நம் புற அழகைத் தீர்மானிக்கும் உறுப்புகளில் முக்கியமானது பல். பற்களில் கறை ஏற்பட்டால், அது முகப்பொலிவை பாதிக்கும். பற்களில் கறை படிவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. பல் துலக்காததாலும், சாப்பிட்ட பொருள்கள் பற்களில் தேங்குவதாலும் ஏற்படும் பற்களில் மஞ்சள் கறை ஏற்படுகிறது. இக்கறையை எளிய வீட்டு மருத்துவம் மூலமாகவே நீக்கிவிடலாம்.
பல் துலக்கும்போது, எலுமிச்சைச் சாற்றோடு, சிறிது உப்பு சேர்த்து கறைபட்ட இடத்தில் தேய்த்து, வாய் கொப்பளிக்க வேண்டும். நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் திரிபலா சூரணத்தைக் கொண்டு பல் துலக்கினால், மஞ்சள் கறை கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும்.
உமிழ்நீர் அதிகமாகச் சுரப்பதாலும் பற்களில் மஞ்சள் கறை ஏற்படலாம். இதைத் தவிர்க்க, தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். சாப்பிட்டு முடித்ததும், `மவுத் வாஷ்’ பயன்படுத்துவதன் மூலம் கறையைத் தவிர்க்கலாம். தண்ணீரில் உப்பு சேர்த்து வாய் கொப்பளிப்பது, மவுத் வாஷைவிடச் சிறந்தது
நம்மில் பலருக்கு ஈறு பிரச்சனைகள் மற்றும் பல்எலும்பு இழப்பு ஆகியவற்றிலிருந்து தளர்வான பல் பிரச்சனைகள் எழுகின்றன. பற்களில் ஏற்படும் தொற்று பற்களை ஆதரிக்கும் எலும்பு மற்றும் மென்மையான திசுக்களை அழிக்கும் போது இது நிகழ்கிறது. இவற்றிலிருந்து நிவாரணம் பெற சில வீட்டு வைத்தியங்களே போதுமானது.
வாயில் தேங்காயெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் 1 டீஸ்பூன் விட்டு 15 முதல் 20 நிமிடங்கள் வாயில் வைத்து கொப்பளிப்பது நல்லது. இது தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை கொன்று, அசுத்தங்களை அகற்றி வாயை சுத்தமாக வைக்க உதவுகிறது. மேலும் தளர்வான பற்களை வலுவாக்கவும் செய்கிறது.
பல்லில் தொற்று ஏற்பட்டால் சிறுபூண்டினத் தட்டி அந்த இடத்தில் தினமும் சிறிது நேரம் வைத்தால் காலப்போக்கில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் அழிந்து போகும். பல் வலியும் குணமாகும்.
கடுகு எண்ணெய், தேன் இரண்டும் சாத்தியமான நன்மைகளை கொண்ட பாக்டீரியா எதிர்ப்பு முகவர்கள். இந்த இயற்கை பொருள்களின் கலவையானது ஈறுகளை வலுப்படுத்தவும் தளர்வான பற்களை இறுக்கவும் உதவுகின்றன. இது பொதுவாக பாக்டீரியா எதிர்ப்பு பண்பு காரணமாக பற்களின் இடையே ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க உதவுகிறது.
மஞ்சளில் இருக்கும் குர்குமின் எனப்படும் கூறு அழற்சி எதிர்ப்பு, ஆன்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளை கொண்டுள்ளது. அரைத்த மஞ்சளை கொண்டு பற்களை மசாஜ் செய்வது வலி மற்றும் வீக்கத்தை குறைக்க செய்யும். மிளகு வலி நிவாரணி, அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது பாதிக்கப்பட்ட இடத்தில் வலியை அகற்றவும் உதவும்.
பற்கள் மற்றும் எலும்பு ஆரோக்கியத்துக்கு வைட்டமின் டி மற்றும் கால்சியம் அவசியம். இந்த ஊட்டச்சத்து குறைபாடு பல் ஆரோக்கியத்தை மோசமாக்கி தளர்வான மற்றும் ஆட்டம் காணும் பற்களை உண்டாக்கும். கால்சியம் மற்றும் வைட்டமின் டி சப்ளிமெண்ட் எடுத்துகொள்ளும் போது பல் வலிமையை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பற்கள் தளருவதை தடுக்க தினசரி இரண்டு முறை பல் துலக்குவது நல்லது. புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை நிறுத்துவது வேண்டும்.
மருத்துவரின் ஆலோசனைப்படி வைட்டமின் டி மற்றும் கால்சியம் மாத்திரைகளை எடுத்துகொள்ளலாம். பரிந்துரைக்கப்பட்ட அளவை மட்டும் எடுத்துகொள்ள வேண்டும். நம் வாய்வழி சுகாதாரத்தை பராமரிப்பு தரத்தை பற்றி அறிய பல் மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும்.அவர்கள் தேவைப்படும் சிகிச்சையை தருவார்கள்.
விளையாட்டு பயிற்சியில் இருப்பவர்கள் பற்களை பாதுகாக்க மவுத் கார்ட் அணிய வேண்டும். தளர்வான மற்றும் நடுங்கும் பற்களை கையாளும் போது வாய்வழி சுகாதாரத்தை பராமரிப்பது முக்கியம். உணவுக்கு பிறகு பற்களில் இருக்கும் எச்சங்களை வெளியேற்ற மவுத் வாஷ் பயன்படுத்துவது நல்லது.
பல் மருத்துவர்கள் பற்களை சுத்தமாகவும், பாக்டீரியா இல்லாமல் வைத்திருக்கவும் பற்களை ஃப்ளோஸ் ( பல்லுக்கு இடையில் நூல் விட்டு சுத்தம் செய்யும் முறை) செய்ய பரிந்துரைக்கின்றனர். இந்த இயற்கை வைத்தியம் பலனளிக்கவில்லை எனில் மருத்துவரை அணுக வேண்டும்.