Some ways to get rid of dandruff 
ஆரோக்கியம்

ஓயாத தலைப் பொடுகை ஒழித்துக்கட்ட சில இயற்கை ஆரோக்கிய வழிகள்!

கலைமதி சிவகுரு

றண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிரித் தொற்றுகள், மன அழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம், தலையை சுத்தமாக பராமரிக்காமல் போவது போன்றவை தலையில் பொடுகு பிரச்னை உருவாக முக்கிய காரணங்கள் ஆகும்.

மேலும், தலையின் சருமம் அதிகமாக உலர்ந்துபோதல், இறுகிக் காணப்படும் வெள்ளை துகள்கள், அடிக்கடி தலைமுடியை சுத்தமாக பராமரிக்காமல் இருப்பது, ஃபங்கல் தொற்று அல்லது பாக்டீரியா தொற்று ஏற்படுதல், தலைக்குப் பயன்படுத்தும் தவறான ஷாம்பு, எண்ணெய், சாயம், ஹேர் ஸ்ப்ரே மற்றும் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத தயாரிப்புகளை பயன்படுத்துவது போன்றவையும் பொடுகு பிரச்னைக்குக் காரணமாகும்.

பொடுகு தொல்லையை போக்கும் இயற்கை வழிகள்: இயற்கையான மரம், செடிகளிலிருந்து கிடைக்கக் கூடியவை மற்றும் நம் வீட்டு சமையல் அறையில் இருக்கும் பொருட்களும் கூட பொடுகு பிரச்னைக்கு நல்ல தீர்வை தரக்கூடியவை.

1. தேங்காய் எண்ணெய் - எலுமிச்சை சாறு மசாஜ்: எலுமிச்சை சாறு, தேங்காய் எண்ணெய் இரண்டிலும் தலா 2 ஸ்பூன் எடுத்து நன்றாகக் கலந்து கொள்ளவும். இந்த கலவையை தலைமுடியில் மசாஜ் செய்வது போல தேய்த்து 20 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். பிறகு ஷாம்பு தேய்த்து தலையை அலச வேண்டும். தேங்காய் எண்ணெய் முடிக்கு ஊட்டமளிக்கும். எலுமிச்சை சாறு பொடுகு தொல்லையை நீக்கி முடி வளர்ச்சிக்கு உதவும். அதனால் சருமம் ஈரப்பதத்தை சீராக வைத்திருக்கும்.

2. பேக்கிங் சோடா பேக்: ஈரமான தலைமுடியில் சிறிது பேக்கிங் சோடாவைத் தேய்க்கவும். 2 நிமிடங்களுக்கு பிறகு தலையை அலசவும். பேக்கிங் சோடா பொடுகுக்கு மிக சிறந்த நிவாரணி. இது தலையில் உள்ள இறந்த செல்கள் நீங்கவும், பொடுகு தொல்லையிலிருந்து விடுபடவும் உதவும். பேக்கிங் சோடாவை அதிக நேரம் தலையில் வைத்திருந்தால் தலைமுடி வறண்டு விடும்.

3. தயிர் தேய்த்துக் குளித்தல்: தயிரை தலையில் நன்றாகத் தேய்த்துக்கொள்ள வேண்டும். சுமார் அரை மணி நேரம் கழித்து சிறிது ஷாம்பு போட்டு குளிக்கலாம். தயிர் உடல் உஷ்ணத்தை குறைக்கும். முடிக்கு பளபளப்பையும் தரும். சைனஸ், ஒற்றை தலைவலி வரும் பிரச்னை இருப்பவர்கள் இதைத் தவிர்க்கவும்.

4. தேயிலை மர ஆயில்: தேயிலை மரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் பொடுகை உருவாக்கக் கூடிய கிருமிகளை எதிர்த்து போராடிக் கூடியது. கூந்தலுக்கு ஊட்டச்சத்தை அளித்து, முடி உதிர்வையும் தவிர்க்க உதவும். இந்த எண்ணெயை சில துளிகள் எடுத்து தலை முழுக்க தடவி ஐந்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு ஷாம்பு போட்டு குளிக்கலாம்.

5. வெந்தயம்: இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை ஊற வைக்கவும். மறுநாள் அதை அரைத்து விழுதாக்கி தலையில் தேய்த்து அரைமணி நேரம் ஊற வைத்து தலைக்கு குளிக்கவும். இது உடல் உஷ்ணத்தை குறைத்து முடி வளர்ச்சிக்கு உதவும்.

6. சின்ன வெங்காயம்: வெங்காயத்தை அரைத்து தலையில் தடவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு தலைக்கு குளித்தால் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம்

7. வேப்பிலை: கைப்பிடி வேப்பிலையை மையாக அரைத்து தலையில் தேய்த்து ஊற வைத்து 10 நிமிடம் கழித்து குளிக்கவும். இதன் கசப்பு தன்மை தலையிலுள்ள பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளை அழித்து விடும்.

இதில் ஏதாவது ஒரு முறையை பின்பற்றினால் பொடுகு தொல்லையில் இருந்து நிச்சயம் விடுபடலாம். மன அழுத்தம் இருந்தால் முழு பலனைப் பெற முடியாது.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT