும் அளவை அதிகரிக்கும். மேலும், வீக்கத்தை குறைக்க பயன்படுத்தும் ஸ்டெராய்டு மருந்துகளும் இரவில் தாக உணர்வுக்கு முக்கிய காரணமாக அமையலாம். 

போதுமான அளவு தூங்காமல் இருப்பதால் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு தாக உணர்வு ஏற்படும். இரவு உணவுக்கு முன் காபி அல்லது ஆல்கஹால் அதிகமாக உட்கொள்வது சிறுநீர் கழிக்கும் அளவை அதிகரித்து, தாகம் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். நீங்கள் அதிகமாக உப்பு உட்கொள்ளும் நபராக இருந்தால் உடலில் அதிகமாக தண்ணீர் சேர்ந்து சிறுநீராக வெளியேறி இரவில் தாக உணர்வை ஏற்படுத்தும். 

வெப்பமான காலநிலையில் அதிகப்படியான நீரிழப்பு, குறைந்த ஈரப்பதம் உள்ள இடத்தில் இருப்பது, தினசரி சரியான அளவு தண்ணீர் குடிக்காமல் போவது போன்றவற்றாலும் இரவு நேரத்தில் தாகம் ஏற்படக்கூடும். 

மேலே குறிப்பிட்ட பல காரணங்கள் இரவில் தாகம் எடுப்பதற்கு முக்கிய காரணியாக இருக்கலாம். எனவே, இரவில் அதிகமாக தாகம் எடுப்பதற்கான காரணத்தை துல்லியமாகக் கண்டறிய ஒரு மருத்துவரை அணுகி தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலமாக உடலில் ஏதேனும் நோய் இருக்கிறதா என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம். 

இரவில் அதிகமாக தாகம் எடுப்பது ஒரு சாதாரண பிரச்சினையாக இருந்தாலும் இதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். எனவே, இந்த பிரச்சனை உங்களுக்கு தொடர்ந்து இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறுவது அவசியம். இத்துடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT