உலகெங்கிலும் இருதய பிரச்னையால் ஏற்படும் இறப்புகளில் ஆறில் ஒரு பங்கு பக்கவாதத்துடன் தொடர்புடையது என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. தீவிரமான நீண்ட கால இயலாமைக்கு பக்கவாதம் ஒரு முக்கியமான காரணமாகும். பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகளை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
யாருக்கெல்லாம் பக்கவாத ஆபத்து வரும்?
பொதுவாக, 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பக்கவாத அபாயம் அதிகம் உள்ளது. இருப்பினும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன், அதிக கொழுப்பு மற்றும் புகைப்பிடித்தல் போன்ற உடல்நலப் பிரச்னை உள்ளவர்களுக்கு அதற்கு முன்னரே பக்கவாதம் வரலாம். பெண்களுக்கு ஆண்களை விட அதிகளவு சாத்தியம் உள்ளது.
பக்கவாதத்தின் அறிகுறிகள்: உடலின் ஒரு பக்கத்தில் திடீரென உணர்வின்மை, பேசுவதில் சிக்கல், நாக்கு குளறுவது, திடீர் குழப்பம், பார்வை, நடை சமநிலையின்மை, உடல் உறுப்புகள் ஒருங்கிணைப்பில் சிக்கல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அதுபோன்றவர்களை அழைத்துச் செல்லவும்.
பக்கவாதத்தை தடுப்பதற்கான வழிமுறைகள்:
ஆரோக்கியமான உணவு: போதுமான அளவு நீர் குடிக்க வேண்டும். ஆரோக்கியமான உணவை பராமரிக்க வேண்டும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மெலிந்த புரதங்களை நிறைய உண்ண வேண்டும்.
இரத்த அழுத்தக் கட்டுப்பாடு: இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் உப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். கொழுப்பின் அளவை கட்டுப்படுத்த நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகளை குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். இரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும்.
நீரிழிவு நோயை நிர்வகித்தல்: உணவு, உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். சுகாதார நிபுணர்களின் ஆலோசனையுடன் வழக்கமான பரிசோதனையில் ஈடுபட வேண்டும்.
உடற்பயிற்சி: வாரத்திற்கு குறைந்த பட்சம் 150 நிமிடம் மிதமான ஏரோபிக் செயல்பாடு அல்லது 75 நிமிட தீவிரமான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். இத்துடன் தினமும் நடைப்பயிற்சியும் அவசியம்.
எடை மேலாண்மை: சீரான உணவு மற்றும் உடல் செயல்பாடு மூலம் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க வேண்டும்.
புகைப்பிடித்தல்: புகைப்பிடித்தலை உடனடியாக நிறுத்த வேண்டும். ஏனென்றால், இது பக்கவாதத்தின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது. அதேபோல, செகண்ட் ஸ்மோக்கிங் எனப்படும் புகைப்பிடிப்பவர் அருகில் இருப்பதையும் தவிர்க்க வேண்டும்.
கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு: கொலஸ்ட்ரால் அளவு ஆரோக்கியமான வரம்பிற்குள் இருக்க வேண்டும். அதற்கேற்ற உணவு முறைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மன அழுத்த மேலாண்மை: மன அழுத்தம் இன்றி இருக்க நினைவாற்றல், தியானம், யோகா அல்லது ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் போன்றவை அவசியம். வேலை, வாழ்க்கை சமநிலை மற்றும் ஓய்வு நேர நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். குடும்பத்தில் யாருக்காவது பக்கவாதம் ஏற்பட்டிருந்தால் அதைப் பற்றி மருத்துவரிடம் விவாதிக்கலாம்.
பக்கவாதத்தின் அறிகுறிகளை உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுகவும். இந்த தடுப்பு முறைகளை செயல்படுத்துவது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை கணிசமாகக் குறைக்க உதவும்.