நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது நம் தலையாய கடமைகளில் ஒன்றாகும். இதற்கு நாம் ஊட்டச்சத்து நிறைந்த சரிவிகித உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பதும், இதயத்தை நோய்கள் எதுவும் தாக்காமல் பாதுகாப்பதும் அவசியம். இதன் ஒரு பகுதியாக, ஆயுர்வேத மருத்துவம் பரிந்துரைக்கும் ஏழு வகை பானங்களை அருந்துவது இதயத்துக்கு நன்மை தரும். அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
* ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் குணங்கள் கொண்ட மஞ்சள் தூளை இளஞ்சூடான பாலில் கலந்து அருந்துவது இதயத்துக்கு நன்மை தரும்.
* இஞ்சி டீ அருந்துவது இரத்த ஓட்டம் இரத்த நாளங்களில் சிரமமின்றிப் பாயவும், அதன் மூலம் இதய ஆரோக்கியம் காக்கப்படவும் உதவும்.
* பட்டை (Cinnamon) ஊற வைத்த நீர், இரத்த ஓட்டம் சிறப்பாக நடைபெற உதவும் தனித்துவமான குணம் கொண்டது. இதுவும் இதயத்தின் செயல்பாடுகள் மேன்மையுற்று இயங்கச் செய்யும்.
* பீட்ரூட் ஒரு ஊட்டச்சத்து அதிகமுள்ள காய். இதில் ஜூஸ் செய்து குடிக்கும்போது இதிலுள்ள நைட்ரேட் சத்தானது இரத்த ஓட்டம் சீராகப் பாயவும் இதயம் ஆரோக்கியம் பெறவும் உதவுகிறது.
* நெல்லிக்காய் ஜூஸில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்களும், வைட்டமின் C யும் அடங்கியுள்ளன. இவை இரத்த நாளங்களை தளர்வுறச் செய்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்த வல்லவை.
* அஸ்வகந்தா என்பது ஒரு சிறந்த ஆயுர்வேத மூலிகை. இதில் டீ போட்டு அருந்தும்போது மன அழுத்தம் குறைந்து இரத்த ஓட்டம் மேன்மை அடைகிறது.
* தெய்வீக குணமுடைய புனிதமான மூலிகை துளசி. இதில் டீ செய்து அருந்துவதால் இதயம் மற்றும் இரத்த நாளங்களில் இருக்கும் சிறு சிறு கோளாறுகள் குணமடையும்; இதய ஆரோக்கியம் மேம்படும்.
இவ்விதமான மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளை அவ்வப்போது நாமும் உட்கொண்டு ஆரோக்கியம் நிறைந்த இதயம் பெறுவோம்.