எத்தனை முறை சாப்பிட்டாலும் சிலருக்கு அடிக்கடி பசி எடுத்துக்கொண்டே இருக்கும். அதற்கான காரணம் என்ன? அதற்கு எப்படித் தீர்வு காண்பது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
பழங்கள், காய்கறிகள், முழு தானியங்களால் சமைத்த உணவுகளை உட்கொள்ளாதிருத்தல் அடிக்கடி பசி எடுக்கக் காரணமாகும். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை நிறைய உட்கொண்டால் அவை ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அப்போது நீண்ட நேரம் பசியுணர்வு வராது. எனவே நார்ச்சத்து மிக்க உணவுகளை உண்ணுவது அவசியம்.
சத்து மிக்க புரோட்டீன் உணவுகளை எடுத்துக்கொள்ளாதது அடிக்கடி பசி எடுக்க மற்றொரு காரணம். புரதம் நிறைந்த உணவுகளை உண்ணும்போது அவை அதிக நேரம் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும்; மீண்டும் பசி எடுக்க தாமதமாகும்.
தண்ணீர் தாகம் எடுப்பதை தவறுதலாக பசி என்று எடுத்துக்கொள்ளவும் வாய்ப்புண்டு. எனவே, நாள் முழுவதும் அடிக்கடி தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்துக்கொண்டால் தேவையில்லாத குழப்பம் தீரும்.
ஒரு வேளை உணவை தவிர்ப்பதும் பசி ஏற்படும் அறிகுறி தோன்றுவதில் குழப்பம் உண்டாக்கும். பிறகு தாமதித்து உணவு உண்ணும்போது அதிகமாக சாப்பிட நேரிடும். எனவே, சரியான நேரத்தில் சரிவிகித உணவை எடுத்துக்கொண்டால் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்கலாம்.
சரியான அளவு தூக்கமின்மையும் பசியுணர்வை உண்டாக்கும் ஹார்மோன்களை குழப்பத்தில் ஆழ்த்தும்.
ஆகவே, தினசரி எட்டு மணி நேரத்திற்குக் குறையாமல் தரமான தூக்கத்தை மேற்கொள்ளப் பழகினால் பசி உணர்வை ஒழுங்குபடுத்துவதில் சிரமம் ஏற்படாது.
குழப்பமான மன நிலையும் அதிக கலோரி நிறைந்த ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணத் தூண்டும் பசியை உண்டு பண்ணும். எனவே, உடற்பயிற்சி, மெடிடேஷன் போன்ற ஆரோக்கியமான வழிகளில் ஸ்ட்ரெஸ்ஸை குறைக்க முயல்வது பலன் தரும்.
அவசரம் அவசரமாக அள்ளிப்போட்டுக்கொள்வதும், டெலிவிஷன் போன்றதில் கவனம் செலுத்தியபடி உண்பதும், மூளைக்கு வயிறு நிரம்பிய உணர்வை ரெஜிஸ்டர் பண்ணுவதில் குழப்பம் உண்டுபண்ணும்.
எனவே, உண்ணும் உணவில் கவனம் வைத்து, மெதுவாக, மனநிறைவு உண்டாகும் விதத்தில் உண்பது நல்ல பலனைத் தரும். முறையான தினசரி உடற்பயிற்சி மேற்கொள்ளல் பசியுணர்வை மேனேஜ் பண்ணும் ஹார்மோன்களை ஒழுங்குபடுத்தவும் பசியுணர்வை கட்டுக்குள் வைக்கவும் உதவும். சுறுசுறுப்பானவர்களை விட, சோம்பேறித்தனமாய் இருப்பவர்களுக்கு அடிக்கடி பசி எடுக்கும்.
பதப்படுத்தப்பட்ட கார்போ ஹைட்ரேட்ஸ் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை உண்பது இரத்த சர்க்கரை அளவை உயர்த்தவும் அடிக்கடி பசியுணர்வை உண்டுபண்ணவும் செய்யும். எனவே, முழுமை பெற்ற சரிவிகித உணவை உண்பது குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பசியை உண்டாக்கும்.
மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றுவது ஆரோக்கியமான உணவியல் முறைக்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.